கம்ப ராமாயணம், பெரிய புராணம் எதிர்ப்பு

 கம்ப ராமாயணம், பெரிய புராணம் எதிர்ப்பு
கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்கள் திராவிடர்கள் மீது 'ஆரியர்கள்', வட இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்த வழி செய்வதாகவும், அவை அறிவுக்குப் புறம்பாக இருப்பதாகவும் பெரியாரும் அண்ணாவும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். இவர்களின் கருத்துகளால் ஏராளமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால், நீதிக்கட்சியின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், சைவை, வைணவ மதப் பற்று மிகுந்தவர்கள் இந்த கம்ப ராமாயண - பெரிய புராண எதிர்ப்பால் துணுக்குற்றனர்.
கம்ப ராமாயணம், பெரிய புராணம் என்ற இரண்டு நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று அண்ணா வாதிட்டார். இந்தக் கருத்தை எதிர்த்த தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரோடும் 1943ம் ஆண்டு அண்ணா தனித்தனியாக நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டார்.
இரண்டு தரப்பும் மிகவும் மரியாதையான முறையில் நாகரிகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டன. இந்த விவாதம் 'தீ பரவட்டும்' என்ற பெயரில் நூலாக வெளியாகி பிரபலம் அடைந்தது.
ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் போன்ற சிறு நூல்களை எளிய நடையில் எழுதி அண்ணா வெளியிட்டார்.
கம்ப ராமாயணத்தில் இருக்கும் ஆபாசமான பகுதிகள் என்று தாம் கருதியவற்றை கம்பரசத்தில் விமர்சித்தார் அண்ணா.
இலக்கிய வளத்துக்காக கம்பராமாயணத்தை ஏற்கவேண்டும் என்று வாதிட்டவர்களுக்கு அண்ணா சொன்ன பதில்:
தங்கள் கலைகளும், வாழ்க்கை முறையும் வேறுபட்டது என்று நிரூபிக்க முடிந்ததால்தான் இரண்டே ஆண்டுகளில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்களால் முன்னெடுக்க முடிந்தது. ஆனால், தமிழர்கள் 'ஆரியர்களின்' வாழ்க்கை முறையையும், கலைகளையும் தங்களுடையது என்று ஏற்றுக்கொண்டதால் தன்னாட்சிக்கோ, தன்மானத்துக்கோ அவர்களால் போராட முடியவில்லை. கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் ஆரியர்களின் மேன்மையைப் பேசுகின்றன. தங்களைத் தாங்களே திராவிடர்கள் சிறுமையாக நினைக்கும்படி செய்கின்றன என்று வாதிட்டார் அண்ணா.
இத்தகைய வாதங்கள் கடுமையான இனவாத உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டன.
ஆனால், மொழி நடை, அழகிய சொற்கள் ஆகியவற்றைத் தேடுகிறவர்கள் கம்ப ராமாயணம், திருவாசகம் ஆகியவற்றைப் படிக்கலாம் என்று கூறிய அண்ணா 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்றார். எதிரிகளின் நேர்மறைப் பண்பை ஏற்கவேண்டும் என்று சொல்வதற்கு அண்ணாவின் இந்த வாசகம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,