மலாய் மொழி அகராதியில் இந்தியர்களை அவமதிக்கும் சொற்கள்

 

மலாய் மொழி அகராதியில் இந்தியர்களை அவமதிக்கும் சொற்கள் - மலேசியாவில் சர்ச்சை


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் மலாய் மொழிக் காப்பகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) வெளியிட்டிருக்கும் ஆன்லைன் அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'கெலிங்' என்ற சொல் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சொல் தங்களை அவமானப்படுத்தும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய இந்தியர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சொல்லை அரசு கட்டுப்பாட்டில் உள்ள மலாய் மொழிக் காப்பகம் பயன்படுத்தி இருப்பதை ஏற்க இயலாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், இந்தச் சொற்கள் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது மலாய் மொழிக் காப்பகம்.

மலேசியாவில் மலாய் மொழியின் பயன்பாட்டையும், வளமையையும் உயர்த்த உருவாக்கப்பட்ட அமைப்புதான் மலாய் மொழிக் காப்பகமான 'டேவான் பகாசா டான் புஸ்தாகா'.

அதன் ஏற்பாட்டில் வெளியீடு கண்ட அகராதியில் ஆட்சேபத்துக்குரிய சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் மலேசிய இந்தியர்கள்.

கெலிங்' என்ற சொல் தங்களை அவமானப்படுத்துவதாக மலேசிய இந்தியர்கள் ஏன் கருத வேண்டும்?

'கெலிங்' என்ற சர்ச்சைக்குரிய சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள், விளக்கங்கள் கூறப்படுகின்றன.

இந்தியாவில் ஒரு பகுதியாக விளங்கிய கலிங்கத்தை ஆட்சி செய்தவர்களும், அந்த சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்களும் மலேசியாவில் குடியேறியதாக ஒரு தகவல் உள்ளது. இதற்கான சான்றுகள் பெரிதாக இல்லை என்றாலும் 'கலிங்க' என்பதில் இருந்துதான் 'கெலிங்' என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது," என்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த மூத்த செய்தியாளரான பிதாவுல்லாஹ் கான்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட சிலர் மலாயாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்களது கழுத்திலும் கால்களிலும் சங்கிலி போட்டு பிணைக்கப்பட்டு இருந்தது.

"பினாங்கு தீவில் இறக்கிவிடப்பட்ட அந்த கைதிகள் நடக்கும்போது அந்த சங்கிலிச் சத்தம் 'கிளிங்... கிளிங்...' என்று ஒலித்தது. இதைக் கண்ட உள்ளூர் மக்கள் இந்தியர்களை 'கிளிங்.. கிளிங்..' என்று குறிப்பிடத் தொடங்கினர்.

"பின்னர் நாளடைவில் கறுப்பு நிறத்தவர்களை, குறிப்பாக இந்தியர்களை 'கிளிங்' என்று அடையாளப்பெயர் கொண்டு அழைத்தனர். எனவே, இந்தச் சொல் நிறத்தையும் அடிமைத்தனத்தையும் குறிப்பதற்கான இழிசொல் என்று ஒருதரப்பினர் கருதினர்," என்கிறார் பிதாவுல்லாஹ் கான்.

மேலும், மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இந்திய முஸ்லிம்களால் 1800களில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் 'கேப்டன் கிளிங் பள்ளிவாசல்' என்றுதான் இன்றளவும் அழைக்கப்படுவதாக குறிப்பிடும் அவர், இழிவான சொல்லாக இருந்தால் நிச்சயமாக அந்த பெயரை பள்ளிவாசலுக்கு சூட்டியிருக்க மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

பினாங்கில் மட்டுமல்லாமல், மற்றொரு மாநிலமான மலாக்காவிலும் ஒரு பள்ளி வாசல் 'மஸ்ஜித் கிளிங்' எனக் குறிப்பிடப்படுவதாக அவர் சொல்கிறார்.


மலேசியாவில் மற்ற இனத்தவர்கள் பொதுவாக இந்தியர்களைக் குறிப்பிடும்போது 'கெலிங்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தரக்குறைவான சொல்லை வைத்து இந்தியர்கள் இந்நாட்டில் மட்டம் தட்டப்படுகிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.

நீண்ட காலமாகவே இந்தப் போக்குக்கு எதிராக குமுறி வரும் மலேசிய இந்தியர்கள் இயங்கலை அகராதியில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அரசியல் விமர்சகர் இரா. முத்தரசன்.

இதே அகராதியில் தம்பி (Tambi) என்ற தமிழ் வார்த்தைக்காக அளிக்கப்பட்டிருக்கும் மற்றொரு விளக்கமும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

தம்பி என்றால் "நம்மை விட இளையவர்களை கெலிங் மக்கள் இப்படித்தான் கூப்பிடுவர்" என்பதே இயங்கலை அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

மேலும், தம்பி என்ற சொல்லுக்கு இரண்டாவது விளக்கமாக, ஓர் அலுவலகத்தில் 'ஆபீஸ்' பையனாக பணியாற்றுபவரை, அதாவது 'பியூனை' இப்படித்தான் அழைப்பார்கள் என்ற மற்றொரு விளக்கமும் மலேசிய இந்தியர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதுவும் தவறான விளக்கம் என்கிறார் இரா. முத்தரசன்.

"தமிழில் தம்பி என்பது இளைய சகோதரனைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மற்ற இனத்தவர்கள் தம்பி என்று இளையவர்களை அழைப்பது மரியாதையான சொற்பிரயோகம்தான் என்றாலும் 'தம்பி' என்ற சொல்லே அலுவலக பியூனைத்தான் குறிக்கும் என்பது போல் 'டேவான் பகாசா' விளக்கமளித்திருக்கிறது.

"மேலும் தம்பி என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க முற்படும்போது 'கெலிங்' என்ற தரக் குறைவான வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்திய சமூகத்தில் இவ்வாறு அழைப்பார்கள் என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் 'கெலிங்' என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்?" என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மலேசியாவில் வாழும் எந்த இனத்தவரையும் அவமரியாதையாகச் சுட்டும் சொற்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

எனவே, தாங்கள் வெளியிட்ட அகராதியில் இருந்து சர்ச்சைக்குரிய சொல்லையும் விளக்கங்களையும் மலேசிய மொழிக் காப்பகம் உடனடியாக நீக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே, 'கெலிங்' என்ற வார்த்தை 'தம்பி' என்ற சொல்லின் வரையறையாக குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்படும் என மலேசிய மொழி காப்பகத்தின் இயக்குநர் அபாங் சல்லேஹுடின் அபாங் ஷோகரன் தெரிவித்துள்ளார்.

இயங்கலை அகராதி புதுப்பிக்கப்படும் என்றும், 'கெலிங்' என்ற சொல் மாற்றப்படும் என்றும் அவர் நேற்று அறிவித்திருப்பதாக மலேசிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,