Wednesday, March 24, 2021

இசையால் இசைய வைத்தவர்கள் ./பாட்டால் படிய வைத்தார்கள்

 அமரர் டி.எம்.எஸ். அவர்களின் பிறந்த நாளான இன்று, அவருக்காக (பல வருடங்களுக்கு முன்னர்) என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்கே:-


இன்று பிறந்த நாள் யாருக்கு.........? - எங்கள் டி.எம்.எஸ். அவர்களுக்கு!!!!
அந்த மாமேதைக்கு, இசைச் சக்கரவர்த்தியின் பிறந்த நாளுக்கு என் கவிதாஞ்சலி இது!!!
“உன் நாவசைந்தால் கீதம் – அது
புவியே அசைந்திடும் இனிய நாதம்
நீ பாடாத பாட்டில்லை
பாட்டால் தொடாத பொருளில்லை
தொட்டதால் மெருகேறா
அழகுமில்லை – சுவையுமில்லை"
"காதலைப் பாடினால் இதய ராகம்
தத்துவம் சொன்னால் வாழ்க்கை ரகசியம்
உற்சாகம் தந்தால் சாதிக்கும் வேகம்
பக்தி என்றால் தெய்வ சங்கமம்"
"சொல்ல வார்த்தைகளும் போதாது –உனைப்
பாட எனக்குத் தகுதியும் கிடையாது

"வாழ்த்த எனக்கு வயதில்லை
போற்ற வார்த்தைகளும் இல்லை
நூறாண்டு வாழ வேண்டும் – வரும்
தலைமுறைகளும் போற்ற வேண்டும்"
(இப்படி இறுமாந்திருந்த என்னை, கள்வனைப் போல் வந்த காலன் எங்களிடமிருந்து பிரித்துக் கவர்ந்த கொடுமை என்ன சொல்ல?)
"நீ ஒரு சகாப்தம்தான் – அதில்
இல்லை இனி சந்தேகம்தான்
இசையும் தமிழும் உன் மூச்சு
நீ அவற்றின் உயிர் மூச்சு”
நான் அவர் பாடல்களைக் கேட்டு வளரவில்லை. அவற்றை சுவாசித்தே வளர்ந்தவன்.
ஒரு தந்தையாக, அண்ணனாக, நண்பனாக, ஆசானாக எனக்குள் இசை வளர்த்து மெருகூட்டிய மாபெரும் இசை மேதை அவர்.
இன்று அவர் இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை அவர் பாடல்கள் வாழும். அவருக்கு என் ஆத்மார்த்த அஞ்சலியும் பாத வணக்கமும்.

இசை மாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு தினம் இன்று.
"பக்திப் பாடலா, கூப்பிடு சீர்காழியை" என்ற ஒரு காலம் இருந்தது தமிழ்த் திரையுலகிலும், இசையுலகிலும். அது எங்களின் இளமைக் காலம், ஒரு பொற்காலம்.
ஆனாலும் பல்சுவைப் பாடல்களையும் தனது கணீர்க் குரலால் பாடி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் அமரர் சீர்காழி என்றால் அது மிகையாகாது. காதல், தத்துவம், சோகம், நகைச்சுவை உட்பட அனைத்து இசை நயங்களிலும் கைதேர்ந்த பாடகர் அவர்.
அவரின் பக்திப் பாடல்களை இங்கே வரிசைப் படுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்துமே பக்தி ரசம் சொட்டுபவை.
காதல் பாடல்களிலே நான் மிகச் சிறியவனாக இருந்த காலத்திலேயே அவர் பாடிய பல பாடல்கள் என்னைக் கவர்ந்தவை.
"நிலவோடு வான் முகில் விளையாடுதே"
"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்"
"வெண் பளிங்கு மேடையிட்டு"
"எல்லையில்லாத இன்பத்திலே" என பல பாடல்களைக் குறிப்பிடலாம்.
"காதலிக்க நேரமில்லை", "காசிக்குப் போகும் சந்நியாசி", "மாமியாளுக்கு ஒரு சேதி" இப்படிப் பல பாடல்கள் அவரின் நகைச்சுவை ரசனைக்கு சான்று பகர்பவை.
அவரின் தத்துவப் பாடல்கள் சிந்திக்க வைப்பது மட்டுமல்லாமல் நெஞ்சைப் பிழியும் உருக்கம் கொண்டவை கூட. என் சிறிய வயதிலே வெளிவந்த "சமரசம் உலாவும் இடமே", "பகவானே மௌனம் ஏனோ", போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை. "ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே" பாடல் (இசை மெல்லிசை மன்னர்கள்) உருக வைக்கும்.
என் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டு, கவியரசுவால் எனக்காகவே எழுதப்பட்ட வரிகளோ என நான் திகைத்து, இன்றளவும் கேட்கும் போதெல்லாம் என்னைக் கலங்க வைக்கும் மறக்க முடியாத பாடலைப் பாடியவரும் சீர்காழி அவர்கள்தான்.
"இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலைமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து
கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது"
"நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே
நடப்பதுதான் எத்தனையோ"
இப்படிப் பாடல்கள் பலவற்றை நமக்குத் தந்து, நம்மைக் கவர்ந்த, ஒரு நல்ல மனிதரான அமரர் சீர்காழியின் நினைவு நாளிலே, அவருக்கு ஆத்மார்த்த அஞ்சலியும். பாத வணக்கமும்.


லோகநாதன் (கொழும்பு ,)ஸ்ரீ)லங்காNo comments:

Featured Post

 ஐந்து வகை இணையதள மோசடிகள்ஒரு பார்வை 👇👇 ✍️✍️நாளுக்கு நாள் இணையத்தில் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எச்சரிக்கையாக இருந்தால் மட்டு...