திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரளா அரசு அனுமதி

 

திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரளா அரசு அனுமதி - 
திருச்சூர்: கேரளா மாநிலத்தில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், பூரம் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. மலையாளத்தில் மேடம் மாதத்தில் பூர நட்சத்திர நாளில் இந்த திருவிழா வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

திருச்சூர் பூரம் திருவிழா இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைககள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே துவங்கிவிடும். பூரம் விழாவில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வாண வேடிக்கை போன்றவற்றை கண்டுகளிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த விழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தாண்டும் இந்த விழா நடத்தப்பட மாட்டாது என முதலில் கூறப்பட்டது. ஆனால், பூரம் விழாவை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில், கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி திருச்சூரில் பூரம் விழா நடைபெற உள்ளது. திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமாக வடக்குநாதர் கோயில் வளாகத்தில் செண்டைவாத்யம் நடைபெறும். செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வடக்கும்நாதர் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும். தீபாவளி பண்டிகையை மிஞ்சும் வகையில் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,