எழுத்தாளர் விக்கிரமன்
எழுத்தாளர் விக்கிரமன் பிறந்த நாள் இன்று மார்ச் 19
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர் விக்கிரமன். முதலில் வேம்பு என எழுதத் தொடங்கி பின் விக்கிரமன் ஆனார். தனது 13-ஆம் வயதில் எழுதத் தொடங்கிய அவரை எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் என்றே சொல்லலாம்.
“எழுத்தாளர் சங்கம் நிறுவிய பிதாமகர்’ என்றே இவரை வர்ணிக்கலாம். தம் வாழ்நாளை எழுத்தாளர்களுக்கென்றே அர்ப்பணித்தவர். இவரால் பல எழுத்தாளர்கள் புகழ் பெற்றதையும் வளம் பெற்றதையும் மறுக்க முடியாது.
இவரது படைப்புகளில் சமுதாயப் பிரச்சினைகளும் அரசியல் பிரச்சினைகளும் கலந்து இழையோடின. அச்சகப் பணிகள், பதிப்பகப் பணிகள் எல்லாம் இவருக்கு கைவரப் பெற்ற கலையாக இருக்கின்றன.
“கல்கிக்குப் பிறகு வரலாற்று நாவல்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்’ என பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் “முத்தமிழ் அன்பர்’ எனப் பாராட்டப் பெற்றவர்.
விக்கிரமனின் எழுத்துலக வாழ்க்கை மிக எளிமையாகத் தொடங்கியது தான் என்றாலும், அவர் ஒரு கவிஞராக- கட்டுரையாசிரியராக- சிறுகதை எழுத்தாளராக- சரித்திர நூலாசிரியராக- இதழாசிரியராக- எழுத்தின் எல்லா பரிமாணங்களும் பளிச்சிடும் வண்ணம் திகழ்கிறார். சத்திய ஆவேசம் அவரது எழுத்தாய்ப் பிரதிபலித்தது. 30 வரலாற்றுப் புதினங்கள், ஆறு சமூக நாவல்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள், இளைஞர்களுக்கான வரலாற்று நூல் இரண்டு, மூன்று பயண நூல் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம், நாடகம், கவிதை, கட்டுரை, வரலாற்றுப் புதினம் என பலதிறப் படைப்பாளி இவர்.
மேலும் “தமிழ் நாட்டில் தெலுங்கு மன்னர்கள்’ என்னும் நூல் மூலம் ஆங்கிலத்திலும் தடம் பதித்தவர்.
இவரது படைப்புகளை ஆய்வுக்காக இன்றும் பலர் ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments