தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (4)

 தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி  தொடர் பகுதி (4)







நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கதெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா?


இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர். 


நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக்காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.


தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.


நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,  


தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’ 

பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.


நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம். 


அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகிஉருகி விசாரிப்பது தெரிய வரும்.


திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது. 


அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள். 


அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு


படத்தில் ஆழ்ந்துபார்த்தால், நலந்தானா பாடலில் நாதஸ்வரம், நாட்டியம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு காதலுக்காக உருகும் காதலர்களின் நடிப்பே அதிகம் தெரியவரும்.


நாட்டியமாடியபடியே ’’என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நான் அறியேன்’’ என்று பாடி ‘’புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண்பட்ட பாட்டை யார் அறிவார்?’’ என்று மார்பில் லேசா அடித்துக்கொண்டே கைகளை நெற்றியில் கொண்டுபோய்வைத்து தலையை கவிழ்த்து துயரத்தை பத்மினி வெளிப்படுத்துவார்.  

அதைக்காணும் தவில்வித்வான் டிஎஸ் பாலையா, பக்கத்தில் வாசிக்கும் சிவாஜியின் தொடையை லேசாக தட்டி, ‘’எப்படிப்பட்ட பாசக்கார பெண் உனக்கு காதலியா கிடைச்சு உருகு உருகுன்னு உருகராய்யா. உண்மையிலேயே நீ கொடுத்துவச்சவன்யா’’ என்று சொல்லாமல் சொல்வார்.


விவேகானந்தன்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,