நாகூர் ஹனிபா
நாகூர் ஹனிபா நினைவு நாள் இன்று
நாகூர் ஹனிபா: இஸ்லாமிய இசை ஞாயிறு
By எச்.பீர்முஹம்மது
இசை பற்றிய ஒவ்வாமை ஒரு பிரிவு இஸ்லாமியர்களிடத்தில் இன்றும் இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ் முஸ்லிம் உலகம் இசைக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வந்திருக்கிறது என்ற வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம். கர்னாடக சங்கீத மரபு கோலோச்சிய இருபதாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களிடையே அதன் தாக்கம் காரணமாகப் பல இசைக் கலைஞர்கள் உருவானார்கள். இதற்கு முன்பு இசைக் கருவிகள் அறிமுகமாகாத காலகட்டத்தில் தமிழ் சித்த மரபின் தாக்கம் கொண்ட சூஃபிகளின் பாடல்கள் புகழ்பெற்று விளங்கின. அவ்வகையில் தக்கலை பீரப்பா, குணங்குடி மஸ்தான், குலாம் காதிரு நாவலர், செய்கு தம்பி பாவலர் போன்றோரின் ஆன்மிகப் பாடல்கள் புகழ்பெற்றவை.
ஆதிக்கம் செலுத்திய குரல்
கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி ஆகியவற்றின் கலவையால் உருவானது இருபதாம் நூற்றாண்டு தமிழ் இஸ்லாமிய இசை மரபு. அப்படியான பாடல்களில் ஆன்மிகமும், சமூகத் தன்மையும் விரவி இருந்தன. அவ்வகையில் இசைமணி யூசுப், உசைன் பாகவதர், வாஹித், காரைக்கால் தாவூத் போன்ற பலர் கர்னாடக சங்கீத மரபில் இஸ்லாமிய இசையை உருவாக்கினார்கள். இவர்கள் எல்லோருமே அடிப்படையில் கர்னாடக சங்கீதம் கற்றவர்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு கர்னாடக சங்கீதம் கற்காத தமிழ்ப் பாடகராக உருவானவர் நாகூர் ஹனீபா. சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ் இஸ்லாமிய உலகின் இசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் ஹனீபா எனலாம்.
நாகூர் ஹனீபா தான் பாட வந்த 15 வயதில் திராவிட அரசியலின் தாக்கம் காரணமாகப் பெரியாருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு அவரை அரசியல் மேடைகளில் பாட வைத்தது. திருவாரூர் ஓடம்போக்கி நதிக்கரை அன்றைய காலகட்டத்தில் நாகூர் ஹனீபாவின் இளமைக் குரலால் சலனமுற்றது. அந்தச் சலனம் கணிசமான இசை ரசிகர்களை அவருக்கு அளித்தது. ஹனீபாவின் தொடர்ச்சியான அரசியல் இசைப்பயணம் அண்ணா 1949-ல் தி.மு.க.வைத் தோற்றுவித்தபோது அவருடன் இணைய வைத்தது. தொடர்ந்து எல்லா தி.மு.க. மாநாடுகளிலும், மேடைகளிலும் இவரின் பாடல்கள் ஒலிக்கத் தவறியதில்லை. ஆரம்பகால தி.மு.க.வைத் தன் பாடல்களால் வளர்த்தவர் நாகூர் ஹனீபா. அன்றைய காங்கிரஸ் அரசுகூட இவரின் பாடல்களால் நடுங்கியது உண்மை. ‘ஓடிவருகிறான் உதயசூரியன்’, ‘அழைக்கிறார் அண்ணா’ போன்ற பாடல்கள் அன்றைய வெகுஜன இசை உளவியலில் அதிக தாக்கம் செலுத்தின.
திரையிசையில் ஹனிபா
ஹனீபாவின் ஆன்மிகப் பாடல்கள் மதம் என்ற எல்லையைத் தாண்டி எல்லோராலும் பாராட்டப்பட்டன. குறிப்பாக ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல் பகுத்தறிவாளர்களின் காதுகளில்கூட ஊடுருவின.
திரைப்படங்களில் நாகூர் ஹனீபாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் அவரின் ஆரம்பகால மற்றும் பிந்தைய காலத் திரைப்பாடல்கள் புகழ்பெற்றவை. பாவமன்னிப்பு (1965) படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடல் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது. பின்னர் சிறிது இடைவெளிக்குப் பின்னர் ‘செம்பருத்தி’ படத்தில் ‘நட்ட நடுக் கடல் மீது நான் பாடும் பாட்டு’, தர்மசீலன் படத்தில் ‘எங்குமுள்ள அல்லா பேர சொல்லு நல்லா’, ராமன் அப்துல்லா படத்தில் ‘உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்’ போன்ற மத நல்லிணக்கப் பாடல்கள் அவருக்குத் தமிழ்க் கலை உலகில் பெரும் அங்கீகாரத்தை வழங்கின.
இசையின் தேக்கம்
நாகூர் ஹனீபா பாடுவதை நிறுத்திய கடந்த பத்தாண்டுகளில் முஸ்லிம் இசை மரபு மிகுந்த தேக்கம் அடைந்திருக்கிறது. அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் வேரூன்றிய வஹ்ஹாபிய இயக்கங்கள் இசையை இஸ்லாமுக்கு விரோதமான ஒன்றாகப் பிரகடனம் செய்து, அதனை முற்றாக அழித்தொழிக்கும் வேலையைச் செய்தன. இதன் தொடர்ச்சியே தற்போதைய தேக்க நிலைக்குக் காரணம். இஸ்லாமிய வாய்மொழிப் பாடல்கள், கதைப் பாடல்கள், நாட்டார் இசை மரபு போன்ற அனைத்துமே காணாமல் போய்விட்டன. இன்றைய சூழலில் நலிந்துவிட்ட இஸ்லாமிய இசை மரபை மீட்டெடுப்பது அவசியம். அதுவே ஹனீபாவின் மரணம் விட்டு சென்றிருக்கும் தார்மீகப் பணி.
எச். பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peer1@gmail.com
நன்றி: இந்து தமிழ் திசை
Comments