எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாள் இன்று ஏப்ரல் 8
“எனக்கு எப்போதுமே இந்தக் கருத்தரங்கு, செமினார், கான்ஃபரன்ஸ், மீட்டிங்..............இவைகள் மீதெல்லாம் நம்பிக்கையும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இவைகளில் கலந்துகொள்வதிலோ பங்குபெறுவதிலோ எனக்கு உடன்பாடோ விருப்பமோ கிடையாது. இம்மாதிரி கருத்தரங்குகளில் உட்கார்ந்துகொண்டு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று பொழுது போக்குவதைக் காட்டிலும் தெருவிலே போகின்ற ஒருவனை நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் சந்தோஷமும் அதிகம். பயனும் அதிகம்.”
இவரிடம் யார் போய் நேரில் உட்கார்ந்து பேசினாலும், அப்படியே வாயடைத்துபோய், அவர் சொல்வதை மட்டுமே கேட்க தோன்றுமாம் - தேரில் அமர்ந்திருக்கும் அர்ஜூனன் போல. அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் காற்றிலே பறக்க விட்டு விடாமல் யாராக இருந்தாலும் அதனை அப்படியே பிடித்து தன்னுள் நிறுத்திக் கொள்வார்கள். அச்சமயத்தில் தலைப்பு, குறிப்புகள், துவக்கவுரை, முடிவுரை, பேனா , பென்சில், காகிதம் இன்றி அனல் பறக்கும் விவாதம் நடக்குமாம். பின்னர் கட்டிடமே அதிர்ந்து போகும் வகையில் அட்டகாசமான சிரிப்பு வெடிக்குமாம். ஒவ்வொருமுறை அவரிடம் பேசும்போதெல்லாம், ஏதோ ஒரு ஆய்வரங்கம், கருத்தரங்கத்திற்கு வந்து போகும் உணர்வு ஏற்படுமாம்.
ஜெயகாந்தனிடம் இரண்டு முக்கிய குணங்கள் பெரும்பாலானோரை கவர்ந்திருக்கிறது. ஒன்று, ஒருவர் இல்லாதபோது அவரை பற்றி புறங்கூறுவதோ, கோள் சொல்வதோ கூடாது என்பது. ஒருவர் இல்லாதபோது மற்றொருவர் புறங்கூற முற்பட்டால், அவரை மேற்கொண்டு ஜெயகாந்தன் பேசவிட மாட்டார். 'ஓ.... அவரா? அவர் இப்போ இங்க இல்லையே? அவர் வந்துடட்டுமே, அப்போ பேசலாமே' என்பார். துவேஷம் பரப்புவது என்பது அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாததாக இருந்திருக்கிறது. மற்றொன்று நல்ல அம்சம், தம்மோடு இருப்பவர் யாராக இருந்தாலும் பொறாமை இல்லாமல் மனதார வாழ்த்தும் மனப்பக்குவம் உடையவர்.
நன்றி;ஒன் இந்தியா தமிழ்
Comments