அண்ணல் அம்பேத்கரின் ஆளுமைத் திறன்

 அண்ணல் அம்பேத்கரின் ஆளுமைத் திறன்ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களுக்கும் அவமானங்களுக்கும் வடிவம் கொடுத்து ஏகப்பிரதிநிதியாய் எழுந்து நின்றவர், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர். கோரேகானில் அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது, முடிவெட்டிக் கொள்வதற்காக ஒரு நாவிதரிடம் செல்கிறார். அந்த நாவிதர் அம்பேத்கருக்கு முடிவெட்ட மறுத்ததோடு, ""நான் எருமை மாட்டிற்கு முடிவெட்டினாலும் வெட்டுவேனே தவிர, உன்னைப் போன்ற "மகர்' இனத்தைச் சேர்ந்தவனுக்கு வெட்டமாட்டேன்'' எனக் கடிந்துரைத்தும் அனுப்பினார். அதற்காக ஆத்திரமும் ஆவேசமும் கொள்ள வேண்டிய அம்பேத்கர், அதற்குத் தீர்வு காண "தன்னைத் தலையாகச் செய்வதே தக்கது' என முடிவெடுத்தார்.
"ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு தத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். தத்துவம் என்பது தன்னை அளந்தறிவதற்கான ஓர் அளவுகோலாகும்' என்பது தொடக்கத்தில் அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும்.
தன்னைத் தலையானவனாகச் செய்வது எனும் ஆயத்தத்தில் அடியெடுத்து வைத்த அம்பேத்கர், 1907- ஆம் ஆண்டு கோரேகான் வட்டாரத்திலுள்ள எல்பின்ஸ்டன் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் மாணவனாக வென்று காட்டினார். அதற்காக புகழ்பெற்ற சமத்துவவாதி எஸ்.கே. போலே தலைமையில் அவருக்கு பாராட்டுக் கூட்டம் நிகழ்ந்தது. பின்னர் பரோடா மன்னர் சாயாஜிராவ் கெயிக்வாட் அளித்த உதவித் தொகையால், எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து 1912-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டமும் பெற்றார். தொடர்ந்து பரோடா மன்னரின் கருணையால், அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915-ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டமும் பெற்றார். மேலும், "இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்' எனும் ஆராய்ச்சிக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, அங்கேயே "டாக்டர்' பட்டமும் பெற்றார்.
இந்தியாவிற்குத் திரும்பிய டாக்டர் அம்பேத்கர் "சிடென்காம்' கல்லூரியில் (மும்பை) பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியபோது, கோலாப்பூர் மன்னர் சாகு மகராஜின் நட்பு கிடைத்தது. அவர் அளித்த உதவியைப் பெற்று இலண்டன் சென்ற அம்பேத்கர் "கிரேஸ் இன்' கல்லூரியில் சேர்ந்து, "பாரிஸ்டர்' பட்டமும் பெற்றார். பாரிஸ்டர் அம்பேத்கர் இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு, "ரூபாயின் சிக்கல்' எனுந் தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை அளித்தார். அதில் இருந்த புரட்சிகரமான சிந்தனைகளைப் படித்த சட்டவியல் வல்லுநர் ஹெரால்டு ஜெ. லாஸ்கி, அம்பேத்கரை வெகுவாகப் பாராட்டினார். அதனை மதிப்பிட்ட இலண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு டி.எஸ்ஸி பட்டத்தை வழங்கியது. அம்பேத்கர் தம்முடைய ஆளுமைத் திறத்தினால், உயர் கல்வியிலுள்ள அனைத்துப் பட்டங்களையும் பெற்றார்.
1928 - 1929 ஆம் ஆண்டுகளில் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தது. அப்போது சைமன் கமிஷனோடு ஒத்துழைப்பதற்கு பிரிட்டிஷ் - இந்தியா ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தது. அந்தக் குழுவில் இடம்பெற மும்பை சட்டமன்றம், டாக்டர் அம்பேத்கரை தேர்வு செய்து அனுப்பியது. அக்குழுவில் பங்கேற்ற அம்பேத்கரின் ஆளுமை பளிச்சென வெளிப்பட்டது.
புறக்கணிக்கப்பட்டவர்களின் ஈடேற்றத்திற்காகப் பத்துக் கோரிக்கைகளை வைத்த அவர், முத்தாய்ப்பாக முழங்கிய சிந்தனை நிமிர்ந்து நிற்கிறது. "பொது தேசிய உணர்ச்சியை நாட்டு மக்களிடையே உருவாக்க வேண்டும். இனம், மொழி உணர்வை வளர்க்கக்கூடாது. முதலிலும் இந்தியர்கள், முடிவிலும் இந்தியர்கள் என்ற கொள்கையை ஏற்க வேண்டும். இந்தியா ஒன்றாக ஐக்கியப்பட்டிருக்கும் காலத்தை, நான் எதிர்பார்க்கிறேன்; அதையே நான் விரும்புகிறேன்' என்று அவர் செய்த முழக்கம், அவருடைய ஆளுமையின் கூர்மையை வெளிப்படுத்துகின்றது.
வட்ட மேசை மாநாட்டுக்காக அழைக்கப்பட்ட 89 பிரதிநிதிகளில், உயர்கல்வியின் உச்சத்தைத் தொட்டவர், பாபாசாகேப் அம்பேத்கர் ஒருவரே! புறக்கணிக்கப்பட்ட சமூகத்திலிருந்து அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர். வட்டமேசை மாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உரத்த சிந்தனைகளைக் காரசாரமாக மொழிந்தார் என்றாலும், இந்திய விடுதலைக்கு அவர் ஒரு போர்வீரனாகவே இருந்தார். "இந்தியா பொறுப்புள்ள அரசாங்கத்தைப் பெற்றாக வேண்டும் என்றால், அந்த அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றால், வயது வந்த அனைத்துச் சாதியினருக்கும், அனைத்துச் சமூகத்திற்கும் வாக்குரிமையைத் தருவதைத் தவிர வேறு வழியில்லை' என உறுதியாக வாதாடியவர், பாரிஸ்டர் அம்பேத்கர்.
அண்ணல் அம்பேத்கரின் பேச்சைச் செவிமடுத்த இலண்டன் "ஸ்பெக்டேட்டர்' பத்திரிகை, "அம்பேத்கர் சிறந்த தேசியவாதி; இந்தியாவின் புரட்சிகரத் தலைவர்களுள் இவர் ஒருவர்' என எழுதியது. அதுபோலவே, "தி இண்டியன் டெய்லி மெயில்' நாளேடு, "வட்டமேசை மாநாட்டு உரைகளில் டாக்டர் அம்பேத்கரின் உரை மிகச் சிறந்த உரையாக அமைந்திருந்தது. டாக்டர் அம்பேத்கர் ஒரு நாட்டுப்பற்றாளர்; இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள்' என்று எழுதியது.
எரவாடா சிறையில் மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தபோது, பாரிஸ்டர் அம்பேத்கர் புணே ஒப்பந்தத்தின் பொருட்டு அவரை சந்தித்தார். அப்போது காந்திஜி, "எனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து வட்டமேசை மாநாட்டில் நீங்கள் நடந்து கொண்ட விதம், நீங்கள் மிகச் சிறந்த தேசபக்தர் என்பதைப் புலனாக்கிவிட்டது' என வியந்து பாராட்டினார்.
பாபா சாஹேப் அம்பேத்கரின் ஆளுமை, சிகரமாக வெளிப்பட்டது புணே ஒப்பந்தத்தில்தான்! வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களுக்குத் தேர்தலில் தனித்தொகுதிகள் வேண்டும் என்று வாதிட்டார். பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல ஆங்கிலேயர், "தனித்தொகுதியை தலித் மக்களுக்கு வழங்குவதோடு, சீக்கிய, இஸ்லாமிய, இந்திய கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கும் வழங்கலாம்' என அறிவித்தனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை எண்ணி, மகாத்மா காந்தியடிகள் எரவாடா சிறையில், "என் உயிர் இருக்கின்ற வரையில் தனித்தொகுதிக்கு இசையமாட்டேன்' என்று, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஏற்கெனவே சிறைவாசத்தால் பலவீனப்பட்டிருந்த காந்தியடிகளின் உடல்நிலை, உண்ணாவிரதம் தொடங்கிய நான்காவது நாள் கவலைக்கிடமாயிற்று.
இந்திய பத்திரிகைகளும் மக்களும் டாக்டர் அம்பேத்கரை "தேசத்துரோகி' என்றும், "பிரிட்டிஷாரின் கைக்கூலி' என்றும் தூற்றத் தொடங்கினர். தலித் மக்களும் சொல்லொணா இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர். மகாத்மாவின் உயிர் கவலைக்கிடமானதை எண்ணி தேசத்தலைவர்கள் எரவாடா சிறைச்சாலைக்கு விரைந்தனர். அம்பேத்கர், எரவாடா சிறைச்சாலைக்கு வந்துவிட்டார். எரவாடா சிறைச்சாலையின் வெளிப்புற மரத்தடியில் கட்டிலில் காந்தியடிகள் படுத்திருந்தார். காந்தியின் புதல்வர் தேவதாஸ் காந்தி, அம்பேத்கரின் கையைப் பிடித்துக்கொண்டு, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றும்படி வேண்டினார். அம்பேத்கரும் மகாத்மாவின் உடலைப் பார்த்து வாய்விட்டு அழுதார்.
பலவித வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு 10 விழுக்காடு தொகுதிகள் தலித் மக்களுக்கு என்று ஒரு முடிவு ஏற்பட்டது. "இந்தப் பத்து விழுக்காடு தொகுதிகள் என்பது 25 ஆண்டுகள் நீடிக்கவேண்டும்' என்று அம்பேத்கர் வாதிட்டார். காந்தியடிகள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே தொடரமுடியும் என்றார். காந்தியடிகள் உயிர் அம்பேத்கர் கையில் ஊசலாடுவதை, மற்றவர்களைக் காட்டிலும், அம்பேத்கர் நன்றாகவே அறிந்திருந்தார். காந்தியடிகள் உயிருக்கு ஓர் ஆபத்து என்றால், அதனால் பாதிக்கப்படப் போவது தானும், தன் இனமுமே என்பதை, அம்பேத்கரின் ஆளுமை துல்லியமாகக் கணக்கிட்டது. அதனால், 10 விழுக்காடு ஒதுக்கீடு என்பது, 5 ஆண்டா, 25 ஆண்டா என்பதை மறந்துவிட்டு, அம்பேத்கர் புணே ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாரானார். மகாத்மா காந்தியடிகளும் ஆண்டுக் கணக்கை மறந்துவிட்டு செப்டம்பர் 24, சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புனே ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
அனைத்திற்கும் மேலாக, அண்ணல் அம்பேத்கரின் ஆளுமை நூற்றுக்கு நூறு வெளிப்பட்டது, அவர் வரைந்து கொடுத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான். 29.8.1947 அன்று வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்த நாட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தை வரைவதற்காக பல நாட்டு அரசமைப்புச் சட்ட வரைவுகளையும் படித்தார். என்றாலும், பிரிட்டனின் அரசமைப்பையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார். அங்கு மகாராணிக்குரிய முக்கியத்துவத்தை நம் நாட்டுக் குடியரசுத் தலைவருக்கு வழங்கினார். இரண்டரை ஆண்டுகள், பதினொரு மாதங்கள், பதினேழு நாட்களில் தம் பணியைச் செவ்வனே முடித்து, அரசியல் நிர்ணய சபைமுன் சமர்ப்பித்தார். அரசியல் நிர்ணய சபையிலிருந்த ஜாம்பவான்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், பாரிஸ்டர் அம்பேத்கர் ஆணித்தரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் அளித்த பதில்களைஅனைவரும் வியந்து பாராட்டினர்.
"இந்த அரசமைப்புச் சாசனத்தை வரைந்து கொடுத்த அம்பேத்கரை நான் ஒரு தற்கால மனுவாகவே பார்க்கிறேன்' என சேத் கோவிந்த தாஸ் புகழ்ந்துரைத்தார். நீதியரசர் எம். அனந்தசயனம், "டாக்டர் அம்பேத்கர் பார்வையாளராக வந்தவர்தாம். ஆனால், இந்தச் சாசனத்தை உருவாக்குவதில், அவர் தலைமைப் பாத்திரம் ஏற்றிருக்கிறார்' எனப் பாராட்டினார். "இந்த அரசமைப்புச் சாசனத்தை வரைந்து கொடுத்த எனது நண்பர் டாக்டர் அம்பேத்கரின் செயல் திறமையை நான் பாராட்டாவிட்டால், என் கடமையிலிருந்து நான் தவறியவன் ஆவேன். அம்பேத்கர் தம் வாழ்க்கை முழுவதையும் இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்தவர். இரவு பகல் பாராது உழைத்த அம்பேத்கரை நேரடியாகப் பார்த்தவன் நான். அவரைவிட சிறப்பாக எவரும் இங்கு மதிக்கப்படுவதில்லை; நேசிக்கப்படுவதில்லை' என நீதியரசர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் பாராட்டி மகிழ்ந்தார்.
சில தேசங்கள் தலைவர்களைப் பெற்றிருக்கின்றன. ஆனால், அவர்களிடம் ஆளுமை இல்லை; ஆளுமை கைவரப்பெற்ற தலைவர்களுக்கு தேசங்கள் கிடைப்பதில்லை. ஆனால், இந்தியா ஆளுமையும், தலைமையும் பெற்ற ஒருவரை அம்பேத்கர் வடிவில் தந்திருக்கிறது.
இன்று (ஏப். 14) அண்ணல் அம்பேத்கரின் 131-ஆவது பிறந்தநாள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
நன்றி: தினமணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,