சித்திரை சிறப்பு முக்கனிப் பாயசம்!(தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மலர் 2021)

 சித்திரை சிறப்பு







 முக்கனிப் பாயசம்!


கனிகளில் முக்கியமானவை  மா, பலா, வாழையில் முக்கனி பாயசம்

 தமிழ்ப்புத்தாண்டில் செய்து பூஜை செய்யுங்கள்.


 தேவையானவை:-


மாம்பழம் - 1 தோல் மற்றும் கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது.


வாழைப்பழம் - 2  தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்


பலாச்சுளை - 5 கொட்டை எடுத்துப் பொடி துண்டுகளாக நறுக்கவும்.


வெல்லம் பொடித்து தூளாக்கியது - தேவையான அளவு


தேங்காய் துருவியது - ஒரு கப்


ஏலக்காய் - 2


முந்திரி - 10


திராட்சை - 10


நெய் - ஒரு தேக்கரண்டி.


செய்முறை:-


மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை துண்டுகளில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.


மீதியுள்ள பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். 


வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி உருகியதும், அதில் முந்திரி, திராட்சையை வறுத்து, தனியாக எடுத்துவைத்த பழங்கள் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். 


அதே பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இலேசாக கொதி வந்து கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.


 தேங்காய்த்துருவலுடன் ஏலக்காய் பொடிச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து கெட்டிப் பால் எடுக்கவும். 


பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள்  நன்கு வதக்கவும். 


இதில் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை மற்றும் எடுத்து வைத்த பழங்கள்  அனைத்தையும் சேர்க்கவும். 


 நன்கு கொதிவந்ததும் இறக்கவும்.


பலன்கள்


மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், உயிர்ச்சத்துகள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. 


 வாழைப்பழம் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும். 


அதிக ஆரோக்கியமான சுவையான எந்த கெடுதலும் இல்லாத பழம் இது


மாங்காய் - *வேப்பம்பூ பச்சடி

*************

சித்திரை ஸ்பெஷல்:-


‘இளவேனில் காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குவது சித்திரை மாதத்தின்போதே. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். 

வேப்ப மரங்களில் வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கும்.

 மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை உணர்த்தும் அம்சமாக  கருதப்படும் உணவு வகைகளில் இந்த மாங்காய் - வேப்பம்பூ பச்சடியும்ர ஒன்று.


தேவையானவை:-


மாங்காய் - 2 தோல், கொட்டை நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கியது .


வேப்பம்பூ - 2  தேக்கரண்டி.


கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி. 


கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு.


வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு


காய்ந்த மிளகாய் - 2 .


பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை


எண்ணெய் - 2 தேக்கரண்டி.


நெய் - 1தேக்கரண்டி.


உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை:-


குக்கரில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு தண்ணீர் தெளித்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறியபின் மசித்துக்கொள்ளவும்.


 வாணலியில் நெய்விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.


 பிறகு, அதே கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.


 இதனுடன் மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து இறக்கிவிடவும் .


 வேப்பம்பூவை நிறைய கிடைக்கும் காலங்களில் நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் 


நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.


கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்வதில் வேப்பம்பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தி, வேப்பம்பூவுக்கு உண்டு என்பதால், இந்தக் கோடைக் காலத்துக்குச் சரியான உணவாக இருக்கும்.


வேப்பம்பூ ரசம்

*******


சித்திரை ஸ்பெஷல்: 


நன்மை தரும் கசப்பு!

கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் வேப்பம்பூக்களின் உதிர்வுகள் ரம்மியமானவை. 


வேம்பின் ஒவ்வொரு பாகமும் மிகவும் பயனுள்ளவை.ஆனாலும் இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது காரணம்  கசப்பு சுவை என்பதால் 

 அறுசுவைகளில் அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மை பயக்கும் சுவையே கசப்பு. 

மற்ற சுவைகளை அறிய இந்தச் சுவையே பெரிதும் உதவுகிறது.


தேவையானவை:-


வேப்பம்பூ - ஒரு தேக்கரண்டி.


புளி -  சிறு நெல்லிக்காய் அளவு.


உப்பு - தேவையான அளவு .


வெல்லம் - சிறு எலுமிச்சை அளவு.


மஞ்சள்பொடி -  1சிட்டிகை


தாளிக்கத் தேவையானவை:-


நெய் - ஒரு தேக்கரண்டி


கடுகு -  தாளிக்கத் தேவையான அளவு


காய்ந்த மிளகாய் - 3


உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்


துவரம்பருப்பு - ஒரு  ஸ்பூன்


கறிவேப்பிலை - தாளிக்க


பெருங்காயம் -  1 சிட்டிகை


செய்முறை:-


வேப்பம்பூவை இலேசான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.


 புளியை தண்ணீரில்  ஊறவைத்து அதனுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்பொடி சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 


நன்றாக கொதித்தவுடன், ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு  தாளித்து ரசத்தில் சேர்த்து கடைசியாக

 சிறிது நெய் விட்டு வேப்பம்பூவை வதக்கி ரசத்தில் சேர்க்கவும்.


 வேப்பம்பூ சேர்த்தவுடன் ரசத்தை இறக்கி விடவும். அதன் பிறகு கொதிக்கவிடக் கூடாது .


வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. 


 வேப்பம்பூவில் கசப்பு இருப்பதால் உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். 

வயிற்றுவலி சரியாகும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மயக்கம், வாந்தி மற்றும் பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். 


அறுசுவை பச்சடி

********

சித்திரை ஸ்பெஷல்!


 அன்று தமிழ் வருடக் கணக்கின்படி வ ஆண்டு பிறக்கிறது. 

வசந்த காலத்தின் ஆரம்பமாகக் கருதப்படும் சித்திரை மாதத்தின் முதல் நாளில் இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளைச் சமைத்து உண்பது வழக்கம்.


 மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர் மோர், பருப்பு, பாயசம் போன்றவை செய்வார்கள்.

 இப்படிப்பட்ட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே ஆனந்தமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். 


இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.


 இந்தச் சித்திரையை வரவேற்கும் விதமாக அறுசுவையை ருசிப்போம்.

ஆனந்தமாய் வாழ்வோம்.


தேவையானவை:-


மாங்காய் -2


பச்சை மிளகாய் - 2


வெல்லம் - சிறிய துண்டு


வேப்பம்பூ - 1டீஸ்பூன்


பாசிப்பருப்பு - 1 டீஸ்பூன்


உப்பு - ஒரு சிட்டிகை


செய்முறை:-


மாங்காய் மற்றும் பச்சை மிளகாயைக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். 

பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களை.யும் ஒன்றாகக் கலந்துவிட்டால் அறுசுவை பச்சடி தயார்.


வி.ஜான்சிராணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,