அறுபதும் அன்னையும்

 அறுபதும் அன்னையும்

இன்று என் 59 ஆவது பிறந்தநாள். அறுபது வயதுக்குள் அடியெடுத்து வைக்கிறேன். பொதுவாக பிறந்தநாட்களை கொண்டாடியதில்லை. இளமையில் அம்மா கொண்டாடுவதுண்டு. அம்மாவின் இறப்புக்குப்பின் அவ்வழக்கம் இல்லாமலாகியது. இப்போதெல்லாம் காலையில் எழுந்து மின்னஞ்சல் பார்க்கையில் எவராவது வாழ்த்து தெரிவித்திருப்பதை கண்டுதான் பிறந்தநாள் நினைவுக்கே வருகிறது. முகநூலில் இல்லை என்பதனால்
வாழ்த்துக்கள்
வருவதும் குறைவுதான்.
ஆனால் இந்தப் பிறந்தநாள் ஒரு வகையான அமைதியின்மையாக நினைவில் இருக்கிறது. ஏனென்றால் சிலநாட்களுக்கு முன்னரே இது நினைவில் எழுந்ததும் அறுபது தொடங்கவிருக்கிறது என்னும் எண்ணம் எழுந்தது. அறுபது! நம் மரபில் ஓரு வட்டத்தின் நிறைவு அது. அதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆகவேதான் நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருக்கு அறுபதாண்டு மலர்களை வெளியிட்டேன்.
இன்று எனக்கு அறுபது அணுகிவிட்டபிறகு கொண்டாட்டமோ, தொகுத்துக்கொள்ளுதலோ பெரிதல்ல என்று தோன்றுகிறது. இதை ஒரு நிறைவாக நினைக்க முடியவில்லை. ஒரு தொடக்கமாகவே கொள்கிறேன். ஆனால் எங்கே, எத்திசையில்? அது தெளிவாக இல்லை. முற்றிலும் மூடியிருக்கவுமில்லை, குழப்பம் அதனால்தான். இக்குழப்பங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. எனக்கே தெளிவாக ஆனபின் மாணவநிலையில் உள்ள எவரிடமேனும் எப்போதேனும் பகிர்ந்துகொள்ளலாகும்.
சென்னையில் ஜி.ஆர்.டி கிராண்டின் அறையில், பெரும்பாலும் தனிமையில் இருந்தேன். நட்சத்திர விடுதிகள் எல்லாமே ஓய்ந்து கிடக்கின்றன.அங்கிருந்து கிளம்பவேண்டும் என்று தோன்றியது. ஊட்டி செல்லலாம், அதுவே முதல் தெரிவு. குருவின் அருகே இருக்கவேண்டும். ஆனால் அங்கு செல்ல பல நிபந்தனைகள். வற்கலை செல்லவும் அவ்வாறே. ஆகவே ஏதோ ஓர் இடம் என முடிவு செய்தேன். முற்றிலும் தனியாக, என்னை உற்றுநோக்கியபடி, இரண்டுநாட்கள் இருக்கவேண்டும். இங்கு வந்திருக்கிறேன்.
உற்றுநோக்குதல் என்கிறேன். ஆனால் அது ஒரு விளையாட்டுதான். அப்படி உற்றுநோக்க முடியாது. ஆயிரம் செயல்கள் வழியாக நம்மை நாமே தவிர்ப்பதுதான் நாம் செய்வது.அதுவே நல்லதும்கூட. அந்த செயல்களின் ஊடே சட்டென்று வெளிப்படும் தோற்றமெனவே நாம் நம்மை உண்மையில் காணமுடியும். நேருக்குநேர் நோக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே நடிப்போம். நம் மனமே நம்மை மறைக்கும் திரை ஆகிவிடும்.
பொதுவாக பிறந்த நாளில் வாழ்த்துகளுக்குச் சமானமாக எனக்கு வசைகளும் வருவதுண்டு. ஆகவே அன்று மின்னஞ்சல்கள் பார்ப்பது இல்லை. செல்பேசியை தொடுவதுமிலை. நாளைதான் மீண்டும் நாள் தொடங்குகிறது.
- ஜெயமோகன்
May be an image of 1 person and book


நன்றி 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,