சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி

 சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி

சொடக்கு தக்காளி பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?



இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று.


இது நம் நாட்டில் ஏதோ கடைகளில் கிடைக்கும் என்று எண்ணக் கூடாது. இதனை சாதாரணமாக சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும், குப்பைகளிலும் காண முடியும்.


நம் நாட்டில் இப்பழம் சந்தைப்படுத்த படவில்லை. எனவே நகர்புறங்களில் இருப்பவர்கள் இதனை மிகக்குறைந்தளவே அறிந்திருப்பர்.


இப்பழமானது பலூன் போன்ற உறையினுள் இருக்கும்.

கிராமங்களில் சிறுவர்கள் முதிர்ந்த இப்பழத்தின் பலூன் போன்ற உறையினை வாயினால் ஊதி தலையில் உடைத்து விளையாடுவர்.


இப்பழத்தினை தலையில் உடைக்கும்போது சொடக்கு போட்டால் ஏற்படும் ஓலியை ஒத்து இருக்கும். மேலும் இப்பழம் பார்ப்பதற்கு தக்காளியை போல இருக்கும். எனவே இது சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படுகிறது.


சொடக்கு தக்காளி சோலோனேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்டோர் இதனுடைய உறவினர்கள் ஆவர். இதனுடைய அறிவியல் பெயர் பைசாலிஸ் மினிமா என்பதாகும்.


இப்பழமானது அசத்தலான தனித்துவமான இனிப்பு சுவையுடன் அனைவரையும் சொக்க வைக்கும்.


 


சொடக்கு தக்காளியின் அமைப்பு மற்றும் வளரிடம்

சொடக்கு தக்காளியானது செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இச்செடியானது 90 செமீ உயரம் வரை வளரும்.


இது ஓராண்டுத் தாவரமாகும். இத்தாவரத்தின் தண்டுப்பகுதியானது கிளைத்துக் காணப்படுகிறது. இலைகள் 10 செமீ நீளத்தில் காணப்படுகின்றன.


இச்செடியில் பச்சை கலந்த மஞ்சள் அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் வண்ணத்தில் 2 செமீ பூக்கள் பூக்கின்றன. பூக்கள் தண்டுப்பகுதியிலிருந்து தொங்குகின்றன.


பூக்களிலிருந்து உறை போன்ற பையினுள் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன.


உறைகள் பார்ப்பதற்கு பலூன் போன்று காட்சியளிக்கிறது. இக்காய்கள் முற்றி பழமாகும் போது உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.


 

உறையினுள் உள்ளே உள்ள காயானது மஞ்சள் கலந்த பச்சை அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் பளபளப்பாக இருக்கும். உறையானது பழுப்பு நிறத்திற்கு மாறி காய் பழுத்தவுடன், பழமானது உறையுடன் சேர்ந்து உதிர்ந்து விடும். இப்பழமானது 1.5 செமீ அளவில் இருக்கும்.


 

இச்செடியானது பெரும்பாலும் களைச் செடியாகவே கருதப்படுகிறது. மழைகாலங்களில் இதனை அதிகம் காணலாம்.


இத்தாவரம் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதியே இதனுடைய தாயகமாகும்.


 


சொடக்கு தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின் ஏ, சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) போன்றவை காணப்படுகின்றன. மேலும் இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளன.


இதில் நார்ச்சத்து, புரோடீன், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து முதலியவையும் இருக்கின்றன. டானின் மற்றும் பெக்டின் போன்றவையும் காணப்படுகின்றன.


 


சொடக்கு தக்காளியின் மருத்துவப் பயன்கள்

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கத்தை நீக்க

சொடக்கு தக்காளியின் வேர்பகுதியில் ஆல்காய்டுகள், ஃப்ளவனாய்டுகள் காணப்படுகின்றன.


இவை சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் எனப்படும் ஃபைப்ரோஸிஸை நோயைக் குணப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் ஏற்படும் இழைநார் பெருக்கம் என்னும் நோயைக் குணமாக்கலாம்.


 


இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க

இப்பழத்தில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடால் உண்டாகும் நோய்களான அனீமியா, சோர்வு, அறிவுத்திறன் குறைவு உள்ளிட்டவைகளால் பாதிப்படைந்தவர்கள் இப்பழத்தினை உண்டு நிவாரணம் பெறலாம்.


 


கீல்வாதத்தால் உண்டாகும் வலி குறைய

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி3(நியாசின்) உடலில் எல்லா பாகங்களுக்கும் இரத்த ஓட்டத்தை செலுத்த அவசியமானதாகச் செயல்படுகிறது.


கீல்வாதம் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட இடத்திற்கு விட்டமின் பி3 தேவையான இரத்தத்தை செலுத்துகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வலி குறைவதோடு மூட்டுகளை எளிதாக அசைக்கவும் உதவுகிறது.


140 கிராம் அளவுள்ள இப்பழத்தில் 24.5 சதவீதம் விட்டமின் பி3 உள்ளது.


 


ஆரோக்கியமான இதயச் செயல்பாடுகளுக்கு

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) அசிடைல்சோலைன் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இவ்வேதிப்பொருளானது நரம்புகள் மற்றும் தசைகளுக்கு செய்திகளைக் கடத்தும் நரம்பியக் கடத்தியாகச் செயல்படுகிறது.


விட்டமின் பி1 குறைபாட்டால் நரம்பியக் கடத்தியின் செயல்திறன் குறைந்து இதயத்துடிப்பானது சீரற்றதாகிவிடும். எனவே நாம் இப்பழத்தினை உண்டு ஆரோக்கியமான இதயச் செயல்பாடுகளைப் பெறலாம்.


 


அறிவாற்றல் திறன் மேம்பட

இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகளவு காணப்படுகின்றன. இவை மனஅழுத்தம் மற்றும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் புலனுணர்வு உறுப்புகளில் உண்டாகும் அடைப்புகளை நீக்கி அறிவாற்றலை மேம்படச் செய்கிறது.


அல்சைமர்ஸ், டிமன்சியா போன்ற அறிவாற்றல் சார்ந்த மூளை பாதிப்பு நோய்கள் ஏற்படாமல் இப்பழஆன்டிஆக்ஸிஜென்டுகள் உதவுகின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நினைவாற்றல் அதிகரிப்பு, கவனம், மூளை செறிவு திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பெறலாம்.


 


செரிமானம் மற்றும் செரிமானப் பாதை மேம்பாடு அடைய

இப்பழத்தில் பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இச்சத்து உணவினை நன்கு செரிமானம் அடையச் செய்வதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. மேலும் செரிமான உறுப்புகளில் காணப்படும் பிரச்சினைகளையும் தீர்க்கிறது.


இயற்கையாக வளரும் இயல்புடைய சொடக்கு தக்காளியை நாம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து பழத்தினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,