ஏ.பி.நாகராஜன்

 ஏ.பி.நாகராஜன் நினைவு நாள்


ஏப்ரல் 5
ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர்.
டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன்!
நால்வர்(1953),பெண்ணரசி(1955),நல்லதங்காள்(1955) ஆகிய படங்களில் கதாநாயகன் ஏ.பி.நாகராஜன்! இந்தப்படங்களுக்கு வசனமும் இவரே தான். சாண்டோ சின்னப்பதேவரின் முதல் படம் ’நல்ல தங்கை’(1955)க்கு வசனம் எழுதியதும் நாகராஜன் தான்.
’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………
அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா’
இந்த டி,எம்.எஸ் பாடல் ’நல்லதங்காள்’ படத்தில் ஏ.பி.நாகராஜனுக்குத்தான்.
’நால்வர்’ படத்தில் என்.என்.கண்ணப்பாவும் நடித்தார்.விஜயகுமாரி கூட ஒரு சின்னரோலில் நால்வர் படத்தில் நடித்தார்.
அதே வருடம் கே.சோமு இயக்கி கண்ணப்பா கதாநாயகனாக நடித்த டவுன் பஸ் படத்திற்கு ஏ.பி.என் தான் வசனம்.
கே.சோமு யூனிட்டில் நாகராஜன் அவர்களின் பங்கு மகத்தானது.
கே.சோமு இயக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்திற்கும் வசனம் இவரே.
கே.சோமுவின் இந்தப் படத்தை ராஜாஜி பார்த்துவிட்டு ’பரதனை மிகவும் ரசித்தேன்’ என்றார். என்.டி.ராமாராவ் ராமனாக நடித்த இந்தப்படத்தில் பரதனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
(வாசனின் ஔவையார்(1953) படத்தை அதற்கு முன்னதாக இரு முறை பார்த்த ராஜாஜி தன் டைரிக்குறிப்பில்(10-08-1953) அந்தப்படம் பற்றி சிலாக்கியமாக எழுதாமல் குறை கூறி எழுதியிருந்தார் என்று அசோகமித்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.)
திரையுலகில் பல மாற்றங்கள்,மேடுபள்ளங்கள் கண்ட ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.
அரசியல் நோக்கு கொண்டிருந்தார். ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
திரையுலகில் கவி.கா.மு.ஷெரிப் தமிழரசுக்கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்.
நாடகஸ்திரிபார்ட்,திரைப்படகதாநாயகன்,வசனகர்த்தா,தயாரிப்பாளர் என்று பலவித அனுபவங்களுக்குப்பிறகு தான் மிகச்சிறந்த சாதனை இயக்குனர் ஆக பரிமளித்தார்.
வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து சிவாஜி,பானுமதி நடித்த ’மக்களைப் பெற்ற மகராசி’,எம்.ஆர் ராதா நடித்த ‘நல்ல இடத்து சம்பந்தம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். வி.கே.ஆர் நட்பு கசந்ததில் பின்னால் இவர் பெரிய இயக்குனரான போது ஏபிஎன் படங்களில் வி.கே.ராமசாமி நடித்ததேயில்லை.
பொருளாதாரப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருந்தது.
கடும் நெருக்கடியின்போது எம்.ஆர்.ராதா உதவி செய்தபோது எம்.ஆர்.ராதாவை பக்கத்து அறைக்கு அழைத்து காலில் விழுந்து கும்பிட்டார்.ராதா தன் இயல்புப்படி ’எல்லார் முன் காலில் விழ வெட்கப்பட்டு ரகசியமாக பிறர் அறியாமல் நாகராஜன் என் காலில் விழுகிறான்.’ என்றார்.
ராதாவும் கூட இவர் பின்னால் இயக்கிய எந்தப் படத்திலுமே நடித்ததில்லை.
வடிவுக்கு வளைகாப்பு,குலமகள் ராதை படங்களை இயக்கிய பின் சிவாஜியின் 100வது படம் ’நவராத்திரி’ இயக்கிய பெருமை.
அதன் பின் வாழ்வில் ஒரு மாற்றம். திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்,கந்தன்கருணை, திருவருட்செல்வர்,திருமால் பெருமை போன்ற படங்களை இயக்கினார். இதனால் இன்று வரை ஏ.பி.என் என்றால் புராணப்பட இயக்குனர் என்றே பரவலாக அறியப்படுகிறார்.
திருமால் பெருமை வந்த அதே வருடம் தான் ஏ.பி.நாகராஜனின் மாஸ்டர் பீஸ் ’தில்லானா மோகனாம்பாள்’ கூட வெளிவந்தது.
நாகேஷ் நடித்த தருமி,வைத்தி கதாபாத்திரங்களை இயக்கி அவரை சிகரத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்.
நவராத்திரி,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் இவரை இன்று அமரத்துவம் பெறச்செய்து விட்டன.
சிவாஜி ஏனோ அவரை இயக்கிய இயக்குனர்களில் அவருக்குப் பிடித்தவராக ’தெய்வமகன்’ ’பாரத விலாஸ்’ ’பாபு’ படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தரைத்தான் சொல்வார்.
திருவிளையாடலில் சிவாஜி,நாகேஷ் நடித்த அந்த பிரபல எபிசோடில் நக்கீரனாக ஏ.பி.என். பிரமாதமாக நடித்தார்.ஆனால் அதன் பின் அவர் இயக்கிய படங்கள் எதிலும் நடித்ததில்லை.
மிக பிரமாண்ட படங்களாக எடுத்த பின் சின்ன பட்ஜெட் படங்களாக திருமலை தென்குமரி,கண்காட்சி எடுத்தார். பின் சின்ன பட்ஜெட் அகத்தியர்,திருமலை தெய்வம் புராணப்படங்கள்.
மீண்டும் பிரமாண்டமாக ‘ராஜராஜசோழன்’சினிமாஸ்கோப் ( டைட்டில் கார்ட்- நடிகர் திலகம் உயர்திரு சிவாஜிகணேசன்)
கமலஹாசன் இவர் இயக்கத்தில் சிவகுமாருடன் நடித்த குமாஸ்தாவின் மகள் (1974) – இந்தப் படம் 1941-இல் டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்து வெளி வந்த குமாஸ்தாவின் பெண் ரீமேக். இந்த நாடகத்தில் தான் ஏபிஎன் கதாநாயகியாக நடித்திருந்தார்! இவர் இயக்கிய போது அதில் கதாநாயகி ஆர்த்தி புட்டண்ணா.
கமல் நடித்த இன்னொரு ஏபிஎன் படம் ’மேல் நாட்டு மருமகள்’ அதில் ஒரு நடனமாட பம்பாயிலிருந்து வந்த வாணி கணபதியை பின்னால் முதல் மனைவியாக்கியது.
ஏபிஎன் வாழ்வில் கடைசியாக பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கி அவருக்கு ஒன்பது நாயகியர் என்று ’நவரத்தினம்’ படத்தை இயக்கினார்.
நாகராஜனின் குரல் விஷேசமானது.அவர் படங்களில் “ பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களுக்கு என்று ஆரம்பித்து படத்தைப் பற்றி பேசுவார்.
கண்காட்சி படத்தில் கே.டி.சந்தானத்தின் சந்தப்பாடல் ’அனங்கன் அன்பன் வசந்தன் மன்மதன் என்று வணங்கும் என்னுயிர் மன்னவா’விற்கு துவக்கத்தில் தொகையறாவாக ஏபிஎன் குரல்:
“வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி……
மென்குயில் தான் இசை முழங்க, மீன் வரைந்த கொடியசைய…..
கண்கவரும் பேரழகி,கனகமணி பொற்பாவை…….
அன்ன நடை ரதியுடன்,அழகு மதன் வில்லேந்தி………
தண்முல்லை,மான்,தனி நீலம்,அசோகமெனும்……
வண்ணமலர் கணை தொடுத்தான்…….
வையமெல்லாம் வாழ்கவென்றே!”
ஏபி நாகராஜனுக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்.
நடிகை வடிவுக்கரசியின் அப்பா ராணிப்பேட்டை சண்முகமும் நாகராஜனும் சகலைபாடிகள். வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.என்.
நடிகை குமாரி பத்மினி இவருடைய நிழலில் தான் வாழ்ந்தார். கண்காட்சி,திருமலை தென்குமரி போன்ற படங்களில் நடித்தவர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,