தாங்க முடியாத பெருந்துயர்
அஞ்சலி
*
நடிகர் விவேக் அவர்களின் திடீர் மறைவு தாங்க முடியாத பெருந்துயர்.
நகைச்சுவையால் நம் உள்ளங்களை ஒரு கால் நூற்றாண்டு காலம் ஆண்டார். அவர் நடித்த அனைத்தும் கருத்துள்ள நகைச்சுவைகள் . மூட நம்பிக்கைக்கு எதிரான சிரிப்பு வெடிகள். சிந்தனைச் சாவிகள்.
அதனால்தான்
சின்னக் கலைவாணர் , ஜனங்களின் கலைஞன் என்றெல்லாம் கொண்டாடாடப்பட்டார். பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.
நான் இயக்கிய 'தித்திக்குதே' திரைப்படத்தில் 'பஞ்ச் பாலா' என்ற பாத்திரத்தில் நடித்தார். பலரது நினைவுகளில் நிலைத்திருக்கும் பாத்திரம். தொலைக்காட்சிகளின் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் அக்காட்சிகளும் அவரது கருத்துள்ள நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டுகள்.
சில படங்களில் குணச் சித்திரப் பாத்திரங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார். அவரது பங்களிப்பு வியாபார வெற்றிக்கு அவசியமாக இருந்ததால் இரண்டாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் வெளிவந்த பெரும்பான்மையான படங்களில் இடம்பெற்றார். நாயகனாகவும் சில படங்கள் நடித்தார்.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மீது தீராக் காதல் கொண்டவர் விவேக். அவர் எண்ணங்களைத் தன் திரைப்படங்களில் ஒலித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 'ஒரு கோடி மரக் கன்றுகள்' திட்டம் மூலம் சூழலியல் ஆர்வலராக அறியப்பட்டார்.
இன்று காலை நம் இதயங்களை உடைத்தது போல 'நடிகர் விவேக் காலமானார்' என்ற செய்தி.
நேற்று சார்லி சாப்ளின் பிறந்த தினம். இன்று விவேக் மறைவு.
என் இனிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன். திரையுலகில் பலருக்கும் இதே உணர்வுதான். இவ்வளவு நாள் சிரிக்கவைத்தவர் இன்று அழவைத்துவிட்டார்.
காலனின் வேட்டையில் கலைஞன் சாகலாம். கலை சாகாது. அவர் நடித்த காட்சிகளில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். அவர் நட்ட மரங்களில் அவரது சுவாசம் தொடர்ந்துகொண்டிருக்கும்.
- இயக்குநர் பிருந்தா சாரதி.
Comments