இயக்குனர் எஸ். பி. முத்துராமன்

 இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பிறந்த தின பதிவு

தமிழ்த் திரையுலகின் பல்கலைக்கழகம் ஏவிஎம் நிறுவனம் என்றால், அதில் உருவாகிய கலைஞர்கள் ஒரு சினிமா பேராசிரியர்கள். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் தொடங்கி எண்ணற்ற ஆளுமைகளை ஏவிஎம் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அப்படி ஏவிஎம்-மால் உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான முகம் இயக்குநர் SP.முத்துராமன். கவிஞர் கண்ணதாசனால் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு உதவி எடிட்டராக தனது பயணத்தைத் தொடங்கிய SP.முத்துராமன், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அதே ஏவிஎம் ஸ்தாபனத்தில் இணை தயாரிப்பாளராக அமர்த்தப்படுகிறார் என்றால் அது அவரது கடும் உழைப்புக்குச் சான்று. தமிழ்த் திரையுலகில் இருபத்தைந்து ஆண்டுகளில் எழுபது படங்கள் இயக்கியது சாதனையென்றால், அது அத்தனையும் வியாபாரரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தது பெரும் சாதனை.
புராணகால திரைப்படச் சூழலிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்து, கதைக்கான முக்கியத்துவத்துடன் சினிமாவை வேறு ஒரு பாதைக்கு மடை திருப்பியவர்கள் ஸ்ரீதரும் கே.பாலசந்தரும். யதார்த்தங்களும் கதையம்சமும் வாய்ந்த காவியங்களாக பயணித்துக் கொண்டிருந்த அந்த மடைமாற்றப்பட்ட தமிழ் சினிமாவை, வர்த்தகரீதியில் மிகப்பெரிய தளத்துக்குக் கொண்டுசென்ற பெருமை SP.முத்துராமனைச் சாரும்.
படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படம் ஒரு குறிப்பிட்ட ஒரு லாபத்தை ஈட்டவேண்டுமென்று நிர்ணயிக்கப்படும். அந்த நிர்ணயிக்கப்பட்ட லாபத்தை திரைப்பட வியாபாரத்தில் minimum guarantee (குறைந்தபட்ச உத்திரவாதம்) என்று அழைப்பார்கள். ஒரு நடிகராக தன்னை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, அவர்கள் போட்ட முதலில் குறைந்தபட்ச லாபத்தை சாத்தியப்படுத்தியது எம்ஜிஆர்.தான். அதனால்தான் எம்ஜிஆருக்கு Minimum Guarantee Return (MGR) நடிகர் என்ற பெருமை உண்டு. அதுபோல, Minimum Guarantee Return இயக்குநர் என்று ஒருவர் இருந்தாரென்றால் அது நிச்சயம் SP.முத்துராமன்தான்.
என்னதான் பிற்காலத்தில் கமர்ஷியல் இயக்குநராக மாறினாலும் SP.முத்துராமனின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் இல்லாமல் அவரை ஒரு எல்லைகளற்ற இயக்குநராகவே முன்னிறுத்தின. ‘கனிமுத்து பாப்பா’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்று, எழுபதுகளின் பிற்பகுதியில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர் ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’ என்று அனைத்து திசைகளிலும் வெற்றி கண்டார். எம்.ஜி.ஆர். ரக சினிமாக்களில் இருந்து சற்று விலகி, கமர்ஷியல் சினிமாவுக்கென ஒரு புதிய இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர் SP.முத்துராமன். இன்று சரளமாக காணப்படும் பன்ச் வசனங்கள், மாஸ் ஓப்பனிங், ஹீரோக்களே காமெடி செய்வது போன்ற காட்சிகள் என்று அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இவரது படங்கள்தான்.
கதை, திரைக்கதை, வசனமென்று எழுத்து வடிவமாக இருக்கும் ஒரு திரைப்படத்தை, ஒலி-ஒளி கோர்த்து நேர்த்தியாக காட்சிப்படுத்துவதில் இருக்கிறது ஒரு இயக்குநரின் சாமர்த்தியம். இன்றைய சினிமா மொழியில் சொல்லவேண்டுமானால், ஒரு முழு திரைப்படத்தின் ஆக்கத்தை, வடிவத்தை ‘ஸ்கிரிப்ட்’ என்று சொல்லிவிடலாம். அதை எந்தவொரு மாறுதலும் இல்லாமல் திரையில் கொண்டுவரும்போது அந்தப் படைப்பாளி வெற்றியடைகிறான். இந்த வெற்றி ஒருபுறமிருக்க, மறுபுறம் இப்படி முழுவதுமாக ஆவணப்படுத்தப்பட்ட ஸ்ரிப்ட்டை ஒரு திரைப்படமாக மாற்றுவதில் அதை உருவாக்கியவர்கள் சிலர் தோல்வியும் அடைகிறார்கள். ஒரு இயக்குநராகப்பட்டவர் படத்தின் கதைக் கரு சொல்லும் விஷயங்களை ஆணித்தரமாக திரையில் பதியவைக்க வேண்டும். அந்த முழு ஸ்க்ரிப்ட்டும் யாருடைய எழுத்தாக இருந்தாலும் சரி, திரையில் எழுதப்படும்போது அது இயக்குநரின் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மொழிமாற்ற பார்முலாவின் ஜீனியஸ் இயக்குநர் SP.முத்துராமன். கதை, திரைக்கதை, வசனம் என்று எழுத்தாளர்களின் எண்ணங்களை அவர்கள் கூறநினைக்கும் அதே பாங்கில், அதே அலைவரிசையில் திரையில் பிரதிபலிப்பதில் SP.முத்துராமன் முக்கியமானவர்.
2011ஆம் ஆண்டு ரஜினி, தனது ‘ராணா’ படத்தை தொடங்கியபோது அதன் பூஜையில் தன்னை வளர்த்தவர்களுக்கு மரியாதை செய்த ரஜினி கே.பாலசந்தர், பஞ்சு அருணாசலம், RM.வீரப்பன் வரிசையில் SP.முத்துராமனையும் வைத்து அழகு பார்த்தார். ரஜினியின் சினிமா வாழ்க்கையின் முக்கியமான பக்கங்கள் SP.முத்துராமனால் எழுதப்பட்டவை. தான் இயக்கிய எழுபது படங்களில் இருபத்தைந்து படங்கள் ரஜினியை வைத்து இயக்கியிருக்கிறார் SP.முத்துராமன். இதனால்தான், ‘ரஜினி எனும் வைரத்தை கண்டெடுத்தது நானென்றால் அதை பட்டைதீட்டியது SP.முத்துராமன்தான்’ என்று, கே.பாலசந்தர் ஒருமுறை SP.முத்துராமனை பாராட்டினார்.
‘சூப்பர் ஸ்டார்’ என்ற ஒற்றை மந்திரச்சொல்லுக்கு என்ன என்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டுமோ, அதையெல்லாம் ரஜினியை வைத்து வரையறை செய்தவர் இவர். ரஜினிக்கு ‘பைரவி’ படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கிடைத்திருந்தாலும் ‘சூப்பர் ஸ்டார் என்றால் என்ன ?’ என்று காட்டியது SP.முத்துராமனின் ‘ப்ரியா’, ‘முரட்டுக்காளை’ போன்ற படங்கள்தான்.
ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரஜினியை ஒரு கதாநாயகனாக, நல்லவனாக சித்தரித்த திரைப்படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அதுவரை ஹீரோவாக இருந்த சிவக்குமாரை வில்லனாக்கி, வில்லனாக இருந்த ரஜினியை ஹீரோவாக்கி ஒரு புதுமுயற்சியில் மிகப்பெரிய வெற்றியடைந்தார் SP.முத்துராமன்.
ரஜினியை ஒரு முழு நடிகனாக தமிழ் சினிமா ரசிகர்கள் திரையில் பார்த்தது ‘ஆறிலிருந்து அறுபது வரை’. வளர்ந்துவரும் நடிகனாக இருந்த அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு சுமைமிகுந்த கதாபாத்திரத்துக்கு ரஜினியை தேர்வுசெய்து, அதில் ரஜினியை ஒரு தேர்ந்த நடிகராக செம்மை செய்தார். ‘கண்மணியே காதலென்பது’ பாடலாக இருந்தாலும் சரி, சோவிடம் கடன் கேட்கும் காட்சியாக இருந்தாலும் சரி, தங்கையை காணச்சென்று அவமானத்தோடு வீடு திரும்பும் காட்சியாக இருந்தாலும் சரி, அனைத்துக் காட்சியிலும் ஒரு புது ரஜினியை திரையில் காண்பித்தார்.
இன்று வரை ரஜினியின் நடிப்பைப் பற்றி பெருமையோடு பேசும் படங்களின் பட்டியலில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ இருக்கிறது. அதேபோல், ரஜினியின் நடிப்புத் திறமைக்கு தீனிபோடும்விதமாக SP.முத்துராமன் இயக்கிய மற்றுமொரு படம் ‘எங்கேயோ கேட்ட குரல்’. ரஜினியின் முதிர்ச்சியான நடிப்பு, ‘பட்டுவண்ண சேலைக்காரி’ பாடல், முதுமைத் தோற்றம், ஒரு மகளின் தந்தை என்று ரஜினியை வேறொரு பார்வையில் காட்டினார். நடிப்புக்கு ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று எடுத்த SP.முத்துராமன், ரஜினியை ஒரு மாஸ் ஹீரோவாக்கியது ‘முரட்டுக்காளை’ படத்தில். இன்று வரை ஒரு மாஸ்-கமர்ஷியல் திரைப்படங்களுக்கு இவரது ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரி ராஜா’ போன்ற படங்கள் எடுத்துக் காட்டுகளாக இருக்கின்றன. ரஜினியை பிளேபாய் கதாபாத்திரத்தில் பொருத்தி ஒரு வித்தியாசமான ரஜினியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த ‘நெற்றிக்கண்’ இவரது மிக முக்கியமான படங்களில் ஒன்று.
இப்படி, நடிப்புசார்ந்த படங்கள், முழு ஆக்‌ஷன் படங்கள் என்று இயக்கினாலும் ‘குரு சிஷ்யன்’, ‘அதிசயப் பிறவி’, ‘ராஜா சின்ன ரோஜா’ போன்ற படங்களையும் இயக்கத் தவறவில்லை. ரஜினி, தனது நூறாவது படமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ திரைப்படத்தை SP.முத்துராமன்தான் இயக்க வேண்டுமென்று அழைத்தபோது, ‘நான் ஒரு சுயமரியாதை குடும்பத்திலிருந்து வந்தவன். நான் இப்படி ஒரு ஆன்மீகப் படத்தை இயக்கினால் மக்கள் ஏற்க மாட்டார்கள், என்னாலும் முழுமனதோடு இயக்க முடியாது’ என்று கூறி தயங்கியிருக்கிறார். பின்னர், தயாரிப்பாளர் கே.பாலசந்தர் கேட்டுக்கொண்டதால் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ போன்ற ஒரு ஆன்மீக வாசனைகொண்ட படத்தையும் இயக்கி, தன்னால் எப்படிப்பட்ட படங்களையும் இயக்கமுடியுமென்று திடமாக நிரூபித்தார்.
எண்பதுகளில் தமிழ் சினிமாவின் இரு கைகளில், ஒரு கை ரஜினியிடம் இருந்ததுபோல மற்றொரு கை கமலிடம் இருந்தது. இந்த இரு பெருங்கைகளையும் தனது கைகளுக்குள் வைத்திருந்தார் SP.முத்துராமன். ரஜினியை வைத்து இருபத்தைந்து படங்கள் இயக்கியதுபோல, கமலை வைத்து பத்துப் படங்கள் இயக்கியிருக்கிறார்.
‘மோகம் முப்பது வருஷம்’ என்ற படம் இருவரும் இணைந்த முதல் படமாக இருந்தாலும், கமலுக்கும் SP.முத்துராமனுக்குமான தொடர்பு ‘களத்தூர் கண்ணம்மாவி’லேயே தொடங்கிய ஒன்று. கமல் அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’வில் SP.முத்துராமன் உதவி இயக்குநர். ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று ஒரு சிறுவனாக பாடிய கமலை, ‘இளமை இதோ இதோ’ என்று பாட வைத்து ‘சகலகலா வல்லவன்’ ஆக்கினார்.
ரஜினிக்கு ‘முரட்டுக்காளை’ எப்படி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோ அதுபோல கமலின் கமர்ஷியல் முத்திரைக்கு மிகப்பெரிய வெற்றி இந்த ‘சகலகலா வல்லவன்’. அதைத் தொடர்ந்து ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘எனக்குள் ஒருவன்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, என்று அவர் கமலை வைத்து இயக்கிய படங்களின் பட்டியல் முழுவதும் வெற்றிதான் நிரம்பியிருக்கிறது.
ஒரு இயக்குநராக இந்தளவுக்கு SP.முத்துராமனை போற்றும் இந்தவேளையில் பஞ்சு அருணாசலத்தை தவிர்த்துவிட முடியாது. ரஜினி – கமல் என்ற இருபெரும் ஹீரோக்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல இருவருக்கும் ஒரு வேரியேஷனோடு காட்சிகளை அமைத்து அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்தார்.
SP.முத்துராமன் என்ற ஒரு மிகப்பெரும் திரை ஆளுமையை இயக்குநர் என்ற ஒரு சொல்லில் மட்டும் கடந்துவிட முடியாது. தமிழ் சினிமாவின் எண்ணற்ற இயக்குநர்களில் ஒரு தொழில் நேர்மை, மாறுபட்ட முயற்சி, மக்களின் ரசனை அளவுகளின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு படம் இயக்குவது என அனைத்திலும் தனக்கான இடத்தை தமிழ் சினிமா வரலாற்றில் பதித்து வைத்திருக்கிறார்.
இங்கு இயங்கும், இயங்கிய எல்லா இயக்குநர்களையும் காலம் இப்படி வெற்றியோடு அணைத்துக் கொள்வதில்லை. ஒரு வெற்றி இயக்குநராக அவர் கொண்டாடப்படுவதற்கு அவரது திறமை, விடாமுயற்சி, கடும் உழைப்புதான் காரணம் என்றால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவின் வரலாறை ரஜினி-கமல் இல்லாமல் எழுதிட முடியாது. அந்த ரஜினி-கமல் என்ற இரண்டு சகாப்தங்களின் வரலாறை SP.முத்துராமன் என்ற இந்த ஒற்றைச்சொல்லை விடுத்து எழுதிவிட முடியாது.
25 படங்கள் நான் ரஜினியை வைத்து இயக்கி இருக்கிறேன் என்றும் ஒருபோதும், அவர் புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் என்றும், ரஜினி பழசை மறக்காதவர், தனக்கு தெரிந்து கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை என்றும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
மேலும் எப்போதும் இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பவர் என்றும், ஸ்டைலுடன் ஸ்பீடான நடிப்பை வெளிபடுத்துபவர் ரஜினிகாந்த் என்றும் கூறினார்.
அவரது கண்களே அனைத்தையும் பேசிவிடும், அதே போல அனைவரும் சூப்பர் ஸ்டாரைப் போல

இணையத்தில் இருந்து எடுத்தது
May be an image of 1 person
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,