வே.ஆனைமுத்து

 வே.ஆனைமுத்து மறைந்தார்




வே. ஆனைமுத்து (சூன் 21, 1925 - ஏப்ரல் 6, 2021) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.
பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 இல் வே.ஆனைமுத்து பிறந்தார்.
1940 இல் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரின் வழிகாட்டுதலில் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார். 1944 இல் வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று, இறக்கும் வரை தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததோடு, தனது எழுத்தின் மூலமும், பல்வேறு பணிகளின் மூலமும் தொடர்ந்து வளர்த்து வந்தார்.
22.08.1954 அன்று கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசீலாவை மணந்தார். மக்கள் எழுவர்: தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் ஆவர்.

பெரியாரைப் படிப்பது என்பது வேறு; புரிந்து உள்வாங்கிக் கொள்வது என்பது வேறு. கொள்கைகளை வெறும் தகவல்களாக மட்டும் தெரிந்துவைத்துக்கொள்வது என்பது இருவேறு இயற்கைகளுள் ஒன்று. அது பலபேருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதில் தெள்ளியராக இருந்தவர் தோழர் வே.ஆனைமுத்து.
மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்து வெற்றி கண்டவர். இந்தியா முழுவதும் அலைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக மண்டல் கமிஷன் உருவாகக் காரணமானவர். 'பெரியார் சிந்தனைகள்' என்னும் 20 நூல் தொகுதிகளை உருவாக்கியவர். "ஆனைமுத்துக் கருத்துக் கருவூலம்' என்னும் 22 நூல் தொகுதிகளை எழுதியவர்.
பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் தூய்மையானவர்.
இணையத்தில் இருந்து எடுத்தது
“பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை டெல்லி வரைக்கும் கொண்டு சேர்த்த கதையைச் சொல்லுங்களேன்?”
அம்பேத்கர் 1950-களில் அரசியல் சட்டத்தை எழுதிய போது, இடஒதுக்கீடுக்குத் தகுதியானவர் களாகப் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினரையும் உள்ளடக்கியிருந்தார். 50-இல் பட்டியல் வகுப்பினருக்கும் 51-இல் எஸ்.டி.க்கும் இட ஒதுக்கீடு தந்தனர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் யார், யார் வருவார்கள் என அம்பேத்கர் ஒரு விதி உருவாக்கியிருந்தார். அதற்கான கமிஷன் உருவாக்கப்பட்டதே தவிர, அதன் அறிக்கை வெளி யிடப்படவில்லை. பிறகு வெளியிடப்பட்டது. அதை நிறைவேறவிடாமல், தொடர்ந்து தடைகள். இந்த நிலையில்தான் 1978-இல் உத்தரப்பிரதேசத்தில் மாநாட்டை நடத்தினோம். அதன் பலனாக பீகாரில் மாநில அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் எனப் பலரையும் சந்தித்து, இட ஒதுக்கீட்டுக்கான நியாயத்தை வலியுறுத்தினேன். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த
வி.பி.சிங் வரை கொண்டுசெல்ல முடிந்தது."
“பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கான தலைவர் எனும் கருத்தைச் சிலர் திரும்பத் திரும்ப முன் வைப்பதில் எந்த அளவு நியாயம்... எந்த அளவுக்கு நியாயமில்லை?”
1934இல் குடியரசு நாளேட்டிலேயே தெளிவாக எழுதியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எட்டு விழுக்காடுதான் கொடுத்திருக்கிறார்கள். விகிதாசாரப்படி போதுமானதல்ல. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பட்டியல் சாதியினருக்கும் விகிதாசாரப்படி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் பிற் படுத்தப்பட்டவர்களுக்கான தலைவர் என்ற வாதம் தவறானது.
“திராவிட இயக்கம் தலித்துகளுக்காகச் செய்த முக்கியமான பங்களிப்பு என்றால் எதைச் சொல்வீர்கள்?”
தீண்டாமைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியது; ஈரோடு, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் பட்டியல் சாதி யினரை அழைத்துக் கொண்டு கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியது உள்ளிட்ட பலவற்றைக் கூறமுடியும். ‘பறையன் பட்டம் போகாமல், சூத்திரன் பட்டம் போகாது’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத் தினார், பெரியார். பட்டியல் சாதியினரைத் தனியாகக் குடியமர்த்துவதை ஒருபோதும் அவர் ஆதரித்தது இல்லை. தனிக் கிணறு, தனிக் கோயில் இல்லாமல் பொதுக் கோயில் என்பதில் தெளிவாக இருந்தார்.
“பெரியாரியல் என்பது ஒரு தத்துவமே இல்லை என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வது பற்றி?”
(சிரித்துக் கொண்டே) “பெரியாரியல் என்ற தலைப் பில் இரண்டு தொகுதிகள் நானே எழுதியிருக்கிறேனே! பெரியாரியம் என்பது சூத்திரன் பட்டத்தை ஒழிப்பது-மோடி, கருணாநிதி உள்ளிட்டோரையும் அரசியல் சட்டம் சூத்திரன் என்று தானே இன்றும் சொல்கிறது. அதற்கு எதிரான வேலைகளைச் செய்வதுதான் பெரி யாரியம். ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சொல்வது பெரியாரியம். அது தத்துவம் இல்லையா?”
“திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கோயிலுக்குச் செல்வது தொடர்பாக, தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறதே?”
அண்ணா, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என ஏற்றுக்கொண்டார். அதனால், அவர்களைக் குறை கூறி ஒன்றும் நடக்கப் போவதில்லை. கடவுள் எதிர்ப்பை மையப்படுத்தி தி.மு.க.வை அளவிட வேண்டாம். இந்தி எதிர்ப்பு என்னாச்சு, மாநில சுயாட்சி என்னாச்சு, வர்ணாசிரமம் ஒழிப்பு என்னாச்சு, தீண்டாமை ஒழிப்பு என்னாச்சு... அதையெல்லாம் கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கை களுக்கான செயல்பாட்டில் பெரும் பின்னடைவில் இருக்கிறோம். அவ்வளவுதான்.
வே.ஆனைமுத்து அவர்களுடன் ‘ஆனந்த விகடன்’ இதழின் தமிழ்மகன், விஷ்ணுபுரம் சரவணன் நிகழ்த்திய நேர்காணல்
நன்றி: கீற்று.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,