நெஞ்சம் மறப்பதில்லை,

 பாடாத பாட்டெல்லாம் பாட வந்தார்!கம்பீரக் குரல், கானக்குரல், கந்தர்வக் குரல் என எத்தனையோ குரல்களைப் பதிவு செய்து ரசிகர்களின் செவிகளில் பருக விட்டிருக்கிறது தமிழ் சினிமா திரையிசை. ஆனாலும், இந்தக் குரலின் இனிமை ரசிகர்கள் மனதிலிருந்து ஒருபோதும் நீங்காது. இந்த இனிய குரல் கேட்காது இதயங்கள் இரவினில் தூங்காது. நீங்காத நினைவலைகளை நெஞ்சக்கரையில் மோத விட்டுக்கொண்டேயிருக்கும் இந்தக் குரல் யாருடையது?
தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத பெயர். 1930-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22-ம் தேதி, ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் பிறந்த இந்த கானக்குயிலுக்கு, சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஒரு ஈர்ப்பு. தந்தை அரசு ஊழியர். தாயார் இசை ஆர்வம் மிக்கவர்... தாயின் ஆர்வம், தனயனையும் தொற்றிக்கொண்டது ஆச்சரியமல்லவே!.
பி.பி.ஸ்ரீனிவாஸின் மாமா, நாடகக் கலைஞர் என்பதால், ஸ்ரீனிவாஸுக்கு 12 வயது இருக்கும்போது தான் நடித்த நாடகத்தில் பாடுவதற்கு வாய்ப்பு அளித்தார். இந்த மேடையில்தான் மெல்லிய பூங்காற்றாய் புறப்படத் தொடங்கியது பி.பி. ஸ்ரீனிவாஸின் இசைப் பயணம். பி.காம். பட்டப்படிப்பை முடித்து, இந்தி மொழியையும் கற்றுத் தேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸின் இசை ஆர்வம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது.
பள்ளி நாட்களில் இருந்தே Mohammed Rafi குரல் மீது குறையாத காதல் கொண்டு வளர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், பட்டப்படிப்புக்குப் பிறகு இசைதான் தமக்கேற்ற உலகம் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், பி.பி.ஸ்ரீனிவாஸின் முடிவு சரிதானா?. இசைத்துறையில் ஸ்ரீனிவாஸால் சாதிக்க முடியுமா?. என ஒரு ஜோசியரிடம் பி.பி. ஸ்ரீனிவாஸின் தந்தை கேட்க, இசைத்துறையில் பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு எதிர்காலமே இல்லை என ஜோசியர் பதிலளித்தாராம். இந்த ஜோசியம் பலிக்காமல் போனது. பகல் கனவாய் ஆனது. அதனால் ரசிகர்களுக்குக் கிடைத்த இவரின் இசை விருந்து தெவிட்டாத தேனானது.
ஸ்ரீனிவாஸின் திரை இசை வாழ்க்கை 1951-ல் தொடங்கியது. அப்போது வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில்தான் ஸ்ரீனிவாஸின் கானம் ஒலித்தது. காற்றைக் கிழித்தது. ''சிந்தனை என் செல்வமே" என்ற இவரது முதல் தமிழ்ப் பாடல் 1953-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 'ஜாதகம்'. இசைத்துறையில் பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு எதிர்காலமே இல்லை என்று சொன்ன ஜோசியம் பலிக்கவில்லை. ஆனால், ஜாதகம் பலித்தது. திரை இசைத்துறையில் தித்திக்கும் பல பாடல்களைத் தரத் தொடங்கினார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
ஆங்கிலம், உருது உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். மதுவண்டு என்ற புனைபெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப் பாடல்களை இவரே இயற்றினார்.
தமிழ்த் திரையிசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியைக் கொண்டுவந்தவர், பி.பி. ஸ்ரீனிவாஸ்.
காலத்தால் அழியாத 'காலங்களில் அவள் வசந்தம்' எனும் காவியப் பாடல் உட்பட பல பாடல்கள், பி.பி. ஸ்ரீனிவாஸின் வசந்த குரலால் வான்புகழை எட்டின. ஏ.எம்.ராஜாவுக்குப் பிறகு, காதல் மன்னன் ஜெமினி கணேசனின் குரலாகவே ஒலித்த பி.பி.ஸ்ரீனிவாஸ், அவருக்காகப் பாடிய பல பாடல்கள். சுவை தரும் பலாப் பாடல்கள்.
கன்னடத்தில் ராஜ்குமார் முன்னணி நாயகனாக வலம் வருவதற்கு, பி.பி.ஸ்ரீனிவாஸின் பின்னணியும் ஒரு காரணம். அநேகமாக பெரும்பாலான அவரின் அனைத்துப் படங்களிலும் பி.பி. ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடியுள்ளார்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள், மயக்கமா கலக்கமா, பால் வண்ணம் பருவம் கண்டு, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, சின்ன சின்ன ரோஜா, சின்ன சின்ன கண்ணனுக்கு, நீயோ நானோ யார் நிலவே, நெஞ்சம் மறப்பதில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், புரியாது, வாழ்க்கையின் ரகசியம் புரியாது, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற ஸ்ரீனிவாஸ் பாடல்களை நெஞ்சம் மறக்குமா?
தனது குரலால், காற்று மண்டலத்தையே இனிப்பாக்கி வைத்திருந்த பி.பி.ஸ்ரீனிவாஸிடமிருந்து, 2013-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி, அவரது சுவாசக் காற்று விடை பெற்றது.
பாட்டு... உறங்கிக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை எழுப்பிவிடுகிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், பாட்டுக் கேட்டுக்கொண்டே விடியும் வரை உறங்காதிருப்பதும் ஒரு சுகமான அனுபவம்.
அந்த சுகமான அனுபவத்தைத் தந்தன, பி.பி. ஸ்ரீனிவாஸின் பாடல்கள்...
(பி.பி.ஸ்ரீனிவாஸ் நினைவு நாள்- ஏப்ரல் 14, 2013)
லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,

நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,