ஒத்துழைப்பு
ஒத்துழைப்பு
--வெ,பெருமாள்சாமி
காலை வெந்நீர் தேநீர் முடித்து
மேலே ஏறினேன்
தயக்கமாகத்தான்..
என்ன அடங்கு இது
உலகம் இயங்கலாம்தானே..
மரங்கள் எதுவும் அசையவில்லை
தூங்குமூஞ்சி மரம் சரி..
மற்றவையும் ஏன்.
பறவைகள் எவையும் இல்லை
அடுக்கக உச்சியில்
முணுமுணுக்கும் புறாக்களும் காணோம்..
நேற்றே பேருந்து பிடித்து
ஊர்களுக்குப் போய்விட்டனவா..
பூங்கா வெறிச்சோடியிருந்தது
நடைபயில்பவர்கள் இல்லாமல்..
நடப்பதா வேண்டாமா..
நல்லவேளை..
பக்கத்து வீட்டுக்காரர்
மாடித் தோட்ட செடிகளுக்குத்
தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்;
இந்தப் பக்கம் கீழே
மூலையில் காவலர்
பாத்திரம் துலக்குகிறார்..
அருகில் நம் பழைய
கருப்பர் நடமாடுகிறார்..
மாடிகளின்
ஏதாவது வளையிலிருந்து
'பகதூ..ர்' என்றழைக்கும்
குரல்கள் இன்று அடக்கம்..
எதிரே அர்பேசியாக்காரர்
தெருவைக் கூட்டித்
தூய்மை செய்கிறார்..
ஒற்றைக் காகம் தனியாக
குறுக்காக மேற்பறந்தது..
அப்பாடா..
ஊர் இயங்குகிறது.
முதல் இரண்டு சுற்றில்
கை தட்டுவது பழக்கம்
இன்று தட்டினால்
ஊரை எழுப்பிவிடுவேனோ
யோசனையாக இருந்தது..
ஒருவழியாக நடந்து,
சத்தமில்லாமல்
மூச்சுப் பயிற்சி முடித்துக்
கீழிறங்கினேன்..
--வெ,பெருமாள்சாமி
Comments