கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்ற உறுப்பினர்
ஏ. ராஜா: கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவியேற்ற உறுப்பினர் - யார் இவர்?
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ராஜா, தனது தாய்மொழியான தமிழ்மொழியில் எம்எல்ஏ ஆக பதவியேற்றுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஏ. ராஜா ஆகிய நான்…
கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த நிலையில், கேரளாவின் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுடன் இன்று (மே 24, திங்கட்கிழமை) தொடங்கியது.
அப்போது நடந்து முடிந்த தேர்தலில், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழரான ராஜாவும் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,848 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, இன்று நடைபெற்ற நடப்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பதவியேற்ற ராஜா தமிழ் மொழியில் பதவியேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
"ஏ. ராஜா ஆகிய நான் சட்டமன்ற பேரவையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், சட்டப்படி அமலில் உள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்திடம் நான் உண்மையான விசுவாசமும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் பொறுப்பேற்க இருக்கிற கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி கூறி அவர் பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அவற்றை பதிவு செய்த பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சு. வெங்கடேசன், "கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்
" என்று தெரிவித்துள்ளார்.நன்றி: பிபிசி தமிழ்
Comments