கசப்பான அனுபவங்கள் மட்டுமே பரிசு!'

 

கசப்பான அனுபவங்கள் மட்டுமே பரிசு!'' அடையாறு பள்ளியில் சந்தித்த பிரச்னைகள் பற்றி நடிகை கெளரி கிஷன்!


சென்னையின் பிரபலமான பள்ளியில் நடைபெற்ற பாலியல் சீண்டல் அத்துமீறல்களைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் பல சிறுமிகள், தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் அமைதியைத்தான் இதுகாறும் இத்தகைய விஷமத்தனமிக்க நபர்கள் பயன்படுத்திவந்தார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருப்பதே, மாற்றத்துக்கான விடியல்தான். தற்போது இந்த வரிசையில், '96', 'மாஸ்டர்', 'கர்ணன்' உட்பட பல படங்களில் நடித்த கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நடந்த கசப்பான பள்ளி அனுபவங்களைப் பகிருந்திருக்கிறார். அதன் சுருக்கம் இங்கே.

கடந்தகால நிகழ்வுகளைத் திரும்பி நினைவுபடுத்திப் பார்ப்பதென்பது ஒருவித நல்ல எண்ணங்களை உருவாக்கும் என்பது உண்மைதான். ஆனால், சிறுவயதில் நிகழ்ந்த துர்சம்பவங்கள் அப்படியானதொரு அனுபவத்தை என்றுமே தராது. பள்ளி என்பது ஒரு மாணவரின் குணநலங்களை வார்த்து எடுக்கும் இடமாக இருக்க வேண்டும். மாறாக அவர்களை ஒருவித மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்வதாக இருக்கக்கூடாது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு , நான் படித்த பள்ளி ஆற்றாமையையும், கசப்பான அனுபவங்களையும் மட்டுமே பரிசாகத் தந்தது.


PSBB பள்ளியில் நடந்த சம்பவங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல, நான் படித்த இந்து உயர்நிலை பள்ளியில் நிகழ்ந்த சம்பவங்கள். அடையாறில் இருக்கும் இந்தப் பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து என்னுடன் படித்த நபர்களுடன் மீண்டும் பேசினேன். உருவ கேலி, சாதி ரீதியிலான வசை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் , பெண்களைக் கேலி செய்தல் போன்றவை தொடர்ந்து நடைபெற்றது. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த என்னைப் போன்ற பலர் இந்தக் கொடுமைக்கு ஆளானார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அதீத மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை. அதே சமயம், பள்ளிகளில் கலாசார ரீதியில் மிகப்பெரிய சமூக மாற்றம் வந்தே தீர வேண்டும். பத்ம சேஷாத்ரி பால பவன், செட்டிநாடு வித்யாஷ்ரம் போன்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் துயரக் கதைகளைப் படிக்கையில் என் பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்படியான கசப்பான அனுபவங்களைக் கடந்து பலர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதைக் கண்டு ஆறுதல் அடைகிறேன். ஆனால், பள்ளிகளில் நடக்கும் கொடுமைகள் என்பது எக்காலத்திலும் அழியாத வடுக்கள். பின்னாட்களில் நம்மால் சந்திக்கவியலாத பல பிரச்னைகளுக்கு, இவை தான் அடிநாதம். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், இவற்றை எல்லாம் பதிவிடுவதுதான் மூலம் ஏதோ பெரிய பாரத்தை என் மனதில் இருந்து இறக்கி வைத்திருப்பதை போன்று உணர்கிறேன். ஆனால், எல்லோரும் இதுபோன்று உடைத்துப் பேச வேண்டும் . ஒவ்வொரு பள்ளியிலும் நடந்த விஷயங்களை வெளிப்படையாக பேச ஆரம்பிக்க வேண்டும். அது மட்டுமே, நாம் நம் பள்ளியில் அடுத்து பயிலவிருக்கும் மாணவர்களுக்கு செய்யும் உதவியாகும். அடுத்த தலைமுறை இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகாமல் இருக்க நாம் துணை நிற்போம். அதையும் வேடிக்கைப் பார்க்கும் தலைமுறையாக, வெற்று சாட்சியங்களாக மாறாமல் இருப்போம்'' என்று எழுதியிருக்கிறார் கெளரி.


courtesy:https://www.vikatan.com/news

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,