#டீராஃபிக் ராமசாமி : ஒரு சமூகத்தின் மனசாட்சி
#டீராஃபிக் ராமசாமி : ஒரு சமூகத்தின் மனசாட்சி
*
பிருந்தா சாரதி
*
அய்யா....
சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்கு செய்பவராக அவ்வப்போது உங்களைப் பார்த்து இருக்கிறேன்.
சாலைகளை மட்டுமல்ல ...
சமூகத்தின் அத்துமீறல்களையும் ஒழுங்கு செய்பவராகவும் பின் அறிந்தேன்
உங்கள் பொதுநல வழக்குகள் மூலம்.
உடல்நலனை பாதுகாக்க மருத்துவமனை போகும் வயதில்
பொது நலனுக்காக நீங்கள் நீதிமன்றத்தில் போராடினார்கள்.
அதுவும் தனிமனிதனாக... அதனால்தான்
உங்களை
ஒன் மேன் ஆர்மி என்று ஊர் போற்றுகிறது இன்று.
சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து செல்பவர்களை
சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவீர்கள் ...
உங்கள் போராட்டத்தின் மூலம்
சட்டத்தின் வலிமையை அவர்களுக்கு உணர்த்துவீர்கள் .
தலை தாழாமல் போராடும் நெருப்பைப் போல
நீங்கள் அயராமல் போராடினீர்கள்.
வயதான நெருப்பு சுடாதா என்ன?
'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?' என்ற பாரதி பாடியது
உங்களுக்காகத்தானோ?
தாங்கும் சக்தி இல்லாததால் உங்கள் நெருப்பை அணைக்க முயன்றவர்கள் உண்டு. ஆனால் நீங்கள்
பாஸ்பரஸ் போல
அமைதியாக இருந்தீர்கள்
அணையாமல் எரிந்தீர்கள்.
சட்டத்தைதான் நீங்கள் உங்கள் ஆயுதமாக ஏந்தினீர்கள்.
ஆனால் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி இல்லை.
உங்கள் உயிருக்குக்
குறி வைத்தார்கள்.
துப்பாக்கி ஏந்திய காவலர்களை
நியமித்தது நீதிமன்றம்
உங்கள் பாதுகாப்புக்கு என.
நீங்கள் பாதுகாக்கப்பட
வேண்டிய ஒரு சமூகத்தின் மனசாட்சி என்பதை உரத்துச் சொன்னது
அந்த உத்தரவு.
தராசை ஏந்திய நீதி தேவதை
மற்றொரு கையில் ஆயுதமும் ஏந்தியவள் என்பதை உலகிற்கு உணர்த்தியது அது.
பாதுகாப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தீர்களே...
அக்கட்டடங்களையாவது அகற்றிவிடலாம்
ஆனால் கட்டடங்களை விடவும் தடித்த சுவர்கள் சமூகத்தில் நிற்கின்றன
வழி மறித்துக்கொண்டு
கண்ணுக்குத் தெரியாமல்....
அவற்றை இடிப்பது எந்த வழக்கு?
இனி விடை அளிப்பது
எந்தக் கிழக்கு?
*
#traficramasamy
by பிருந்தா சாரதி
Comments