பாலகுமாரன் என்ற ஆளுமை உருவானது எப்படி

 * பாலகுமாரன் என்ற ஆளுமை உருவானது எப்படி? அதற்குப் பின்புலமான சூழல் எவை?











தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி கிராமம் தான் நான் பிறந்த ஊர். அந்த ஊரில் ஓர் அந்தணக் குடும்பத்தில், 1946ல் பிறந்தேன்-. பெரிய வசதியில்லை என்றாலும், மூன்று வேளை சாப்பாடு உத்தரவாதம். நல்ல சூழல் இல்லை. அம்மா சுலோச்சனா கெட்டிக்காரி. தமிழ்ப் பண்டிதை.
நான், கனவிலேயே வாழ்ந்தவன். அப்போதிலிருந்தே ரொம்ப ரசனையுண்டு. வயல்வெளி, கொக்கு, குருவிக்கூடு என்று எல்லாவற்றையும் ரசித்து ரசித்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வாத்தியார்களுக்கு சொல்லித்தரத் தெரியவில்லை என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது. உண்மையில் எனக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போக, மூன்றாம் தர வாத்தியார்கள் தான் காரணம் என்று சொல்லலாம்.
புட்பால், பேன்ட், ஷர்ட் எல்லாம் வேஸ்ட்டுன்னு தோணும். மடத்துல சேர்ந்துடக் கூட நினைச்சேன்.
* ஆரம்ப காலத்தில் வாசிப்புப் பழக்கம் எப்படி ஏற்பட்டது? எந்தவிதமான வாசிப்பை விரும்பினீர்கள்?
இதுதான் இதுதான்னு மண்டையில ஏத்தின எதுவுமே ஏறலை. தேடல் பற்றிய புரிதலுக்கு இலக்கியம் தான் உதவி செஞ்சது. அதுக்கு முக்கியமான காரணம், அம்மாவோட இலக்கிய அறிமுகம் தான். அகநானுாறு, புறநானுாறு, தேவாரம், திருவாசகம்னு எல்லாத்தையும் திரும்பத் திரும்ப வாசிச்சேன். இதெல்லாம் மேலும் மேலும் கனவில் ஆழ்த்தியது. வாழ்க்கை எப்படி எப்படின்னு இருப்புக் கொள்ளாமத் தவிச்சிருக்கேன். ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடி வாசிப்பேன். எல்லாரும், எம்.ஜி.ஆர்., - சிவாஜின்னு ரெண்டு கட்சியா இருப்பாங்க. நான் மட்டும் அப்படியில்லாம நடுநிலையா இருப்பேன். அம்மா ஏற்படுத்தி வெச்சிருந்த நுாலகத்தின் புத்தகங்களை எல்லாம் வாசிச்சேன். பழந்தமிழ் இலக்கியம், பழங்காலக் கோயில் இது தான் என்னை வார்த்தெடுத்தது.
* வளர்ந்த பிறகு உங்கள் தேடல்களுக்கான விடைகள் கிடைத்ததா? கனவுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையேயான உணர்வுகளை எப்போது பெற்றீர்கள்?
கனவாகவே தொடங்கினேன். பழந்தமிழ் வாசிப்புகளை திரும்பத் திரும்ப செய்தும் அப்படியே தான் இருந்தது. படிப்பு முடிச்சதும் டிராக்டர் கம்பெனியில் வேலை. அங்கே தான் மனித மனங்களை உற்று நோக்கத் தொடங்கினேன். பலவிதமான மனிதர்களைப் பார்த்த பிறகு படிப்படியாக நடைமுறை வாழ்க்கை புரிஞ்சது.
லஞ்சம் வாங்கற மனுஷன், வெள்ளிக்கிழமை பூஜைக்கு பணம் வசூலிச்சு அதில பாதிய மட்டும் செலவு பண்றவன், அலுவலகத்துல ஸ்வீட் கொடுத்தா வீட்டுக்குச் சேர்த்து வாங்கிட்டுப் போறவன், தண்ணியடிக்க பாருக்குப் போறவன்னு பலதரப்பட்ட மனித மனங்கள். எல்லாத்தையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன்.
* எழுத்துப் பயணம் தொடங்கியது பற்றி...
தொடக்கத்துல கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதன் பிறகு உரைநடை என்னை முழுசா ஈர்த்தது. என்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடங்கியதுல, 'கசடதபற' இதழுக்கு முக்கியப் பங்குண்டு. குமுதம் எஸ்.ஏ.பி., அண்ணாமலை என்னை ரொம்ப ஊக்கப்படுத்தினார். திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, உடனடியா ஒரு சிறுகதை எழுதித் தர முடியுமான்னு கேட்டார். ஆனா, நான் ரெண்டு சிறுகதை எழுதி எடுத்துட்டு போய் கொடுத்தேன்.
அதுக்குப் பிறகு, எழுத்தாளர் சாவி கூப்பிட்டார். எழுத பல வாய்ப்புகள் வந்தன. 'இதயம் பேசுகிறது' மணியனும் எழுதற வாய்ப்புகள் தந்தார். குமுதம், கல்கின்னு தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன்; ஈசியா நகர்ந்தேன்.
* உங்களோட கதாபாத்திரங்களின் வடிவத்தை எப்படி உருவாக்கறீங்க? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோட கதைகளில் தெரியக் காரணம் என்ன?
சுற்றியிருந்த மனிதர்களைப் படிச்சேன். அதுதான் என்னோட எழுத்தாகவும் ஆனது. என் கதைகளில் நல்லவன், கெட்டவன், ஹீரோன்னு யாருமில்லை. எல்லாருமே மனுஷந்தான். மனுஷ வாழ்க்கையே அப்படித் தான்; நல்லதும் கெட்டதும் கலந்தது தான்.
அவன் நன்றாக பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான், கொஞ்சினான்னு எல்லாம் நல்லதை மட்டுமே எழுதறது சரியில்லை. எல்லாத்தையும் தான் எழுதணும். மனுஷங்களை உற்றுப் பார்த்து, அவர்களை உரிச்சுத் தான் எல்லாத்தையும் எழுதினேன். ஒவ்வொருத்தரோட தனித்தனியான வாழ்க்கையும் தனித்த விதமானது தான்.
பாலகுமாரன் பேட்டி
நன்றி: பெண்மை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,