குலாம் காதிறு நாவலர்.

 தமிழிலக்கிய வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பரியது. உமறுப்புலவர், சேகனாப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், ஜவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, செய்குதம்பிப் பாவலர் எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம்.


இந்த வரிசையில் வைத்து மதிப்பிடத் தக்கவர் குலாம் காதிறு நாவலர்.

இவர் நாகூரில் 1833ம் ஆண்டு பிறந்தார். தந்தை பாஸ்கரப் பண்டித வாப்பு ராவுத்தர் மருத்துவத்திலும் தமிழிலும் தேர்ந்திருந்தார். தந்தைவழி தனயனுக்கும் தமிழறிவு வாய்த்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மார்க்கக் கல்வியும் தமிழும் பயின்றார். முகைதீன் பக்கீர் சாகிபிடம் அரபியைக் கற்றுத் தேர்ந்தார். பத்துவயதுக்குள் திருக்குர்ஆனை முழுமையாகக் கற்றறிந்தவரானார். தமிழின் அடிப்படைகளைப் பதினாறு வயதுக்குள் கற்றார். ஆங்கிலத்தைத் தந்தையின் நண்பரான சரவணப் பெருமாளையரிடம் பயின்றார். தமிழ், அரபி, ஆங்கிலம் மும்மொழிகளிலும் தேர்ந்தவரானார். இந்நிலையில் திடீரென தந்தையார் காலமாகவே கல்வி தடைப்பட்டது. பெரியதந்தை அரவணைத்து மேலே கற்க உதவினார். நாராயணசுவாமிப் புலவர் என்பவரிடம் இலக்கணம், இலக்கியம், நிகண்டுகள், அகராதிகள் அனைத்தையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தமிழறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் குருகுலவாசமாக சைவசித்தாந்தம், இதிகாச, புராணங்களைப் பயின்றார். ஆசுகவியாகப் பாடலியற்றும் திறன் கைவந்தது.

ஆரம்பத்தில் தனிப்பாடல்கள் பலவற்றை இயற்றியவர், 'பிரபந்தத் திரட்டு' என்னும் செய்யுள்நூலை எழுதிப் புகழ்பெற்றார். அது 'சச்சிதானந்தன் பதிகம்', 'இரட்டை மணிமாலை', 'முனாஜாத்து திருநகை', 'யமக பதிற்றந்தாதி', 'நாகைப்பதிகம்', 'முனாஜாத்து' ஆகிய செய்யுள் நூல்களின் தொகுப்பாகும். இந்நூலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருங்கே இருந்தது. குலாம் காதிறு நாவலர் மீது காழ்ப்புக்கொண்ட சக இஸ்லாமியப் புலவர்கள் இந்த நூலைப் 'பிரபந்த இருட்டு', 'பிரபந்தப் புரட்டு', 'பிரபந்த மருட்டு' என்றெல்லாம் வசைபாடினர். அதுகண்டு நாவலர் மனம் வருந்தினாலும் கலங்காமல் படைப்பு முயற்சியைத் தொடர்ந்தார்.
வானென்னை? பூமென்னை? எல்லாம் உனது வலிமை என்றே
யானென்னை யுமுன்னைப் போற்றிநிற் கின்றன ஐயஅடி
யேனென்னைக் காப்பது நீ யேயல்லா தில்லை இப்பொழுது
நானென்னை செய்வலடா? சச்சி தானந்த நாயகனே!
என்று எல்லா மத இறைவனுக்கும் பொருத்தமாக இருக்கும்படி சச்சிதானந்தப் பதிகத்தில் அவர் பாடியுள்ள பாங்கு வியக்கத்தக்கது.
சிலகாலம் பினாங்கிற்குச் சென்று இவர் வசிக்க நேர்ந்தது. அக்காலத்தில் இவர் "வித்தியா விசாரிணி" என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். தமிழிலக்கியம், மார்க்கக்கல்வி, வாழ்க்கைமுறைகள் போன்றவைபற்றிய செய்திகளை அது தாங்கியிருந்தது. அந்த இதழுக்கும் இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'முஸ்லிம்நேசன்' இதழுக்கும் அடிக்கடி கருத்துமோதல் நிகழ்ந்தது. இதனால் நாவலரின் பெயரும் புகழும் பரவியது. இஸ்லாமியர் மட்டுமல்லாது, பினாங்குத் தமிழர்களாலும் நாவலர் மதிக்கப்பட்டார்.
சில ஆண்டுகால பினாங்கு வாசத்திற்குப் பிறகு நாகூர் திரும்பிய நாவலர் தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார். அவருக்கு வாய்த்த புகழ் சிலருக்கு எரிச்சல் மூட்டியது. 'நாவலர்' என்ற பெயர் ஆறுமுக நாவலருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குலாம் காதிறு 'தான்தோன்றிப் புலவர்' என்பதைக் குறிக்கும் வகையில் 'தானாப்புலவர்' என்றும் சிலர் கிண்டல் செய்தனர். 'ஆரிபுநாயகம்' என்னும் நூலை இயற்றிமுடித்திருந்த நாவலருக்கு இலங்கையிலிருந்து அழைப்பு வந்தது. 'நாவலர்' பட்டத்துக்கு இவர் தகுதியுடையவரா என்று சோதிக்க எண்ணினர். நாவலர் அழைப்பை ஏற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நாளில் 'ஆரிபுநாயகம்' நூல் அரங்கேறியது. பல அறிஞர்கள் அவரது நூல்மீது பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். அனைத்துக்கும் அவர்கள் ஏற்குமாறு விளக்கமளித்தார் நாவலர். ஆறுமுக நாவலரைப்போலவே குலாம் காதிறு புலவரும் தேர்ந்த அறிஞர்தாம் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆறுமுக நாவலரின் உறவினரான பொன்னம்பலப் பிள்ளை,
நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்..
என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டி 'நாவலர்' என்ற பட்டத்தை அளித்தார். இதுபற்றிய செய்திகளும் பத்திரிகைகளில் வந்தன. அது முதல் நாகூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவரானார் குலாம் காதிறு நாவலர். தொடர்ந்து இலக்கண விளக்கங்கள், காப்பியங்கள், புராணங்கள், மாலை, கோவை, அந்தாதி, கலம்பகம், பதிகம், ஆற்றுப்படை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் நூல்களைப் படைத்தார்.
முகமது நபிகள்மீது பாடிய 'மும்மணிக் கோவை'யும், நாகூரில் அடங்கப்பெற்றிருக்கும் ஆண்டகையாம் ஷாகுல் ஹமீது நாயகத்தின்மீது பாடிய 'நாகூர்க் கலம்பக'மும் குறிப்பிடத்தக்க நூல்களாகும். 'நன்னூல் விளக்கம்' இலக்கண நூல். 'சீறாப்புராண வசனம்', 'ஆரிபுநாயகப் புராண வசனம்', 'நாவலர் திருமக்காத் திரிபந்தாதி', 'மதினாக் கலம்பகம்', 'பகுதாதுக் கலம்பகம்', 'முகாஷபா மாலை', 'பஹனஷா வசன காவியம்', 'தசரத்தினமாலை', 'குவாலீர்க் கலம்பகம்', போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. 'மக்காக் கோவை', 'சச்சிதானந்த மாலை', 'சமுத்திர மாலை', 'மதுரைக் கோவை', 'குரு ஸ்தோத்திர மாலை', 'பத்துஹுல் மிஸிர்', 'பஹனாஷாப் புராணம்' ஆகியவையும் இவர் எழுதியனவே. மற்றொரு முக்கியமான நூல் 'நாகூர் புராணம்'. நாகூர் ஆண்டவர்மீது பாடப் பெற்றது. நாகூர் தர்கா ஷரீஃபின் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது 'தர்கா மாலை'. இவர் நாகூர் தர்காவின் மகா வித்வானாக நியமனம் செய்து கௌரவிக்கப் பெற்றார்.
நாகூர் குலாம் காதிறு நாவலரின் முக்கியமான கொடையாகக் கருததக்கது அவர் நாகூர் ஆண்டவரின் வரலாற்றை 'கன்ஜூல் கறாமத்து' என்பதாக வசனநடையில் எழுதியதுதான். எளிய தமிழில், தெள்ளிய உரைநடையில் பாமரருக்கும் புரியும்படி இந்நூலை எழுதியிருந்தார். தமிழில் வெளியான அக்கால உரைநடைநூல்களுள் இந்நூல் குறிப்பிடத்தகுந்ததாகும். (இந்நூலை இணையத்தில் வாசிக்க/பதிவிறக்க.
இந்தக் காலகட்டத்தில் நாவலரைச் சோதித்துப் பார்க்கவந்த தமிழ்ப் பேராசிரியரும், "இலக்கணக் கோடறி" என்று அழைக்கப்பட்டவருமான பிச்சை இப்ராகிம் புலவர், நாவலரின் அறிவுத்திறனை அறிந்து அவரது மாணவரானார். அவரது வேண்டுகோளுக்கிணங்க 'பொருத்த விளக்கம்' என்ற இலக்கண விளக்கநூலை எழுதினார். இதற்கு சுதேசமித்திரன் போன்ற இதழ்களிடமும் தமிழறிஞர்களிடையேயும் நல்லவரவேற்பு கிடைத்தது. நூல்பற்றி அறிந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நாவலரின் நண்பரானார். நாவலர், தேவரிடம் தமிழுக்கென்று ஓர் சங்கம் அமைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். தேவரும் ஒப்புக்கொண்டார். அதுவே மதுரையில் 'நான்காம் தமிழ்ச்சங்கம்' அமைய வழிவகுத்தது. நாவலர் அதன் முதற்பெரும் உறுப்பினரானார். தேவரின் வேண்டுகோளுக்கிணங்கி, 'மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராற்றுப்படை' என்ற நூலை இயற்றி அரங்கேற்றினார். தொடர்ந்து சங்கத்தின் சார்பாக இசையிலக்கண நூலான 'இசைநுணுக்க இன்பம்' என்பதையும், நாட்டியக்கலை நுணுக்கம் கூறும் 'அபிநய ஒத்து' என்னும் நூலையும் படைத்தார். இவர் இயற்றிய 'மதுரைக் கோவை' முக்கியமானது. இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்ததால் "நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர்" என்று நாவலர் போற்றப்பட்டார். சோழவந்தான் புலவர் அரசன் சண்முகனார் இவர்தம் இலக்கண, இலக்கியப் புலமையைப் போற்றிப் பாராட்டினார். சக புலவர்களால் 'புலவர் குலமணி', 'வித்வஜன சேகரர்' என்றெல்லாம் நாவலர் புகழப்பட்டார்.
மொழிபெயர்ப்பிலும் திறமையைக் காட்டினார் நாவலர். ரெயினால்ட்ஸ் எழுதிய 'உமறு' என்னும் நாவலைத் தமிழில் 'உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறு முப்பதுக்குமேற்பட்ட நூல்களை நாவலர் படைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இவரது மாணவர்களுள் ஒருவர் மறைமலை அடிகள்.
திருக்குர்ஆன் முழுமைக்கும் விரிவான உரையெழுத வேண்டுமென்பது நாவலரின் லட்சியமாக இருந்தது. அது நிறைவேறாமலேயே ஜனவரி 28, 1908 அன்று அவர் காலமானார். இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கே வாசிக்கலாம்.
நாவலரின் மகன் ஆரிபு நாவலரும் சிறந்த புலவராகத் திகழ்ந்தார். கவிதை, செய்யுள், பதிகம், உரைநடை எனப் பல நூல்களை எழுதினார். 'நாகூர் நாயகம் பிள்ளைத் தமிழ்', 'மீரான் சாகிப் முனாஜாத்து ரத்தின மாலை', 'காட்டுப்பாவா பக்ருதீன் சாகிப் வலியுல்லாவின் வாழ்க்கை வரலாறு' போன்றவை அவரது நூல்களில் குறிப்பிடத்தகுந்தவை. இவர் 1976ல் நாகூரில் காலமானார். ஆரிபு நாவலரின் புதல்வர், குலாம் ஹுசைன் நாவலரும் சிறந்த இலக்கிய ஆர்வலர். தந்தை, பாட்டனார் வழி பல்வேறு இலக்கியங்களைப் படைத்துவருகிறார்.
(தகவல் உதவி: ஏவி.எம். நசீமுத்தீன் எழுதிய நாகூர் குலாம் காதிறு நாவலர் நூல் (சாகித்ய அகாதமி வெளியீடு) மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)
பா.சு.ரமணன்
நன்றி: தென்றல்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,