தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு IAS

 தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு IAS - கொஞ்சம் குறிப்பு


நடுத்தரக் குடும்பத்தில் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக சேலம் நகரில் 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதியில் பிறந்தார். தலையைச் சுற்றி காதைத் தொடும் பள்ளிக்கூட அனுமதியில் கை எட்டாததால் பிறந்த நாள் ஜூன் 16 என்று மாற்றப்பட்டது. தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால் அவருடைய பெயரும் சகோதர சகோதரிகளைப்போல தமிழ்ப் பெயராகவே இயற்றப்பட்டது.
சின்ன வயதிலேயே மேடையில் பேசும் பயிற்சி தரப்பட்டதால் மாவட்டத்தில் நடக்கிற பேச்சுப் போட்டிகளிலெல்லாம் அவருடைய குடும்பத்திற்கே அத்தனை பரிசுகளும் வந்து சேரும். அப்படி துளிர்விட்டதுதான் படிக்கிற ஆசை. தமிழில் படித்ததால் தாய்மொழியில் பேசவும், எழுதவும் சிக்கலில்லாத திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது. அருகிலிருக்கிற பள்ளியே சிறந்த பள்ளி என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் பள்ளிக்கு அருகிலேயே குடியிருக்க தந்தை செய்த முயற்சி அவர்கள் கல்வியைச் செதுக்கவும், செம்மையாக்கவும் உதவியது.
கல்லூரிப் படிப்பு கோவையில். பயிர்களையும், பசுமையையும் நேசிக்கும் அவருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை படிக்கும் அனுபவம் கிடைத்தது. அக்கல்லூரியில் அவர் அதிகம் நேசித்தது அங்கிருக்கும் தாவரவியல் பூங்காவை. அங்குதான் ஓய்வு நேரங்களில் அவருடைய இலக்கிய முயற்சிகள் தொடங்கின.
கல்லூரியை முடித்ததும் அரசின் வேளாண் துறையில் வேளாண் அலுவலராக ராயக்கோட்டையில் பணியில் சேர்ந்தார். அங்கிருக்கும் சிற்றூர்களுக்குச் செல்லும்போது வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டால்தான் ஓரளவு சமூகப் பங்களிப்பு நிகழும் என்பதை உணர்ந்தார். அப்போது குடிமைப் பணித் தேர்வு எழுத முடிவெடுத்தார்.
முதல் முறை இந்திய வருமான வரிப் பணியில் தேர்வாகி, பயிற்சி பெற்று, வருமான வரி உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்தார். இரண்டாம் முறை தேர்வெழுதி இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தார்.
பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியதால் அவருடைய அனுபவங்களும், அறிவும் செறிவு பெற்றன. அவருடைய எழுத்தும் பேச்சும் பல நேரங்களில் அரசுப் பணிகளை உரிய முறையில் செய்ய அறிமுகமாக அமைந்தன.
தமிழகத்து இளைஞர்கள் அறிவிலும், ஆற்றலிலும் மேம்பட்டிருந்தாலும் பல நேரங்களில் உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தங்களுடைய முயற்சியைச் சிதறடித்து விடுகிறார்கள். அவர்களுக்காகப் பணியாற்றுவது மட்டுமே மிகச் சிறந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்கிற எண்ணம் அவருக்கு கல்லூரியில் இருந்தபோதே ஏற்பட்டது. குடிமைப் பணி அதை நிறைவேற்ற பேருதவியாக இருந்தது.
இளைஞர்களை மையமாக வைத்து, நம்பிக்கையும் வைராக்கியமும் அவர்களுக்கு ஏற்படும் வகையில் தன்னுடைய பேச்சையும் எழுத்தையும் வடிவமைப்பது என்று முடிவுசெய்தார். அதுவே அவருடைய நோக்கமாக அமைந்து விட்டது.
குடிமைப் பணிக்குத் தேர்வானபோது 1980-களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் தேர்ச்சி பெறாத நிலையை அவர் கண்டார். தகுதியும், திறமையும் இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை உணர்ந்த அவர் பணியாற்றும் இடங்களில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதயம் பேசுகிறது இதழில் ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ என்ற தொடரை எழுதினார். அது பரவலாக ஏற்படுத்திய தாக்கம் அவரைச் சிந்திக்க வைத்தது.
தொடர்ந்து இதழ்களில் இளைஞர்களுக்கான தொடர்களை எழுதும் வாய்ப்புகள் வந்தன. அவற்றின் மூலம் பல்வேறு விதமான கருத்துகளை எளிய நடையில் அவரால் கொண்டு செல்ல முடிந்தது. தொலைக்காட்சித் தொடர்களிலும் கல்லூரி மாணவர்களுக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது.
எல்லா சிற்றூர்களிலும் வேறுபாடுகளற்ற இளைஞர் குழுக்களை உருவாக்கி அவற்றின் மூலம் பல்வேறு பணிகளைச் செய்து தூய்மையான, மரங்கள் நிறைந்த, நீர்நிலைகள் ததும்பி வழியும், அறிவார்ந்த வாசிப்புகள் நிகழும் மேன்மை கொண்ட மனிதநேயம் மிக்க தமிழகத்தை உருவாக்க முதல் அடியையாவது எடுத்து வைக்க வேண்டும் என்பதே அவருடைய வாழ்நாள் லட்சியம்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,