எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்த நாள்

 காந்த குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்த நாள் இன்று





அரை நூற்றாண்டுக்கு மேல் இசையுலகில் ஆதிக்கம் செலுத்தி, ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் காந்த குரல்.
ஆயிரம் நிலவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூட்டுமோ, காட்டுக்குள்ள மனசுக்குள்ள, நான் போகிறேன் மேலே மேலே, நான் தான் இனிமேலு வந்து நின்னா தர்பாரு என, அரைநூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான், காதல், நட்பு, சோகம் என எல்லா உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் புகுத்தியது.
அந்தக் குரலின் பெயர் SPB எனும் மூன்று மந்திர எழுத்து. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆர்.க்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல், பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரையே உருவாக்கியது.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வெவ்வேறு மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது அவரின் பன்மொழி திறனுக்கு சான்று.
40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி., உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் தன்வசம் கொண்டுள்ளார்.
சங்கீதத்தில் கை தேர்ந்த ஞானம் பெற்ற எஸ்.பி.பி., இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ் சினிமாவில் வலுவாக பதித்தார். 1991 ஆம் ஆண்டு எஸ்.பி.பி, இசையமைத்து நடித்து வெளியான 'சிகரம்' திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்தார்.
கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ள எஸ்.பி.பி, தலைமுறைகள் கடந்தும் தன்னை தகவமைத்துக் கொண்டு, இளம் இசையமைப்பாளர்களிடன் நட்புடன் பழகி தனது குரலை ரசிகர்கள் மனதில் தொடர்ந்து பதிய வைத்த வண்ணம் இருந்தார்.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்திருந்த எஸ்.பி.பி.யின் காந்தக் குரல் காற்றில் கரைந்தது... இருப்பினும், அவரின் குரல் பல்வேறு வடிவங்களில் ரசிகர்களின் காதுகளில் ரிங்காரமாக கேட்டுகொண்டுதான் இருக்கிறது.
நன்றி: நியூஸ் 18 தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,