காவல்துறை பணிகள் தாண்டியும் மக்களுக்கு உதவுவேன்!" - உதவி ஆணையர் லில்லி கிரேஸ்

 காவல்துறை பணிகள் தாண்டியும் மக்களுக்கு உதவுவேன்!" - உதவி ஆணையர் லில்லி கிரேஸ்


காவல்துறை பணிகள் தாண்டியும், உதவி ஆணையர் லில்லி கிரேஸ் எடுக்கும் சேவை முயற்சிகளுக்கு அவரது துறையினர் ஒத்துழைக்கக் காரணம், எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் லில்லி கிரேஸின் அர்ப்பணிப்பு.
``மக்களுக்கான எனது பணி ஒரு வட்டத்துக்குள் இல்லை. மக்களுக்கு எவை எல்லாம் தேவைப்படுகின்றனவோ, அவற்றை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் எனது நோக்கம்'' என்கிறார் மதுரை அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ்.
கொரோனா முதல் அலையின்போது காவல்துறையினருடன், சமூக வலைதளங்கள் மூலம் தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு மதுரையின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை முதலில் கட்டுக்குள் கொண்டுவந்தார் லில்லி கிரேஸ். மேலும் லாக்டௌன் சமயத்தில் `ஒன் போலீஸ்... ஒன் ஃபேமிலி' என்ற நோக்கில் ஒவ்வொரு போலீஸும் வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஒரு குடும்பத்தை தத்தெடுத்து உதவினார்கள். இதில் உதவி ஆணையர் லில்லி கிரேஸின் செயல்பாடுகள், மதுரை மக்களின் மனதில் அவருக்கு இடம்பிடித்துக் கொடுத்தன.
கடந்த ஆண்டு லாக்டௌனின்போது தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து சிறப்பான வகையில் உதவி வந்த நிலையில், உதவி ஆணையர் லில்லி கிரேஸ் காவல்துறையினரை அவர்களுடன் ஒருங்கிணைத்து உதவி செய்து வந்தார்.
லில்லி கிரேஸ் 2017 பேட்ச். இவருடைய முதல் போஸ்டிங் மதுரையில்தான். 2008 வி.ஏ.ஓ பேட்ச்சில் பணியில் அமர்ந்து அதன்பிறகு மூன்று அரசுப் பணிகளின் நாற்காலிகளைத் தனதாக்கி, தற்போது மதுரையில் உதவி ஆணையராகச் சிறப்பான செயல்பாடுகளை மக்களிடம் சேர்த்துவருகிறார் லில்லி கிரேஸ்.
``காஞ்சிபுரத்துல பிறந்தேன். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடிச்சேன். மக்கள் பணிதான் ஆர்வம், இலக்கு. வி.ஏ.ஓ-வாக கரியரைத் தொடங்கி இப்போ அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸா இருக்கேன்'' என்றவரிடம், காவல்துறை பணிகளுக்கு அப்பாலும் அவர் செய்துகொண்டிருக்கும் சேவைகள் பற்றிக் கேட்டோம்.
``வேலைக்குப் போக வழியில்லாம, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலையில இருந்த குடும்பங்களைத் தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுத்து, சுமார் 3,500 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை, ஐந்து தன்னார்வ நிறுவனங்களும், காவல் துறையினரும் இணைந்து வழங்கினோம்.
சாலையோரங்கள்ல வசிச்ச 750 பேரை மீட்டெடுத்து 300 பேர்வரை அவங்களோட வீடுகள்ல சேர்த்தோம். மற்றவர்களை விடுதிகளில் சேர்த்து, அவங்க வாழ்வாதாரத்துக்கும் வழி பண்ணினோம்'' என்கிறார் லில்லி கிரேஸ். இந்தச் செயல்பாட்டால், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் சடலங்களின் எண்ணிக்கை கடந்த பல மாதங்களாக முற்றிலும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொரோனா இரண்டாம் அலையில், மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளிலும் இறங்கியுள்ளார் லில்லி கிரேஸ்.
``நண்பர் ஜோதி கிருஷ்ணனின் மூலம் சித்த மருத்துவரான கருப்பணனின் தொடர்பு கிடைச்சது. அவர் கொரோனாவுக்கு உதவும் வகையில் அஸ்வகந்தா, பால சஞ்சீவி, பிரம்மானந்த பைரவா, மாதா சுதர்சனம் போன்றவற்றைக் கொண்டு மருந்து தயாரித்து வந்தார். முதல் அலையின்போது எனக்குத் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள்ல `கொரோனா பாசிட்டிவ்' வந்தவங்களுக்கு இதைப் பயன்படுத்தச் சொல்லி பரிந்துரைத்தேன்.
அவங்க பயன்படுத்திட்டு, இந்த மருந்து நல்ல குணம் தர்றதா சொன்னாங்க. எனக்குக் கொரோனா அறிகுறிகள் தோன்றினப்போ, நானும் இந்த மருந்தை எடுத்துக்கிட்டேன். நல்ல பலனை உணர முடிந்தது. கொரோனா மைல்டு நிலையில் இருக்குறவங்களுக்கு இது கைகொடுத்தது. இருமல், காய்ச்சல், தொண்டை வலி முற்றிலும் சரியாச்சு. அதனால, இந்த மருந்தை மக்களுக்கு இலவசமா கொண்டு சேர்க்க முடிவு செய்தோம்.
நான், இந்த மருந்து குறித்தும் இது இலவசமா கிடைக்குறது குறித்தும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். மருந்தைப் பெற்றுக்கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தோம். இதன்மூலம் வெளிமாநிலங்கள் வரை இந்த மருந்தை வாங்கி பயன்படுத்திட்டு, நல்ல பலன் கிடைத்ததா சொன்னாங்க.
சித்த வைத்தியர் கருப்பணன், இதை மாத்திரையா செய்றார். என் வீட்ல தன்னார்வலர்கள் இதைப் பொடியாக்கி பாக்கெட் செய்து, மருந்து கேட்பவர்களின் வீட்டுக்கே போய் கொடுத்துட்டு வர்றாங்க. முதல் அலையின்போது அத்தியாவசிய பொருள்களின் தேவை பிரதானமா இருந்ததால, அதைக் கொடுத்தோம். இப்போ தொற்றுப் பரவல் மிக அதிகமா இருக்குறதால இலவசமா மருந்து விநியோகம் செய்துட்டு வர்றோம்'' என்றார்.
காவல்துறை பணிகள் தாண்டியும், உதவி ஆணையர் லில்லி கிரேஸ் எடுக்கும் சேவை முயற்சிகளுக்கு அவரது துறையினர் ஒத்துழைக்கக் காரணம், எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் லில்லி கிரேஸின் அர்ப்பணிப்பு.
அதனால் இவர் மேல் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே காவல்துறை ஆணையரும் தன்னார்வலர்களும் இவருக்கு ஒத்துழைக்கிறார்கள். இவரும் தனக்கென்ற பாதையில் நேர்த்தியாகத் தன் அடியை எடுத்து வைக்கிறார்.
லில்லி கிரேஸ் இலவசமாக வழங்கிவரும் மருந்தை உட்கொண்டு அதன் மூலமாகத் தனது குடும்பத்தினர் மூச்சுத்திணறலில் இருந்து விடுபட்டதாகப் பெண்ணொருவர் காவல் உதவி ஆணையருக்கு நன்றி சொல்லும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அது பலரால் பகிரப்பட்டது.
நன்றி: விகடன்
May be an image of 1 person and indoor
5

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,