மாடத்தி../திரைப்பட விமர்சனம்

 

மாடத்தி../திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் Nee Stream OTT தளத்தில் வெளியாகியுள்ள படம் இது.

கண்ணில்படாதவர்களைக் காட்டும் படம்!

\லீனா மணிமேகலையின் படைப்பில் உருவாகியிருக்கும் மாடத்தி. சாதியப் படிநிலைகளில் தீண்டத்தகாதவர்கள் வரை மட்டுமே அறிந்த தமிழ்ச்சமூகத்தில், பார்க்கவும் தகாதவர்களாக இருக்கும் மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் முதல் திரைப்படம் என சொல்வேன்

பார்க்கத் தகாதவர்கள் (Unseeable) இன்றும், இந்த மண்ணில் இருக்கிறார்களா?

ஆச்சரியமாக இருக்கிறதா!

இந்த படத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

இன்னும் சாதி இருக்கிறதா என்ன என்று கேட்பது போல தான் இதுவும்.

 சுமார் ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதியின் அசுரப்பிடிக்குள், தலித்துகளுக்கும் தலித்துகளாக, தீட்டுத்துணிகளையும் மரண வீட்டுத் துணிகளையும் சலவை செய்து கொண்டும், பாடைகள் கட்டிக் கொண்டும், தலைக்கரிசியை வாங்கிக் கொண்டும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வெட்கக்கேடான உண்மை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிர வண்ணார் என்னும் கண்ணால் பார்க்கக் தகாதவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றனர். பகல் பொழுதில் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம். இந்தப் பாவப்பட்ட மக்கள் வளைக்கரடி, கழுதைப்புலி, ஆட்வார்க் என்னும் ஆப்பிரிக்கப் பன்றி ஆகிய விலங்குளைப் போன்று இருட்டிய பிறகே தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியே வரவும் இரவுநேர வாழ்க்கை வாழவும் நிர்பந்தித்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

அம்பேத்கர்.

(நூல் தொகுப்பு 5; அத்தியாயம் 15: நாகரிகம் அல்லது இழிச்செயல்; பக்கம் 139-140)

நமது இந்திய மனங்கள் சாதிய படிநிலைக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் இடையிலான கன்னியைக் கண்டும் காணாமல் இருக்கச் சாதியத்தில் ஊறி பழகிவிட்டதே.

 இனியும் இந்த உண்மையைப் பார்க்க மறுக்கமுடியாதே . இதை காத்திரமாகக் கலை வடிவில் உணர்த்துகிறாள் இந்த மாடத்தி பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கொண்டு இந்த உண்மையைப் போட்டுடைத்து இருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை.

படத்தைப்பற்றி ஒரு சின்னதாக  சொல்லிவிடுகிறேன் .

ரத்தம் தோய்ந்த மாதவிடாய் துணிகளையும் இறுதிச் சடங்கின்போது பிணங்களுக்குப் போர்த்தப்படும் துணிகளையும் துவைத்துத் தருவதற்காகவே கிராமத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள்தான்  யோசனாவின் தாய் வேணியும் தந்தை சுடலையும். இவர்களுடைய குடிசை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. ’தீட்டுதுணிகளை இரவோடு இரவாக ஆற்றில் துவைத்து யார் கண்ணிலும் படாமல் இவர்கள் வாழ வேண்டும்.

இச்சமூகத்தில் பிறந்த பதின்பருவப் பெண் யோசனா கதாநாயகி..

அவளைப்பற்றிய கதைதான் மாடத்தி.


.  படம்  ஆரம்பமே வித்தியாசமாக இருக்கு.

 புதிதாக மணமுடித்த கிராமத்து இளம் தம்பதி இரு சக்கர வாகனத்தில் மலைக்காட்டு வழியில் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். போகும் வழியில் மனைவிக்கு மாதவிடாய் ஆரம்பிக்க  அவசர தேவைக்குத் துணியோ அல்லது சானிட்டரி நாப்கினோ கிடைக்குமா எனக் கேட்க கணவன் மலை மீது இருக்கும் வீட்டை நோக்கிச் செல்கிறான். காலம் தாழ்ந்தும் கணவன் திரும்பாததால் அந்த வீட்டுக்குள் நுழையும் இளம் மனைவிக்கு அதிர்ச்சி .அங்கே  கயிற்றில் வரிசையாக தொங்கவிடப்பட்ட ஈரம் உலராத வெள்ளை நிறத் துணிகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

அங்கிருக்கும் சிறுவன் மாடத்தியின் கதையை விவரிக்கத் தொடங்குகிறான்.

யோசனாதான் மாடத்தி. அவள் கதாநாயகி என்பதைவிடவும் வனதேவதை என்று சொல்வதே பொருத்தம். வனத்தின் வனப்பில் தன்னைத் தொலைத்து சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சுட்டிப் பெண் இவள்.

ஊர் மக்கள் கண்ணில் படக்கூடாது என்பதால் காட்டுவழி வரும் ஆண்களை மறைந்திருந்து விளையாட்டுத்தனமாகப் பயமுறுத்துவது அவளுக்கு வாடிக்கை.

ஊர் ஆண்களால் இழிவாக நடத்தப்படுவதும் தினம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி சகித்துக்கொண்டு  வாழ்வதே யோசனாவுடைய தாயின் நிலை.

. இப்படியான சமூகத்தில் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றுவிட்டோமே என்கிற பதற்றத்தில் எந்நேரமும் யோசனாவை கரித்துக் கொட்டுகிறார்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகச் சபிக்கப்பட்டவர்கள்தான்  இச்சமூகப் பெண்கள் என்ற சேதி வேணி கதாபாத்திரம் வழியாக நமக்குதெரியும் போது மிக அதிர்ச்சியடைகிறோம்.

 இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை செம்மலர் தோற்றத்திலும் அநாயசமான நடிப்பிலும் நடிகை ஷோபா மற்றும்  இந்தி நடிகை ஸ்மீதா பாட்டிலை நினைவுபடுத்துகிறார். யோசனாவாக தோன்றி நாட்டார் தேவதையாக உயிர்பெறுகிறார் அஜ்மினா கஸிம்.
பெண் சிசுக்கொலை பொதுச்சமூகத்தின் பிரச்சினையாக இருக்கின்ற இந்த வேளையில் இந்தப்படம்வேறொரு கோணத்தை நமக்கு சொல்வது என்பதே அதிர்ச்சி கலந்த உண்மை.

 தென்தமிழகத்தில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இச்சமூகத்தில் பிறந்த பதின்பருவப் பெண் யோசனா கதாநாயகி.

மையக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல்மெட்ராஸ்பட புருஷோத்தமன், இளம் நடிகர் பேட்ரிக் உள்ளிட்டவர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இயற்கைக்கும் யோசனாவுக்குமான நெருக்கத்தை அழகியல் ததும்பும் கேமரா கோணங்களும் கார்த்திக் ராஜாவின் மென்மையான இசையும் நமக்கு உணர்த்துகின்றன

. சாதியத்துக்கு அப்பால் பதின்பருவத்தில் துளிர்க்கும் பாலின ஈர்ப்பை, ஆண் உடல்சார்ந்த அரசியலை, பொத்தாம் பொதுவாக பெண் விடுதலை பற்றி பேசுபவர்களின் அபத்ததை   தனக்கே உரிய தனித்தனமையுடன் இயக்குனராக லீனா மணிமேகலை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை காணமுடிகிறது.

பாலியல் துன்புறுத்தல்களினாலேயே நாடோடிகளாக்கப்பட்ட சமூகத்தின் கதையை வலிமையான காட்சி மொழியில் பேசுகிறது 'மாடத்தி'.

இந்த கதைப்பற்றி அவர் சொன்னதை படித்திருக்கிறேன்.

 

‘கேட்டு வளர்ந்த தேவதைக் கதைகளால் உந்தப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். காலத்தால் உறைந்து நிற்பது கதைகள் மட்டுமல்ல, அக்கதைகள் உருவாவதற்குப் பின்னிருக்கும் அநீதியும்தான் என்பது பெருந்துயரம். சாதி அதிகாரத்தால் கட்டப்பட்டிருக்கும் சமூகத்தின் கடைசி அடுக்கில் 'பார்க்கவும் தகாதவர்களாக' வாழப் பணிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தின் பதின்ம வயது பெண்ணின் மறுக்கப்பட்ட வாழ்வையும், கனவையும், காதலையும் காட்சிக்குக் கடத்தியிருக்கும் பிரதியே 'மாடத்தி' திரைப்படம்.

எப்படிப்பட்ட இன்னல் அவர்களுடையது, வாழ்வில் எந்தளவுக்கு அவர்கள் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நிச்சயமாக, வரலாற்றில் எந்த நாகரிகமும் இதைவிட மேலான குரூரத்தைப் புரிந்ததாகக் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

எழுத்தாளர் இமையத்தின் கோவேறு கழுதைகள், பத்திரிகையாளர் ஜெயராணியின் தலித் முரசு கட்டுரை, .சிவசுப்பிரமணியன், சி, லக்ஷ்மணன், கோ.ரகுபதி மற்றும் தனஞ்செயனின் நூல்கள், கவிஞர் என்.டி.ராஜ்குமாரின் ராப்பாடிகள் பற்றிய கட்டுரை, ஓவியர் சந்துருவின் ஏற்பாட்டின் பேரில் நான் சந்தித்த புதிரை வண்ணார் சமூக மனிதர்கள் என்று மாடத்திக்கான ஆய்வும் வாசிப்பும் விரிவானது. புதிரை வண்ணார் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக அரசுப் பணியிலிருந்து தற்போது தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி அய்யாதான் மாடத்தியின் ஆதாரம் எனச் சொல்வேன்.

அவருடன் ஒருநூறு கிராமங்கள் சுற்றி, சமூகத்தின் வெவ்வேறு தலைமுறை மக்களைச் சந்தித்துபேசி, பேட்டிகள் எடுத்த அனுபவம்தான் 'மாடத்தி'க்கு வித்திட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவ்வனுபவங்களிலிருந்தே படைக்கப்பட்டவை என்கிறார் அவர்

மேலும் அவர்

‘கவிஞர் யவனிகா ஶ்ரீராமுடன் முதல் இரண்டு பிரதிகள் எழுதி முடித்த நிலையில் அதை முழுமையான திரைக்கதையாக மாற்றியவர் வடகரை ரஃபீக் இஸ்மாயில். திரைக்கதை பிரதியை, மூர்த்தி ஐயா வழிநடத்த பாபநாசம், அணவன் குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம் மக்களுடனும், முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களுடனும் பல பட்டறைகள் நடத்தி செம்மைப்படுத்தினதாகவும் வசனப் பயிற்சி, ஒத்திகை படப்பிடிப்பு, சமூகத்துடன் வாழ்ந்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளை கவனித்து பயின்று  மாடத்தியின் உருவாகி இன்று அது ஒரு மானுடவியல் பாடமாக, முழுமையான மக்கள் பங்கேற்பு சினிமாவாக அமைந்ததுள்ளது ‘எனவும் சொல்கிறார்

. இவர் இந்த படத்தை கிரவுட் ஃப்ண்டிங் மூலம் குறைந்த தொகையை ஈட்டி சொந்த தயாரிப்பில் படத்தை உருவக்கி இருக்கிறார்என்பதை பட டைட்டிலில் தெரிவித்து விடுகிறார்.

ஆரம்பத்தில் இளையராஜா இசையமைப்பதாக இருந்ததாம்  பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

நாம் வழிபடும் சிறுதெய்வங்கள் யார்... நம்மிடையே வாழ்ந்த சாதாரண மனிதர்கள்தாம்


அவங்க. ஏதோ ஒருவகையில் தான் வாழ்ந்த சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்டு பின்னர் அவர்களின் ரெளத்திரத்திற்கு அஞ்சி அவர்களையே வழிபாட்டுக்குரிய காவல் தெய்வங்களாக மாற்றிக்கொண்டுள்ளோம்

இதனை நாம் மரபுவரலாறு மூலமாக அறிகிறோம்

 இன்றும் தமிழக கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களாக இருப்பவை கழுமரங்களும், நடுகற்களும்தான். நாம் தொழும் அம்மன்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள்; நமது கதைகளை நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும் அடங்காத ஆன்மாக்கள்அநீதி இழைக்கப்பட்ட ஒரு வண்ணாத்திப் பெண்ணின் ஆன்மா சொல்லும் கதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது 'மாடத்தி.'

இன்னும் இந்த சமூகம் திருந்தாமல் போனால்

நமக்கு பின் நம் சந்ததிகள் இன்னும் பல மாடத்தி தெய்வங்களை வணங்க நேரலாம்

அது நமது எண்ணம் அல்ல.

முதலில் இப்படி ஒரு சமூகத்தை வெளிக்கொணர்ந்து நம்மோட அவர்கள் கலந்து வாழ வழி செய்ய நினைப்போம்

நடத்தி காட்டுவோம்

-உமாதமிழ்

Comments

யோசனாவின் தந்தை கதாபாத்திரம் பற்றியும் சற்று எழுதியிருக்கலாம், புதுமுக நடிகராக இருந்தாலும் அவரது நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,