நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்காகவும் நாம் ஒன்றிணைவோம்

 `என் கதையை முடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?' அதிரடிக்கும் மம்தா; மே.வங்கத்தில் நடப்பது என்ன?மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பதவியேற்றதிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகிறது மேற்கு வங்க அரசியல் களம். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது, தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிமாற்றம் செய்தது என தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது மேற்கு வங்க அரசியல். மம்தாவை அசைத்துப் பார்க்க மத்திய அரசுத் திட்டம் தீட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸார் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வர, தன் அதிரடிகள் மூலம் மத்திய அரசுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார் மம்தா!
"மோடி காலில் விழவும் தயார்'' - 'தலைமைச் செயலாளர்' விவகாரத்தில் மத்திய அரசை ஒருகை பார்க்கும் மம்தா!
தீதி-யின் அதிரடிகளால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது மேற்கு வங்க அரசியல். `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..?' என மம்தாவின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் ஒருபக்கம் குவிந்த வர, `அரசியல் நாடகம் நடத்துகிறார் மம்தா' என பா.ஜ.க-வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எங்கு தொடங்கியது பிரச்னை?
யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை ஆய்வு செய்யக் கடந்த 28-ம் தேதியன்று மேற்கு வங்கம் சென்றார் பிரதமர் மோடி. பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பிரதமரை மட்டும் தனியாக 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். பின்னர், வேறு பணிகள் இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மம்தாவின் இந்தச் செயல் பா.ஜ.க-வினரை ஆத்திரமடையச் செய்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``மம்தாவின் செயல் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது'' என்று கூறினார். மம்தாவோடு இணைந்து பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தாமதமாக வந்த மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டியோபாத்யாவை மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் பயிற்சி மையத்துக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு.
தலைமைச் செயலாளரை அனுப்ப மறுத்த மம்தா!
மே 31-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளரை பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மம்தாவோ, ``இந்த நெருக்கடியான நேரத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது'' எனப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார். முன்னதாக மே 31-ம் தேதியோடு முடியவிருந்த அலபன் பண்டியோபாத்யாவின் பதவிக்காலத்தை, மம்தாவின் கோரிக்கையை ஏற்று மூன்று மாத காலம் நீட்டித்திருந்தது மத்திய அரசு.
மம்தா
இதற்கிடையில், டெல்லியிலுள்ள பணியாளர் பயிற்சி மையத்தில் மே 31-ம் தேதியன்று பணியில் இணையாத காரணத்தால் அலபன் பண்டியோபாத்யாவுக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தனது அரசுப் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் அலபன் பண்டியோபாத்யா. பதவி விலகிய அவரை தனது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மம்தா. அலபன், இந்தப் பணியில் மூன்று ஆண்டுக்காலம் நீடிப்பார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மம்தா ஆவேசம்..!
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, ``கொரோனா தடுப்பு பணிகளிலும், புயல் நிவாரண நடவடிக்கைகளிலும் தீவிர பங்கெடுத்து வரும் தலைமைச் செயலாளர் அலபன் பண்டியோபாத்யாவை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் பிரதமரும் அவரது அரசும் எந்த மாதிரியான செய்தியை நாட்டுக்குச் சொல்ல வருகிறது.
மாநில அரசுடன் ஆலோசனை நடத்தாமல், மாநில அரசுப் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு அழைத்துக் கொள்ள முடியாது. மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும். இப்படியா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நடத்துவது? அவர்கள் என்ன கொத்தடிமை பணியாளர்களா?'' என்று கேள்வியெழுப்பினார்.
மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்... மிஸ்டர் பிஸி ப்ரைம் மினிஸ்டர்... மிஸ்டர் `மான் கி பாத்' ப்ரைம் மினிஸ்டர்... என்ன வேண்டும் உங்களுக்கு? உங்களால் என் கதையை முடித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? அது நிச்சயம் முடியாது!
மம்தா பானர்ஜி
மேலும், ``எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம். அலபன் பண்டியோபாத்யாவுக்காக மட்டும் நான் பேசவில்லை. நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்காகவும் நாம் ஒன்றிணைவோம். அவர்கள் இருவரும் (பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா) வைத்ததுதான் சட்டமா?'' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் மம்தா.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,