சினிமா தெரியாது.. ராஜாவைத் தெரியும்

 சினிமா தெரியாது.. ராஜாவைத் தெரியும்..! - நெகிழும் ரசிகை



யுவன்சங்கர் ராஜா போன்ற புதிய இசையமைப்பாளர்கள் உருவாகியிருந்த கல்லூரி காலகட்டம் அது .
” என்ன உனக்கு இன்னும் இளையராஜா தான் பிடிக்குமா கொஞ்சம் அப்டேட் ஆகு, பழைய பஞ்சாமிர்தமா இருக்காத”, என்ற கிண்டல் கேலி பேச்சுக்களுக்கு மத்தியில் ஏனோ இளையராஜாவின் இசை என் உயிரோட்டத்தில் கலந்து இசை மீதான காதலை உண்டாக்கியிருந்தது.
பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை தொலைக்காட்சி பெட்டியின் தோரணையை என் வீட்டு வரவேற்பரை கண்டதில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை பாடியவர்கள் மனோ, சித்ரா..எஸ்பிபி மற்றும் எஸ்.ஜானகி, இசை இளையராஜா என்ற வாசகங்களையே கேட்டு வளர்ந்தேன். ஊருக்கு அல்லது வீதிக்கு ஒரு ரேடியோ பெட்டி போதுமானதாக இருந்தது. பல தொலைவுகள் சைக்கிள் ஓட்டி செல்வதற்கும் , நடந்து செல்வதற்கும் ஒரு பேட்டரியோ அல்லது இரு பேட்டரிகளோ இடப்பட்ட ஒரு சிறிய ட்ரான்சிஸ்டரின் வழியே வழியும் ராஜாவின் இசை போதுமானதாக இருந்தது.
காலையில் 6 அல்லது 6.30 மணிக்கு வானொலியின் இறை துதிப் பாடல்களோடு என் நாள் துவங்கும். பின்பு அகில இந்திய வானொலி செய்திகள் முடிவடைந்து இளையராஜாவின் இசை ஒலிக்கத் துவங்கும். பாடல்கள் முடிவதற்குள் பள்ளிக்கு கிளம்பி ஓடியாக வேண்டும். பள்ளியில் இரண்டாவது மணி அடிப்பதற்குள் ஓட்டமும் நடையுமாக ஓடும் போது வழிநெடுக ஒவ்வொரு வீதியிலும் இளையராஜா இசைப்பாடல் கேட்கும். இசை என்றால் என்ன என்று அறியாத பருவத்தில் கூட காற்றிலே கலந்து, தன்னாலே உடல் செல்களில் இயல்பிலே கலந்து உயிர்ப்பித்தது.
துவக்கப்பள்ளி முதல் பள்ளி இறுதியாண்டு முடிக்கும் வரை வீட்டில் சினிமா வாசனை கிடையாது. அப்பா டேப் ரெக்கார்டரில் போடும் சினிமா பாடல்கள், ஆல் இந்தியா ரேடியோவில் செய்திகள் முடிந்த பிறகு, சினிமா பாடல்கள் கேட்பது பெரும் பாவம் என்று ரேடியோவை நிறுத்திவிடும் அம்மா .. இவை எல்லாவற்றையும் தாண்டி பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில், டீக்கடையில் சப்தமாக தன்னலமின்றி ஒலித்த இசையிலே பழக்கப்பட்டுவிட்டது இராகதேவனின் இசை .
கல்லூரி முதலாம் ஆண்டு சேரும் வரை சினிமா , தொலைக்காட்சி பரிச்சயம் இல்லாததால் இந்த திரைக்காட்சியில் இந்த இடத்தில் வயலினும் , அந்த இடத்தில் புல்லாங்குழலும் இவரின் வாயசைப்பு, உடல்மொழி, திரைகதையமைப்பு, காட்சியமைப்பு என்று வகைப்படுத்த தெரியாது. ஆனாலும்.. இன்று எங்கோ ஒரு மூலையில் இசைக்கருவி இசைக்கப்பட்டால் அதன் அலைவரிசை பிடித்து இந்த பாடல் தானே இந்த இசை தானே என்று மூளை தன்னிச்சையாக பளிரிடும்.
ஆளுக்கொரு வாக்மேன் , ஹெட்செட் என்று வைத்துக்கொண்டு அவரவருக்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி காலத்தில் கூட எனக்கு தனி ஹெட்செட் வாய்க்கப் பெறவில்லை. வீட்டுக்கு நீண்ட தூரம் செல்லும் போது பேருந்தில் ஒலிக்கும் இளையராஜாதான் நம் வசதிக்கு வாய்த்தது. கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் போது ஹெட்செட் மற்றும் எஃப்எம்மோடு வாங்கிய அலைப்பேசி தான் தினமும் அலுப்பு தெரியாமல் தினமும் மூன்று மணி நேர பிராயாணத்தை கடக்க செய்தது. என் வாழ்க்கையின் பிரயாணங்களை அழகாக்கியது இசையரசனின் இசை தான்.
என் புள்ளை அழுது நான் பார்த்ததில்லை என்று இதுவரை ஊருக்குள்ள என்னை பற்றி பெருமை பேசும் என் அம்மாவிற்கு தெரியாது யாருமற்ற இரவுகளில் தனிமையில் ராஜாவின் இசையோடு என் துயர் தொலைத்தேன் என்று.
ஆனா, ஆவண்ணா படிக்க கூட தெரியாத வயதில் டேப் ரெக்கார்டர் தேய்ந்து போகும் அளவிற்கு என் தந்தை சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது என்று இசையோடு சேர்ந்தது இன்று வரை நியாபகத்தில் கலந்து நிற்கிறது.
காட்சியமைப்பு , இசை ஒருங்கிணைப்பு , வாத்தியக்கருவிகள் என்று வகை பிரித்து , தொகை பிரித்து எழுத ஞானம் இல்லையென்றாலும் கூட இசை அதுவும் என்றென்றும் ராஜா எங்கள் இசை ஞானி போதுமே நாங்கள் இசை ஞானம் பெறுவதற்கு.
- ஞாழல் நறுவீ
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,