திருக்குறளை இப்படியும் கொண்டு சேர்க்கலாம்!' - கோலம் மூலம் தமிழ் பரப்பும் மாலதி

 திருக்குறளை இப்படியும் கொண்டு சேர்க்கலாம்!' - கோலம் மூலம் தமிழ் பரப்பும் மாலதிபெண்கள் கல்வியறிவு பெற்று சமூக விழிப்புணர்வு பெற்றாலும், திருமணத்துக்குப் பிறகு வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு, மனைவியாகவும் தாயாகவும் ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் மீது அதீத காதல் கொண்ட பெண் ஒருவர், திருமணத்துக்குப் பின்னான இல்லத்தரசி வாழ்விலும், தன் அன்றாட வேலையின் மூலம் அந்தத் தமிழையும், திருக்குறளையும் மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களாகத் தினம் ஒரு திருக்குறளை தன் வாசலில் கோலமாக எழுதி, தற்போது 1,330 குறளையும் முடித்துள்ளார் மதுரை வாடிப்பட்டி, திருவேடகம் பகுதியைச் சேர்ந்த மாலதி.
தமிழ் மீது தனக்குள்ள ஆர்வத்தையும், தனது சமூக அக்கறையையும் பற்றி நம்மிடம் பேசினார் மாலதி.
``எனக்குச் சின்ன வயசுல இருந்தே தமிழ்மொழி மேல ரொம்ப ஆர்வம். ஆசை ஆசையா படிப்பேன். இளநிலை வேதியியலை தமிழ் வழியிலதான் படிச்சேன். இளநிலை படிப்பு முடிஞ்சதும் எனக்குத் திருமணம் முடிஞ்சது. அதனால மேற்கொண்டு படிக்க முடியலை.
திருமணத்துக்கு அப்புறம் அன்றாட இல்லத்தரசி வேலைகள்ல வாழ்வு நகர்ந்தது. இருந்தாலும், நாம இருக்குற வட்டத்துக்குள்ள இருந்துட்டே நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை, மத்தவங்களுக்கும் பயன் தரும் விதமா செய்யணும்னு நினைச்சேன். அப்போதான் திருக்குறள் கோலம் ஐடியா தோணுச்சு.
எனக்குக் கோலம் போடுறது ரொம்பப் பிடிக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னால, கோலம் மூலமா
வாழ்த்துகள்
எழுதத் தொடங்கினேன்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி, தினம் ஒரு திருக்குறள் கோலம் போட முடிவு செஞ்சேன். மனைவி, அம்மா பொறுப்புகள் என் கடமை. அதைத் தாண்டி, நான் தெரிஞ்சுக்கிட்ட நாலு நல்ல விஷயங்களை மத்தவங்களுக்கும் சொல்லணும்னு நினைச்சேன். தினமும் எங்க வீட்டு வாசல்ல தமிழ் மணம் கமழ ஆரம்பிச்சது. உள்ளூர் மக்கள் ரொம்ப பாராட்டினாங்க. வெளியூர்ல இருந்து யாராச்சும் வந்தா, எங்க வீட்டு வாசல்ல வியந்து நின்னு, கோலத்தைப் பார்த்துட்டு, குறளைப் படிச்சிட்டு, அதுக்கு பொருள் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, போட்டோ எடுத்துட்டுப் போவாங்க.
வீட்டுக்கு எதிர்ல கல்யாண மண்டபம் இருக்கு. அங்க வர்றவங்க அப்படியே கூட்டமா இங்க வந்து திருக்குறளை வாசிப்பாங்க. இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டாரத்தை என்னால உருவாக்கிக்கொள்ள முடிஞ்சது.
மகிழ்ச்சி தரும் விஷயம் என்னன்னா, குழந்தைகளுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்துறது. பள்ளி செல்லும் மாணவர்கள் எங்க வீட்டை கடந்துதான் பள்ளிக்குப் போகணும். அவங்க எல்லாரும் தினமும் வாசல்ல நின்னு, இன்னைக்கு என்ன குறள்னு வாசிச்சிட்டு, என்கிட்ட அதுக்கான பொருளைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போவாங்க. அவங்க ஆர்வம், இந்த முயற்சியில இன்னும் எனக்கு உற்சாகம் கொடுத்தது. சமூகத்தில் நல்ல மாற்றம் வருவது, நல்ல கருத்துகளைக் குழந்தைகள்கிட்ட விதைப்பதில் இருந்துதான் தொடங்கும். அப்படி, திருக்குறளை பச்சை மனங்களில் விதைக்கும் ஒரு கருவியா நான் இருக்குறது எனக்கு நிறைவா இருக்கு.
ஒரு தடவை, வீட்டுக்கு எலெக்ட்ரிசிட்டி பில் கணக்கெடுக்க வந்த பணியாளர், என் கோலத்தைப் பார்த்திருக்கார். அப்போ நான் வீட்டுல இல்ல. நான் வர்றவரை காத்திருந்து, இந்தக் கோலம் பத்தியும், குறளின் அர்த்தத்தைக் கேட்டு பாராட்டிட்டும் போனார்.
சுகாதாரப் பணியாளர்கள் மருந்து தெளிக்கிறதுக்காக வருவாங்க. வாசல்ல இருக்குற திருக்குறளை படிச்சிட்டு, பொருளை கேட்டுட்டுத்தான் போவாங்க. 1,330 குறளையும் கோலமிட்ட பிறகு, மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி வைக்கத் தீர்மானிச்சிருந்தோம். இது ஊரடங்கு நேரம் என்பதால அதைத் தள்ளிவெச்சிருக்கோம்.
திருக்குறளைத் தொடர்ந்து, இப்போ ஆத்திசூடி எழுதத் தொடங்கியிருக்கேன். மாணவர்களும், பொதுவா மத்தவங்களும் ஆத்திசூடினா 12 வரிகள்தான்னு நினைப்பாங்க. ஆத்திசூடியில 125 வரிகள் இருக்கு. அதை மாணவர்களுக்கும் மத்தவங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில இப்போ இருக்கேன். என் முதுமைக் காலம் வரை இப்படி நன்நெறிப் பாடல்களை என் வாசல்ல எழுதி மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு நினைக்கிறேன்" என்றார்.
மாலதி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் பலரின் அன்புக்குரிய நபராக மாறினார். ``இருக்குற இடத்திலிருந்தே நம்மால ஆன ஆக்கபூர்வமான ஒரு விஷயத்தைச் செய்யலாம்னு நான் நம்புறேன், செய்யுறேன்'' என்கிறார் மாலதி புன்னகையுடன்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,