ஷோபனா ரவி

 உங்கள் அம்மா துார்தர்ஷனில் பணிபுரிந்ததால், உங்களுக்கு செய்தி வாசிப்பாளராகும் எண்ணம் வந்ததா?


அப்படியும் சொல்லலாம். என் அம்மா வானொலியில் செய்தி வாசித்ததை, சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அதனால், அந்த வாய்ப்பு வந்தபோது, எனக்கு எளிதாக இருந்தது.
முதன் முதலில் செய்தி வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு...
படிப்பது தானே... எளிதாக தான் இருந்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகளை வாசிக்க பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா?
தமிழ் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி நாடகங்களில் நடித்தபோதும், ஆங்கில உச்சரிப்பை, கல்லுாரி பாடத்தின் போதும், நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரிந்த மொழிகளான ஆங்கிலத்தையும், தமிழையும் சரியாக உச்சரிக்கும் போது, நாவில் அமுதுாறுவதாக உணர்வேன்.
அத்துடன், தமிழை ஏற்ற, இறக்கத்துடன் வாசிக்க, என் ஆசிரியர்களும், அம்மாவும் எனக்கு பழக்கி இருந்தனர். ஆங்கில இலக்கியம் படித்தபோது, அதற்கு, என்னை நானே பழக்கிக் கொண்டேன். தமிழ், 'ட' வேறு, ஆங்கிலத்தில், 'ட' உச்சரிப்பு வேறு. மொழிக்கு மொழி இப்படி பல வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது.
மறக்க முடியாத நிகழ்வுகள்?
பல ஆண்டுகள் செய்தி வாசித்ததால், உயரத்தில் இருந்தவர்களைக் காலச்சக்கரம் புரட்டிப் போடுவதையும், வேறு சிலரைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றுவதையும் பார்த்த வண்ணம் இருந்தேன். இயற்கையும், அவரவர் வினைப்பயனும், எல்லாவற்றையும், எல்லாரையும் மாற்றியபடியே இருந்ததை, திரைப்படம் பார்ப்பது போல் உள்வாங்கிக் கொண்டேன்.
அரசு சார்ந்த செய்திகளை மட்டுமே வாசித்தது சலிப்பை ஏற்படுத்தவில்லையா? உறுத்தல் இல்லாமல் இருந்ததா?
பி.டி.ஐ., - யு.என்.ஐ., - ராய்டர் செய்திகளை அடிப்படையாக வைத்துத் தான், செய்திகள் தயாரிக்கப்பட்டன. என் அம்மா செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதால், தன் விருப்பு வெறுப்புகளை விட்டு, வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், செய்தியின் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தனர். செய்தி ஆசிரியரின் இடைச்செருகல் இருக்காது. அந்த தொழில் தர்மம், பிற்காலங்களில் குறைந்து விட்டது.
நான், என் பணியை ஒரு தொழிலாகப் பார்த்தேன். எனக்கு செய்தியில் ஏதேனும் வரிகள் சரியாகப் படாவிட்டால், செய்தி ஆசிரியரிடம் சொல்லி, அவற்றை மாற்றிக் கொள்வேன்; அவ்வளவு தான்.
தாங்கள் விருப்ப ஓய்வு பெற்ற போது, நிறைய சாதிக்க உள்ளதாக கூறினீர்கள். உங்கள் சாதனை பயணம் எப்படி உள்ளது?
அப்படி சொன்னதாக நினைவில்லை; எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ, நினைக்கிறேனோ, அவற்றை செய்கிறேன். என்னை நான் அறிய வேண்டும் என்ற அவா ஒன்று தான், என்னை சிறுவயதில் ஆக்கிரமித்திருந்தது. அதை என் குருநாதர், டாக்டர் நித்யானந்தம் நிறைவேற்றித் தந்துவிட்டார்.
அதே இளமையும், சுறுசுறுப்பும் தொடர்கிறதே; ரகசியம் என்ன?
நான், பெரிதாக எதையும் அசைபோட மாட்டேன்; திட்டமிடமாட்டேன். செய்ய வேண்டிய பணிகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். 25ம் வயதில், யோகா செய்ய துவங்கி விட்டேன்.
தினமும் மாலை, நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஆனால், பெரும்பாலான பெண்கள், தன் குடும்பம், தன் குழந்தை என, பிறருக்காகவே சுழல்வதால், தன்னைப் பற்றி யோசிப்பதில்லை.
பெண்கள், தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியை வழக்கமாக்கினாலே, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சில ஆண்டுகளாக, நான், 'தாய்ச்சி' என்கிற, தற்காப்பு கலையை பயின்று வருகிறேன். ஆக, உடலுக்கு உடற்பயிற்சி, மனதுக்கு தியானம். இவற்றை தவிர, என்னிடம் வேறெந்த ரகசியமும் இல்லை.
தற்போதைய செய்தி சேனல்கள் பற்றியும், செய்தி வாசிப்பாளர்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?
பரபரப்பாக இருக்கிறது. மொழி ஆளுமைக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை. வாக்கிய அமைப்புகளில் குழப்பம் நிலவுகிறது. சரிவரப் பராமரிக்கப்படாத பேச்சு வழக்கால், தமிழ் தேய்ந்து கொண்டிருக்கிறது.
ஷோபனா ரவி பேட்டியில் சொன்னது
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்