சளி, இருமல் ஓடியே போயிரும்: புதினா- மிளகு ரசம்
சளி, இருமல் ஓடியே போயிரும்: புதினா- மிளகு ரசம்
நம்முடைய உணவில் சுவைக்காக பயன்படுத்தப்படும் புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். வாருங்கள் இதன் அற்புதமான மருத்துவ பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ரிபோபிளேவின், தயாமின் ஆகியவை அடங்கியுள்ளன.
புதினா அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாக்கவும், மலச்சிக்கல் நீங்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
மேலும் புதினாவுடன் மிளகு சேரும்போது, நம் உடலிலுள்ள சளி மற்றும் இருமலை விரட்டுகிறது. இதற்கு புதினாவுடன் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட வேண்டும். இப்போது இந்த புதினா ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 2
புதினா – ஒரு கப்
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – ½ ஸ்பூன்
சீரகம் – 1 ½ ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் புதினா மற்றும் தக்காளியில் பாதியை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். அதில் அரைத்து வைத்த புதினா தக்காளி கலவையை சேர்க்கவும்.
அதனுடன் சிறிதளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தக்காளியை கையிலேயே கரைத்து, அதனுடன் அரைத்து வைத்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து, ஒரு கப் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
பின் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைத்த புதினா கலவையை இதனுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். நுரை பொங்கி வரும்போது உடனே அதன் மீது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பின்னர் தாளிப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு தாளித்து ரசத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை தூவி பருகுங்கள்.
Comments