மைக்கேல் ஜாக்சன்

 ஜாக்சனை கருப்பின மக்கள் கூடுதல் நேசத்துடன் கொண்டாடினாலும் ஜாக்சன் அதை விரும்பவில்லை. தனது தந்தையின் கெடுபிடிகளை நினைவு கூர்ந்த ஜாக்சன் நிறத்தினால் தான் பட்ட துன்பங்கள் பற்றி எப்போதும் பேசியதில்லை. உலக நட்சத்திரமாக மாற்றப்பட்ட அவருக்கு புதிய முகமும், பாணியும் தேவையென்பதை பன்னாட்டு நிறுவனங்களும் உணர்ந்து கொண்டன. கேவலம் அமெரிக்க அதிபருக்கே எப்படிப் பேசுவது, நடப்பது, கை குலுக்குவது, எந்த கோணத்தில் புகைப்படத்திற்கு முகத்தை திருப்புவது என்பதெல்லாம் ஆள் வைத்துப் பயிற்சியாக கொடுக்கப்படும் போது இசையில் உலக நாயகனுக்குரிய தோற்றத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்காமல் போய்விடுமா என்ன?




இங்கே ரகுமானின் வந்தே மாதரத்தை சோனி நிறுவனம் வெளியிடும் போது அம்பி போல இருந்த ரகுமானது முடியலங்காரம் மேற்கத்திய இசைக்கலைஞர்களது பாணியில் மாற்றப்பட்டதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் அவர்களது இசை குறித்த ஒப்பந்தத்திலேயே தெளிவாக கூறப்பட்டு கையெழுத்து பெறப்படும். உலக அழகியாகும் பெண்ணின் உடலளவுகள் குறித்த வரம்பு, எடையின் அளவு, முதலியன விதியாக பின்பற்றப்படும் போது மைக்கேல் ஜாக்சனது அலங்காரம் அவர் மட்டுமே முடிவு செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
நீக்ரோ என இழிவாக அழைக்கப்படும் கருப்பின மக்களது நிறத்தையும், சுருட்டை முடியையும் ஜாக்சன் மாற்றிக் காட்டினார். வெளிர் நிறமும், நீண்ட முடியும் அவரது உலக நாயகன் இமேஜூக்கு தேவைப்பட்டது. அடுத்தடுத்து அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவருக்கு தேவையான வெள்ளை நிறத்தை வழங்கின. தனக்கு வெளிரும் தோல் நோய் இருப்பதாக ஜாக்சன் தரப்பு கூறினாலும் அவர் கருப்பினத்தை சேர்ந்தவர் போல இல்லை என்று காட்டுவதும் தேவையாக இருந்தது.
நட்சத்திரங்களின் பலமே குளிர்பதனப்பட்டியில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி போன்ற அவர்களது கெட்டுப் போகாத உடல்தான். இயல்பான உடலும், அலங்காரமும் அவர்களது வாழ்க்கையில் இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. ரசிகர்களின் பார்வையில் பட்டு இதயத்தில் பதியப்பட்டிருக்கும் அந்த பூச்சுப் பூசப்பட்ட உருவத்தை பராமரிப்பது வரையிலும்தான் நட்சத்திரங்களுக்கு மரியாதை. இப்படி இவர்களுக்கு உடல் என்பது இல்லாத ஆறாவது விரல் போல சிந்தையில் அழுத்தமாக பதிந்து விடுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் அடைந்து கொண்டு உடலை பாதுகாப்பது சாத்தியமில்லை என்றாலும் அதுவே நிபந்தனையாகிவிடுகிறது. மேடை வெளிச்சத்திலும், வீடியோ கிராபிக்சிலும் உருவான ஜாக்சனது உடல் தோற்றம் அவரை துரத்த ஆரம்பித்தது. இந்த உடல் கற்பிதம் பின்னர் ஒரு உளவியல் நோயாக அவருக்கு மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதே நோய் மர்லின் மன்றோவுக்கும் இருந்ததாகவும் தெரிகிறது

மர்லின் மன்றோவோ அல்லது சிலுக்கு ஸ்மிதாவோ அவர்களது கவர்ச்சியான உடலுக்காக மட்டும் போற்றப்பட்டார்கள். எல்லா வகைகளிலும் இவர்களைப்பற்றிய கவனம், பார்வை, மதிப்பு எல்லாம் உடல்களைப் பற்றியே பேசப்படும். இந்த உடல்தான் பெரும் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கிறது என்பது உண்மையானாலும் இதனுள் இருக்கும் உள்ளத்தை எவரும் சீண்டுவதோ அங்கீகரிப்பதோ இல்லை. இதனால் இந்த உடல் நட்சத்திரங்கள் உளவியல் ஆறுதலின்றி உடலை ரசிக்கும் கூட்டத்தின் மத்தியில் விரைவிலேயே தனிமைப்பட்டு போகிறார்கள். இறுதியில் தற்கொலையும் செய்கிறார்கள். இந்த முரண்பாடு முற்றாதவர்கள் தங்களது நட்சத்திர வாழ்வை தக்கவைத்துக் கொள்கிறார்கள். கவர்ச்சி நடிகை தீபா பின்னர் இயேசுவின் நற்செய்தியாளராக மாறியதும் கூட இந்த வகைதான்.

மைக்கேல் ஜாக்சனும் தனது உடலுக்கு ஏதோ அதீத திறனுள்ளதாக நினைத்துக் கொண்டார். இந்த உடல்போதை ஒவ்வொரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் அதிகரித்தது. மேடையில் தன்னைப் பார்த்து கதறி அழும் ரசிகர்களின் உணர்ச்சி தரும் மிதப்பில் இந்த ரணகளமான சிகிச்சையை அவர் விரும்பியே சகித்துக் கொண்டார். வெள்ளை நிறத்தின் தயவில் ஜாக்சன் நிலைபெறுவது இசையில் கோலேச்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவையாக இருந்தது. கருப்பை வெளிரவைக்கும் அழகுசாதனப் பூச்சுப்பொருட்களின் விற்பனைக்கு ஜாக்சனும் ஒரு காரணம். கருப்பர்களின் மத்தியில் கூட அட்டைக் கருப்பை சற்றே மாநிறமாக்கும் ஆசையை மைக்கேலின் வெள்ளை அவதாரம் ஏற்படுத்தியது. கருப்பினத்தவரின் போராட்டத்திற்கு இப்படித்தான் ஜாக்சன் எதிர்மறைப் பங்காற்றினார்.
நன்றி: வினவு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,