எந்த எம்எல்ஏவும் இதுவரை இப்படி இறங்கி அடிச்சது இல்லை.. அதிரடி காட்டும் உதயநிதி
எந்த எம்எல்ஏவும் இதுவரை இப்படி இறங்கி அடிச்சது இல்லை.. அதிரடி காட்டும் உதயநிதி
தமிழகத்தில் எந்த எம்எல்ஏவும் இதுவரை இப்படி இறங்கி அடித்து இருப்பாரா என்றால் நிச்சயம் தெரியவில்லை. சேப்பாக்கம் தொகுதியில் வார்டு கவுன்சிலர் போல் வேலை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். வார்டு கவுன்சிலர் கூட இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வாரா என்பது சந்தேகம் தான்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் முதலமைச்சராக பதவியேற்றார். அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றார்.
தனது தாத்தா கருணாநிதியின் கோட்டையான சேப்பாக்கம் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். பொதுவாக எல்லா எம்எல்ஏக்களுமே ஜெயித்த பின் நன்றி தெரிவிப்பதற்காக ஒரு முறை தொகுதிக்கு செல்வார்கள். அதன்பிறகு ஏதேனும் பெரிய பிரச்சனை என்றால் மட்டும் அந்த இடத்திற்கு செல்வார்கள்.
மற்றபடி தொகுதியில் எல்லா இடங்களுக்கும் சென்று பிரச்சனைகளை தேடி கண்டுபிடித்து சரிசெய்ய உத்தரவிடமாட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எல்லா எம்எல்ஏக்களுமே இப்படித்தான் இருப்பார்கள். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக அவ்வப்போது தொகுதிக்கு சென்று மக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை தீர்த்து வைப்பார்கள்.
ஆனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் செயல், சொந்த கட்சியினரையும், அரசு அதிகாரிகளையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தொகுதிக்குள் தினசரி சென்று குறைகளை கேட்டு அந்த குறையை அதிகாரிகள் சரி செய்தார்களா என்பதை ஆய்வு செய்து வருகிறார்.
கழிவறை மோசமாக உள்ளது என்ற புகாரை கேட்டு, அதை உள்ளே எட்டிபார்த்து சரி செய்ய உத்தரவிட்டார். இதை எல்லாம் எந்த எம்எல்ஏவும் செய்யாத ஒன்று. தொகுதிகளுக்குள் ஏழைகள் அதிகம் உள்ள குடிசை மாற்று குடியிருப்புகள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அடிக்கடி சென்று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த ஒரு மாதத்தில் உதயநிதி எத்தனை வீட்டிற்கு சென்று வந்தார் என்பது கணக்கே இல்லை. தொகுதி மக்களிடம் தடுப்பூசி போடுகள் என்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் உதயநிதி. மொத்தமாக சொல்வது என்றால், ஒரு வார்டு கவுன்சிலர் போல், தெரு தெருவாக தண்ணீர், குப்பை, கழிவறை, வறுமை, காவல்துறை கெடுபிடி என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் முதல் ஆளாக வந்து நிற்கிறார் உதயநிதி.
இவ்வளவு தூரம் உதயநிதி ஸ்டாலின் இறங்கி வேலை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன..? எம்எல்ஏவாக மற்றவர்களை போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதற்கு என்ன காரணம்? மொத்த தொகுதி மக்களும் தன்னை பற்றி பேசுவதை தாண்டி, தமிழகம் முழுவதுமே இப்படியொரு எம்எல்ஏ நமக்கு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று ஏங்க வைக்கும் அளவுக்கு வேலை செய்ய என்ன காரணம்? நிச்சயம் இதற்கான காரணங்கும் இருக்கும். 'வருங்கால அரசியலை' மனதில் வைத்து உதயநிதி ஆரம்பத்திலே இறங்கி அடிப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Comments