திருக்குறள் கருத்துகளை கொண்டு சேர்க்க தவறி விட்டோம்: இலங்கை ஜெயராஜ் ஆதங்கம்
திருக்குறள் கருத்துகளை கொண்டு சேர்க்க தவறி விட்டோம்: இலங்கை ஜெயராஜ் ஆதங்கம்
இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய அறிவுப்புலங்களுடன் வலம் வரும் பேச்சாளர், இலங்கை ஜெயராஜ். கம்பவாரிதி ஜெயராஜ் என்று அழைக்கப்படுபவர்.
ராமாயணம், திருக்குறள், பெரிய புராணம், சைவ சித்தாந்தம், இவரது ஆர்வத்துறைகள். அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐஸ்வர்ய லட்சுமி தத்துவக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் கூட. இனம், மொழி, நாடு கடந்தும் கூட, இவரது பேச்சு ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இலங்கை ஜெயராஜ், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உலக நாடுகளில், மொழி மற்றும் சமயம் மீதான பற்றின் தற்போதைய நிலை?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, லண்டன், கனடா, ஓமன், செசல்ஸ் என, பல நாடுகளுக்கு சென்று சொற்பொழிவு, பட்டிமன்ற நிகழ்வில் கலந்துள்ளேன். மேலை நாடுகளில் வாழும் இன்றைய இளைய தமிழ் சமுதாயம், முழுக்க முழுக்க ஆங்கிலத்துக்கு ஆட்பட்டுவிட்டது. அந்நாடுகளில் மொழி, சமயம், கலாசாரம் ஆகியவை நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை, எனக்கு இல்லை.
இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் தமிழ் மொழியின் நிலை எப்படி இருக்கிறது?
பிற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில், மொழியை வளர்க்க ஏராளமான அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில், தமிழ் மொழி மீது பற்றுக்கொண்ட பல அமைப்புகள் மொழியை வளர்க்க பல வகைகளில் முயற்சி செய்து வருவது, பாராட்டுக்குரியது.
தமிழ் மொழியின் பயன்பாடு, எந்த நிலையில் இருப்பதாக உணர்கிறீர்கள்?
ஊடகம் மற்றும் தொலைக்காட்சியில், மக்களை கவர்வதற்காக மொழியில் கவர்ச்சியை கூட்டுகின்றனர். மொழியை எளிமைப்படுத்தி காண்பிப்பதாக கூறி, அதை மலினப்படுத்து கின்றனர்; இது, ஏற்புடையதல்ல. மொழியை அதன் தன்மை, பண்பு மாறாமல் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
உலக பொதுமறையான திருக்குறள், உலக மக்களை எந்தளவில் சென்றடைந்திருக்கிறது?
திருக்குறள், அதில் உள்ள கருத்துகளை, உலக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், சென்று சேர்க்க தவறிவிட்டோம். திருக்குறளை, கவிதை வடிவில் மக்கள் மனதில் திணிப்பதால் எவ்வித பலனும் இல்லை. மாறாக, திருக்குறள் கருத்துக்களை, கட்டுரை வடிவில் மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும்.
இலங்கையில் போருக்கு முந்தைய, பிந்தைய நிலவரம் எப்படி உள்ளது?
மிகப்பெரிய போர் நடந்து முடிந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. போருக்கு முன், ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்த வெடிசப்தம் இப்போது இல்லை; அமைதி நிலவுகிறது. ஆனாலும், தமிழர்களுக்கான முழு உரிமை, அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இலங்கையில், தங்களால் உருவாக்கப்பட்ட கம்பன் கழகத்தின் செயல்பாடு குறித்து...
சிறப்பான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் கூட, கம்பன் கழகம் சிறப்பாகவே செயல்பட்டது. தமிழை பற்றி பேசிக் கொண்டிருப்போம்; மிக அருகே வெடி சத்தம் கேட்ட காலங்களும் இருந்தன.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு தங்களின் அறிவுரை...
புதுமையை நிச்சயம் ஏற்க வேண்டும்; அதே நேரம், நம் முன்னோர் விட்டு சென்ற நமக்கான அடையாளமான மொழி, சமயம், கலாச்சாரத்தை போற்ற வேண்டும்; வளர்க்க வேண்டும். அப்போது, வெற்றி தானாக வரும்.
நன்றி: தினமலர்
Comments