மந்திரக்குரலால் மாயவித்தைகள் செய்த மலேசியா வாசுதேவன்

 மந்திரக்குரலால் மாயவித்தைகள் செய்த மலேசியா வாசுதேவன்

பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


மிக மிக வித்தியாசமான குரல். அதன் வசீகரம் எல்லையற்றது. அது வேற லெவலில் இருந்தது. காதல், சோகம், கம்பீரம், எள்ளல், துள்ளல் என எத்தகைய அம்சத்தினையும் தன் வசீகரக் குரல் மூலம் ரசிகர்களின் மனதை சுண்டியிழுக்கச் செய்தவர். அந்;த மன்மதக்குரலுக்குச் சொந்தக்காரர்தான் மலேசியாவாசுதேவன். மந்திரக்குரலால் மாயவித்தைகள் செய்தவர்; மலேசியாவாசுதேவன். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...அள்ளித் தந்த பூமி...கோடைகாலகாற்றே...தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி என்று 80களில் ரசிகர்களைத் தெறிக்க விட்டவர் மலேசியா வாசுதேவன்.
பிரபல பாடகர் மற்றும் நடிகர், வில்லன், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகக்கலைஞராக இருந்தார் மலேசியா வாசுதேவன். இவர் 8000த்திற்கும் அதிகமான தமிழ் திரைப்படப்பாடல்களைப் பாடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார்.
மலேசியா வாசுதேவன் 15.6.1944-ல் பிறந்தார். மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26.1.1976ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என்று 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகி. வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப் படங்களில் பாடல் பாடியுள்ளார்.
கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு 8வது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இவர் மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகர்.
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.
பின்னணிப் பாடகராக வி.குமார் இசையில் டெல்லி டு மெட்ராஸ் என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். இளையராஜா இவரது பழைய நண்பர். அதற்கு முன் எவ்வளவோ வாய்ப்புகள் வந்தபோதும் அவை பேர் சொல்லவில்லை. பாரதிராஜா இயக்கத்தில் வந்த 16 வயதினிலே படம் தான் அவரை தமிழ் திரையுலகில் வாரி அணைத்துக் கொண்டது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. அதே படத்தில் செவ்வந்திபூ முடிச்ச சின்னாத்தா என்ற பாடலும் அற்புதமாக இருக்கும். இந்தப்பாடல் உருவான கதை கொஞ்சம் சுவாரசியம்தான்.
இளையராஜா, எஸ்.பி.பி., பாரதிராஜா எல்லோருமே நெருங்கிய நண்பர்கள். இவர்களில் எஸ்.பி.பி.க்கு உடல்நலம் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருந்தார். பாரதிராஜாவுக்கு டென்ஷன் ஆகியது. இளையராஜா அவரை நிதானத்திற்கு கொண்டு வந்தார். அப்போதுதான் அங்கிருந்த மலேசியா வாசுதேவனிடம், இந்தப்பாடலைப் பாடு. இதில் நீ ஹிட் ஆனால், பெரிய ஆளா...வந்துருவ...என சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார். அப்படி வந்தப் பாடல் தான் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல். அவரது மந்திரக்குரலைக் கேட்ட இளையராஜாவுக்கு ஆச்சரியம். இதுமாதிரி இதுவரை எந்தக் குரலும் நமக்கு வரவில்லையே...இவரைப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்று அவருக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்தார். அத்தனை வாய்ப்புகளையும் பொன்னாக்கினார் வாசுதேவன்.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன. கிழக்கெ போகும் ரயில் படத்தில் கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ..., மலர்களே நாதஸ்வரங்கள் என்ற பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ரெண்டே பாடல்கள்தான். ஒன்றை கமலும், மற்றொன்றை வாசுவும் பாடியிருப்பார்கள். இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே பாடல் தான் அது. புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே...நிறம் மாறாப்பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள்...இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நம்மை சொக்க வைத்து சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
கமலுக்கு கல்யாணராமனில் கொடுத்த காதல் தீபம் ஒன்று பாடலும் ரஜினிக்கு தர்மயுத்தம் படத்தில் ஒருதங்க ரதத்தில், ஆகாய கங்கை பாடல்கள் தேனாக இனித்தன.
ரஜினிக்கு இன்று வரை புகழ் சேர்த்து வரும் பாடல் இது. அதுதான் முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற பொதுவாக எம் மனசு தங்கம்...இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் தான். காளி படத்தில் அலையாடும் பூங்கொடியே பாடலும் அற்புதமாக இருக்கும். அடுத்தவாரிசு படத்தில் ஆசை நூறு வகை பாடல் ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்து ஆடவைத்தது. அதேபோல் ரஜினிக்கு சொல்லி அடிப்பேனடி...பாடலும், என்னோட ராசி நல்ல ராசி...பாடலும் இவரது குரலில் மகத்தானவை.
கமலுக்கு சட்டம் என் கையில் படத்தில் ஆழ்கடலில் தேடிய முத்து பாடலும் ரசிகர்களின் மனதை வருடச்செய்தவை தான். சகலகலாவல்லவனில் நக்கலும் நையாண்டியுமாக இவர் பாடிய கட்டவண்டி கட்டவண்டி பாடல் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. முதல் மரியாதை படத்தில் இவர் தான் அனைத்துப் பாடல்களையும் பாடியிருப்பார். சிவாஜிக்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கும் அந்த மாயக்குரல். பாட்டுச்சத்தம் கேக்கலியோ...பாட்டுச்சத்தம் கேக்கலியோ என்று வரும் குரலில் ரசிகர்கள் கூடவே சேர்ந்து பாடினர்.
2 கேரக்டர்களுக்கும் 2 குரல்களில் பாடியிருப்பார். மிஸ்டர் பாரத் படத்தில், என்னம்மா கண்ணு சௌக்கியமா.., பாடலும், புன்னகை மன்னன் படத்தில் மாமாவுக்கு குடும்மா..குடும்மா பாடலும் அந்த ரகம் தான். புதுக்கவிதை படத்தில் வா வசந்தமே.. பாடலும் இதே ரகம்தான்.
இவர் பொங்கி எழுந்து பாடிய ஓ...ஒரு தென்றல் புயலாகி வருதே... பாடல் கம்பீரமாக இருக்கும். என்னுயிர் தோழன் படத்தில் குயிலு குப்பம் பாடலும், ஹே...ராசாத்தி ராசாத்தி...பாடலும் ஒரு சுகா அனுபவம். அம்மன்கோவில் கிழக்காலே படத்தில் ஒரு மூணு முடிச்சாலே...முட்டாளா ஆனேன் பாடலும்; படிக்காதவன் படத்தில் ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக்குயிலாக பாடலும் மனது மறக்காதவை பட்டியலில் இடம்பெறும்.
கே.பாக்யராஜின் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இடம்பெற்ற காதல் வைபோகமே...காணும் நன்னாளிலே...பாடல் அப்போதைய வானொலிகளில் ஒலிக்காத நாள்களே இல்லை. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இவர் பாடிய கோடை கால காற்றே...பாடலை வழக்கத்திற்கு மாறாக மிக மிக வித்தியாசமான குரலில் பாடியிருப்பார்.
கங்கை அமரனின் கோழிகூவுது படத்தில் பூவே...இளைய பூவே...பாடலும், பாண்டியராஜனின் முதல் இயக்கத்தில் வெளியான கன்னிராசி படத்தில் சுகராகமே...சுகபோகமே பாடலும், ஆளை அசத்தும் மல்லியே..மல்லியே பாடலும் செம ஹிட் ஆனவை. ஆண்பாவம் படத்தில் இடம்பெற்ற குயிலே..குயிலே...பூங்குயிலே பாடலை இப்போது எங்காவது கேட்டால் அப்படியே நின்று விடுவீர்கள். பாடலை முழுவதும் கேட்கத் தூண்டும் அந்த மன்மதக்குரல். மண்வாசனை படத்தில் இடம்பெற்ற அரிசி குத்தும் அக்கா மகளே...பாடல் தமிழ் சினிமாவில் இவருக்கு தனி முத்திரையை குத்தியது.
இயக்குனர் மகேந்திரனின் நண்டு படத்தில், இவர் பாடிய அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.
கமல், ரேவதி நடித்த ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக வந்து மிரட்டியிருப்பார். பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் டிவியில் சிலந்தி வலை உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய மலர்களிலே அவள் மல்லிகை என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளராக மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 20.2.2011ல் காலமானார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,