`உலகிற்கே முன்னோடியாக தமிழ்நாடு மாடலை உருவாக்க வேண்டும்!' - கோவிட் Task Force தலைவர் பூர்ணலிங்கம்
`உலகிற்கே முன்னோடியாக தமிழ்நாடு மாடலை உருவாக்க வேண்டும்!' - கோவிட் Task Force தலைவர் பூர்ணலிங்கம்
தமிழகத்தில் ஹெச்.ஐ.வி தாக்கம் அதிகரித்த நேரத்தில் சுகாதாரத் துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம். அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட உத்திகள் `தமிழ்நாடு மாடல்' என்ற பெயரில் பிற மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டன. 1994-ம் ஆண்டு சுகாதாரத்துறை செயலராக இருந்தபோது அவர் எடுத்த செயல்பாடுகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் TNMSC என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர் பூர்ணலிங்கம்.
corona virusPixabay
இவர் கடந்த 10 ஆண்டுகளாகவே பொது சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். உலக வங்கி, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளுக்கும், பெரும்பாலான மாநிலங்களுக்கும், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பைப் பற்றிய ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு நிலவரங்களைக் கையாள பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட Task Force குழுவைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழுவில் பொது சுகாதாரத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் அதிகாரிகளும் மருத்துவர்களுமான குகானந்தம், குழந்தைசாமி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இது தவிர, தற்போது பொறுப்பிலிருக்கும் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த டாஸ்க் ஃபோர்ஸ் எப்படிச் செயல்படும் என்று அறிந்துகொள்ள பூர்ணலிங்கத்திடம் பேசினோம்:
``அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இந்தக் குழுவானது அரசுக்கு ஆலோசனைகளை அளிக்கும் பணிகளைச் செய்யும். குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திப்புகளை நடத்தி ஆலோசிக்கும். இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் கண்காணிக்கும்.
கோவிட்-19 சூழலைக் கையாள்வது பற்றி குழுவிலிருக்கும் வல்லுநர்களிடமும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, அதைத் தற்போதைய சுகாதாரத்துறை செயலரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு அரசுக்குப் பரிந்துரைகளை அளிப்போம். அரசுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிந்துரைகள் அளிக்கப்படும்.
இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல் மட்டுமன்றி அடுத்தடுத்து கோவிட்-19 அலைகள் வந்தால் அதைக் கையாளும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்று பெருந்தொற்றுகள் வரும் பட்சத்தில் அதைக் கையாளும் வகையிலும் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் பரிந்துரைகளைத் தயார் செய்து அளிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
கோவிட்டை கையாள்வதில் இந்தியாவுக்கு மாடலாக கேரளா உள்ளது. ஆனால், கேரளாவைவிட சிறப்பாகச் செயலாற்றும் திறனும் கட்டமைப்பும் தமிழகத்துக்கு உள்ளது. இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் ஒரு மாதிரியாகத் தமிழகம் செயல்படும் மாடலை உருவாக்க வேண்டும். அவ்வப்போது இந்தக் குழு இணைந்து ஆலோசனைகளில் ஈடுபடும். வரும் வாரத்தில் முதல் மீட்டிங் நடைபெறும்'' என்றார்.
நன்றி: விகடன்
Comments