தோழர் சங்கரய்யா அவர்களின் நூறாவது(100) வயது பிறந்த நாள்

 நூறு ஆண்டுகளுக்கு முன்பு , தமிழகத்தில் ஏற்றப்பட்டு செங்கொடியை தன் தோளில் சுமந்து பல்லாயிரம் கணக்கில் செங்கொடி மைந்தர்களை உருவாக்கியவர், தமிழகத்தின் உழைக்கும் மக்கள் நலனுக்காக பாடுபட்டு தியாகத்தின் திருவுருவம், அப்பழுக்கற்ற பொது வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர் சங்கரய்யா அவர்களின்  நூறாவது(100) வயது பிறந்த நாள் ஜீலை 15, தமிழகத்தின் வரலாற்றில் சிறப்பு நாள்அசைபோட அசைபோட முடிவற்று நீளும் தோழர் என் சங்கரய்யா !
பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது நாடே கொந்தளித்தது. தூத்துக்குடியில் ஆவேச கண்டன ஆர்ப்பாட்டத்தை தேசபக்த இளைஞர்கள் நடத்தினர் . இந்த ஆர்ப்பாட்டத்தை இரண்டு சகோதரர்கள் கண் இமைக்காமல் பார்த்தனர் . மூத்தவன் ராஜமாணிக்கம் , இளையவன் சங்கரய்யா . ஒண்பது வயது சங்கரய்யா நெஞ்சில் அன்று பற்றிய நெருப்பு 99 அகவையைக் கடந்து நூறாவது அகவையில் அடியெடுத்து வைக்கும்போதும் கனந்துகொண்டே இருக்கிறது .அவர்தான் எம் தோழர் என்.சங்கரய்யா .


அவர் வாழ்க்கையை பலர் எழுதிவிட்டனர் .இன்னும் பலர் எழுதுவர் . நான் அதையே இங்கு மறு ஒலிபரப்பு செய்ய விரும்பவில்லை .அவர் வாழ்க்கையிலிருந்து ஒன்றிரண்டு செய்திகளை அசைபோடவே முயல்கிறேன் .அவை வழிகாட்டி ஆகக்கூடும்.


கொரானா கொடுங்காலம் நாமெல்லாம் கிட்டத்தட்ட வீட்டுச்சிறை . அதனால் வெறுமையும் விரக்தியும் சூழநின்றோம். அப்படி ஒருநாள் தோழர் சங்கரய்யாவின் மூத்த மகன் சந்திரசேகரோடு உரையாட நேர்ந்தது . அப்போது சந்திரசேகர் சொன்னார் , “ நான் அப்பாவிடம் கேட்டேன் , அப்பா ! உங்களுக்கு வெறுப்பாக இல்லையா ? அதற்கு அப்பா சொன்னார் ,போடா ! சிறை ,தலைமறைவு  இவற்றில் வாழ்ந்த எனக்கு இது ஒன்றும் சிரமமல்ல ; எச்சூழலையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும்…” 


எட்டாண்டு சிறை ,மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கையை பாடமாய் ,பயிற்சியாய் ஏற்றுக்கொண்ட உள்ளத் தெளிவும் , எச்சூழலையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்கிற மனவுறுதியும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பாடமல்லவா ?


ஒரு முறை சங்கரய்யாவின் இளைய மகன் நரசிம்மன் சொன்னார் இன்றும் அதாவது அகவை நூறிலும் தினசரி தீக்கதிர் ஒரு வரிவிடாது படிக்கிறார் ,தி ஹிண்டு ஆங்கில நாளேடு முழுவதும் படிக்கிறார் , சில வெளிநாட்டு ஏடுகளையும் வாசிக்கிறார் , புத்தக வாசிப்பின் வேகம் குறைந்திருந்தாலும் வாசிப்பு நிற்கவில்லை .


நாம் இந்த வாசிப்பு பழக்கத்தை அவரிடமிருந்து அப்படியே உள்வாங்க வேண்டாமா ?


நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளராய் இருந்தபோது திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் ,அதன்பின் கோவை மாநில மாநாட்டில் விடுத்த அறைகூவல் மட்டுமல்ல மாணவர் ,வாலிபர் நிகழ்வுகளில் பேசும்போதெல்லாம் அவர் சலிக்காமல் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்துவார் அதுதான் “ காதல் செய்வீர் ! சாதி மறுப்பு திருமணம் செய்வீர் “ அதோடு நிற்க மாட்டார் , “ இளைஞர்களே ! நீங்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் மட்டும் போதாது ,உங்கள் சகோதரிகளின் காதலுக்கும் துணை நில்லுங்கள் .வீட்டில் அதற்காகப் போராடுங்கள் ..” 


ஆம் .சாதியத்தின் எலும்பை உடைக்க அகமண முறையை முதலில் நொறுக்க வேண்டும் , அதற்கு காதல் திருமணம் சிறந்த ஆயுதம் என்கிற முறையிலும் , உரிய வயதை எட்டிவிட்ட ஆணும் பெண்ணும் தங்கள் இணையைத் தாங்களே தேர்வு செய்வது மனித உரிமை என்கிற முறையிலும் , வாழ்க்கையில் ஜனநாயகக் காற்றும் சமத்துவ சிந்தனையும் ஓங்க வேண்டும் என்கிற வகையிலும் காதல் திருமணத்தை ,சாதிமறுப்புத் திருமணத்தை எங்கும் இன்னும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்பவர் தோழர் என்.சங்கரய்யா . 


அதுமட்டுமல்ல ,தான் தலைமை ஏற்கும் ,வாழ்த்துரை வழங்கும் ஒவ்வொரு திருமணத்திலும் “ பெற்றோரைப் பேண வேண்டிய கடமையை ,அவசியத்தை” வலியுறுத்திக் கொண்டே இருப்பார் . அதன் பின் நேரில் சந்திக்கும் போதெல்லாம் குடும்ப நலம் விசாரிப்பார் . 


நம் கட்சித் தோழர்கள் தங்கள் குடும்ப வாழ்வில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் .சில தோழர்கள் அதில் கவனக் குறைவாக இருப்பதால் மொத்த குடும்பமும் சிக்கலுக்கு உள்ளாவதுடன் ,நம் கட்சி மீதும் கோவம் கொள்ளச் செய்துவிடுகிறது என்பதை நான் உட்பட அவரோடு தனித்து உரையாடும் பல தோழர்களிடம் சொல்லியிருக்கிறார்.


இவை ஊருக்கு உபதேசம் அல்ல ; அவர் வீட்டில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் .அவர் குடும்பம் பல்வேறு சாதி ,மத சங்கமமாய் இருக்கும் .


குடும்ப உறுப்பினர்கள் ,உறவினர்கள் மீது சங்கரய்யா காட்டும் அக்கறையும் அரவணைப்பும் மிகப் பெரிது என வாலிபர் சங்கத்தில் என்னோடு பணியாற்றிய காலத்தில் டி.ரவீந்திரன் அடிக்கடி சொல்லுவார் . உறவோடு கலப்பது என்பது சாதிய சகதியில் கலப்பதாக அல்லாமல் சாதியை மீறி சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் உந்துவிசையாக இருந்தார் சங்கரய்யா . அதில் நாம் கற்க நிறைய பாடம் உண்டே !


தமிழ் மீதான அவரின் காதல் அளவிடற்கரியது . இளமையிலேயே விடுதலைப் போரில் சங்கநாதம் செய்த நாள் தொட்டு - கல்லூரியில் பரிலேலழகர் இலக்கிய மன்றத்தில் செயலாளராகச் செயல்பட்ட காலந்தொட்டு – த மு எ க ச விற்கு விதைபோட்ட காலந்தொட்டு தமிழை உயர்த்திப் பிடித்தே வந்திருக்கிறார் . எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பழந்தமிழ் இலக்கியங்களை படிக்கச் சொல்லி வற்புறுத்தாத மேடையே கிடையாது . நூல்களை வாசிக்க வாசிக்கத்தான் சொற்கள் வசப்படும் ; சொல்ல வந்ததை சுவைபட வலுவாய்ச் சொல்ல முடியும் என்பதை வாழ்நெறியாகக் கொண்டவர் , மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னவர் .


மொழித்திணிப்பை ஏற்காதவர் . தமிழே ஆட்சிமொழியாக ,பயிற்றுமொழியாக ,நீதி மொழியாக ,அறிவியல் மொழியாக ஓங்க வேண்டும் ; அதற்கேற்ப அரசின் சட்டம் வேண்டுமென சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஓயாது வாதடுபவர் .போராடுபவர் .  இயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் உரையாற்றுபவர் .தமிழைப் பழுதறக் கற்பதும் எழுதுவதும் பேசுவதும் உரிமைக்கு போராடுவதும் நாம் அவரிடமிருந்து மரபுரிமையோடு ஏற்க வேண்டிய நல்ல செய்தி .


அவரிடம் அசைபோட இன்னும் இன்னும் நிறைய உண்டு . அசைபோட அசைபோட முடிவற்று நீளும் தோழர் என் சங்கரய்யா ! ஆயினும் இரெண்டே இரண்டு செய்திகளோடு நிறைவு செய்கிறேன்.


கம்யூனிஸத்தின் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அவரின் வைரம் பாய்ந்த உறுதி ஈடு இணையற்றது .அதை விவரிக்க புகின் அது நீளும் .ஒண்றைச் சொன்னால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு  பருக்கை பதமாகும்.


பொதுவாக அவர் கட்சிக்கூட்டங்களில் எங்கு எப்போது பேசினாலும் ,” சிங்காரவேலரின் தமிழகத்தை உருவாக்குவோம் ,சிங்காரவேலரின் சென்னையை உருவாக்குவோம்,” என்ற முழக்கத்தோடுதான் நிறைவு செய்வார் .சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என்பது வெறும் சொல் அல்ல , பாரதிதாசன் குறிப்பிட்டது போல் , “ போர்க்குணம் மிக்க செயல் முன்னோடி /பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி ” .


சிங்காரவேலரைப் பயின்று உள்வாங்கி சிவப்பு தமிழ்நாட்டை கட்டி எழுப்ப சங்கரய்யாவின் அறைகூவலே நம் செயலுக்கான கட்டளையாகுக ! குறிப்பாக மாணவர்களை ,இளைஞர்களை , தொழிலாளி ,விவசாயி வர்க்க வீட்டு ஆண் ,பெண்களை ,நடுத்தர மக்களை வென்றெடுத்து சிங்காரவேலரின் தமிழ்நாடாக்குவோம் .சங்கரய்யாவின் நூறாவது அகவையில் அதற்கு உறுதி ஏற்போம் !


சிபிஎம் கட்சியிலிருந்து தனிப்பட்ட கோபதாபங்களால் வெளியேறியவர் பெரும்பாலோர் கட்சிக்கு எதிரி அல்ல , மார்க்சியத்தின் எதிரி அல்ல என்பதை சங்கரய்யா அடிக்கடி சுட்டி அவர்கள் கட்சியோடு நெருங்கி வருமாறு அறைகூவல் விடுகிறார் . அந்தத் தோழர்களோடு தொடந்து உரையாடுமாறு கட்சித் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கிறார் .தனிமனிதனைவிட கட்சி மேலானது ;மார்க்சியம் மேலானது அல்லவா ? நாம் சங்கரய்யா நூற்றாண்டில் இதையும் ஓர் கட்சிக் கடமையாக செயதால் நம் வலிமைகூடுமே ! அதுவும் பாசிசம் சூழும் வேளையில் நம் வலிமை அதிகரிப்பதே பாசிச எதிர்ப்பு போரினை கூர்மையாக்கும் !


சென்ற ஆண்டுதான் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடினோம் . இப்போது தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டைக் கொண்டாடுகிறோம் . இரண்டும் தற்செயலானது .ஆயின் இரண்டும் சொல்லும் செய்தி அளவிட இயலாதது .கற்போம் ! செயல்படுவோம் !


# சு.பொ.அகத்திய லிங்கம்.


பகிர்ந்தவர் : இளங்கோ,சென்னைComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,