பொதுவுடமை போராளி என்.சங்கரய்யாவுக்கு அகவை 100!

 922 ஜூலை 15ஆம் தேதி பிறந்த பொதுவுடமை போராளி என்.சங்கரய்யாவுக்கு அகவை 100!

ஆங்கிலேயன் பிடியில் இருந்து பாரத நாடு விடுதலை பெற எண்ணற்ற மாணவர்கள், இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்த நேரம் அது. தியாக தீபங்களாக விடுதலை வேட்கை கொண்ட மாணவர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக கல்லூரிகளில் சங்கம் அமைத்தனர். அந்த வகையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் சங்க செயலாளராக ஒரு துடிப்புமிக்க மாணவர் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கொதிப்படைந்த கல்லூரியின் வெள்ளைக்கார முதல்வர், சங்க செயலாளரான அந்த மாணவரிடம் மாற்றுச் சான்றிதழ் (TC) வாங்கிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறு என்று கோபமாக சொன்னார்.அதற்கு அந்த மாணவர், நல்லது. நீங்கள் எனக்கு டி.சி கொடுத்து கல்லூரியில் இருந்து வெளியேற்றினால் கல்லூரியில் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார். அதிர்ச்சியடைந்த கல்லூரி முதல்வர், வேறு வழியில்லாமல் அந்த மாணவரை வெளியேற்றாமல் தனது மிரட்டலை நிறுத்திக் கொண்டார். தன்னை மிரட்டிய கல்லூரி முதல்வரையே எச்சரித்த அந்த மாணவர்தான், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக உயர்ந்த என்.சங்கரய்யா.
மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யா 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யா என மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்ததுதான். அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. அவர் 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையடுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர் சங்கரய்யா பங்கேற்றார்.
மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ரகசியமாக அமைக்கப்பட்டது. சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் இதில் உறுப்பினர்களானார்கள். செயல்பாடுகள் வேகமெடுத்தன. 1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைதானார்கள். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சங்கரய்யா தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். அதோடு அவரது கல்லூரிப் படிப்புக்கும், அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.
“நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று மாணவர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தார், சங்கரய்யா. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் கல்லூரித் தேர்வை எழுத முடியவில்லை. அப்போது, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார்.
சங்கரய்யா "அப்போது நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீயாகப் பற்றிப் பரவியது. இதில் நானும் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததே என்ற உற்சாகம்தான் எனக்கு ஏற்பட்டது" என்று பதில் கூறினார்!
கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அப்போது நடந்த மாணவர் சங்க மாநாட்டில் தமிழ்நாட்டுப் பிரிவின் பொதுச் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில், "வெள்ளையனே வெளியேறு!" இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்தது. காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் சங்கரய்யா. பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்தார். அக்டோபர் மாதத்தில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார்.
1944-ல் காந்தியும் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலையானார்கள். சங்கரய்யாவும் விடுதலையானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை ஹார்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், கூலி உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள் மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும். கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்த காலமாகும்.
இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரும் பங்கேற்றார் சங்கரய்யா. அப்போதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படையினர் போராட்டமும் நடந்தது. இதை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இந்த ஆதரவுப் போராட்டத்தை மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் போராட்டம் நடந்தது.
அதே காலத்தில்தான் மதுரைச் சதி வழக்கு போடப்பட்டு பி. ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். இந்திய சுதந்திரத்துக்கு முதல் நாள், இரவில்தான் இவர்கள் விடுதலையானார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்குச் சுதந்திர இந்தியாவிலும் ஓய்வில்லை. முன்னைவிட அதிகப் பொறுப்புகளும் பணிகளும் காத்திருந்தன. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வந்துசேர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். உழைக்கும் மக்கள் உரிமை பெறச் சிறப்பாகத் தொண்டாற்றினார்.
எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு, எண்ணி லடங்காப் போராட்டங்கள் என்று வாழ்ந்த போராளி சங்கரய்யா. மூன்று ஆண்டுகள் (1948-51) தலைமறைவுக் காலம். இந்தியாவில் எங்கெங்கெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தார் என்று பட்டியல் போட்டால் நீளும். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை. ஆனாலும் எதற்காகவும் அவர் பொதுவாழ்வில் இருந்து பின்வாங்கவில்லை.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார். கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியைத் திருமணம் (1947 செப்டம்பர் 18) செய்துகொண்டார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார்.
75 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தன் பிள்ளை, பேரக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு சீர்திருத்த, சாதி மறுப்புப் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார். அப்பழுக்கற்ற பொதுவாழ்வும், மக்கள் சேவையும், மகத்தான தியாகமும் கொண்ட கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 100 வயது. லட்சியத்தில் உறுதியோடு கொள்கைக் குன்றாய் விளங்கும் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம். தோழர் சங்கரய்யா வாழிய பல்லாண்டு!
May be an image of one or more people and text that says "ஆந்தை ரிப்போர்ட்டர் சுழலும் விழிகளில் உலகம் CPI(M) Shud iteFedera ACONFE சங்கரய்யா 100"


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,