பூலித்தேவன்தான் சுதந்திர எழுச்சியின் முன்னோடி

 திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் 70 கி.மீ தொலைவில், சங்கரன்கோவிலுக்கு வடமேற்காக இருக்கிறது நெற்கட்டான்செவ்வல். நேரடியாகப் பொருநைக்கரையில் இல்லை என்றாலும், பொருநையும் சிற்றாறும் ஊட்டிய தேசியமும் தெய்விகமும் பரவிக் கிடக்கும் பகுதி.நெற்கட்டான்செவ்வலைச் சுற்றியிருந்த பாளையங்களும் கோட்டைகளும், மேற்குப் பாளையங்கள் என்றழைக்கப்பட்டன. இந்த மேற்குப் பாளையங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட தலைவராகப் பூலித்தேவர் விளங்கினார்.
ஆவுடையார்புரம் பாளையத்தினைச் சித்திரபுத்திர தேவர் ஆண்டு வந்தார். சித்திரபுத்திர தேவரின் நல்லாட்சியால் மகிழ்ச்சியடைந்திருந்த இப்பகுதி மக்கள், நெடுங்காலம் வாரிசில்லாதிருந்த சித்திரபுத்திர தேவருக்குக் காத்தப்பப் பூலித்தேவன் மகனாகப் பிறந்தபோது பெருமகிழ்ச்சி கொண்டார்கள். நல்லாட்சி தொடரும் என்னும் நம்பிக்கையும் பெற்றார்கள்.
மக்களின் நல்லெண்ணத்தின்படியே, இளமையில் போர்ப்பயிற்சி பெற்ற பூலித்தேவன், இலஞ்சி சுப்பிரமணியப் பிள்ளை என்னும் ஆசானிடத்தில் சன்மார்க்க நெறிகளையும் பாடம் கேட்டார். சித்திரபுத்திர தேவரின் அறுபத்து மூன்று ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின்னர், 1726-இல், பன்னிரண்டு வயதில், பூலித்தேவருக்குப் பட்டம் கட்டப்பெற்றது. வரகுணராம சிந்தாமணி பூலித்துரைப் பாண்டியர் என்னும் அபிடேகப் பெயரோடு பாளையக் கட்டில் ஏறினார் பூலித்தேவர்.
மாமன் மகள் கயற்கண்ணி நாச்சியாரை மணந்து, பாளைய வருமானத்தை மக்களுக்காகச் செலவிட்டு, சுய சொத்திலிருந்து திருக்கோயில் நிவந்தங்களை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிற காலகட்டத்தில்தான், நவாப்பின் கிஸ்தி, பிரிட்டிஷாரின் கப்பக் குத்தகை போன்ற சிக்கல்கள் முளைத்தன.
மேற்குப் பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவனைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். நிலப்பகுதியை பலப்படுத்தி, எதிரிகளின் படையெடுப்பைக் குறைப்பதற்காக, கோட்டைகள் சிலவற்றையும் பூலித்தேவன் கட்டியதாகத் தெரிகிறது.
இந்தக் கோட்டைகளுக்கே கூட, பண்டைய பாண்டிய மன்னர்களின் பெயர்களையும் சூட்டியுள்ளார். சொல்லப்போனால், பூலித்தேவன் என்னும் பெயரே பாண்டிய வம்சாவளியோடு தொடர்பு கொண்டதாகத்தான் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்களுக்குப் "பூழி', "பூழியர்கோன்' என்னும் விருதுப் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன (சேர மன்னர்களில் சிலருக்கும் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது).
மெக்கன்சிப் பதிவுகள் தருகிற தகவல்கள் சுவாரசியமானவை. பாண்டிய நாட்டின் அகநாடுகளில் ஒன்றான பூழி நாடு, சேரநாட்டு எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி இருந்தது. 14-ஆம் நூற்றாண்டு வாக்கில், வரகுணராம சிந்தாமணி காத்தப்ப தேவர் என்னும் தளபதிக்குப் பரிசாக, இந்நாடு பாண்டிய மன்னரால் வழங்கப்பட்டது. ஆவுடையார் புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு அத்தளபதி ஆட்சி நடத்தினார். பூழியர்களான பாண்டியர்களுக்குத் தளபதிகளாகவும் குறுநில ஆட்சியாளர்களாகவும் இருந்ததால், இந்தத் தளபதியும் இவரைத் தொடர்ந்து வந்தவர்களும் "பூழித் தேவன்' என்று தங்களை அழைத்துக் கொண்டனர்.
"பூழித்தேவன்' என்னும் பெயரே காலப்போக்கில் "பூலித்தேவன்' என்றாகி விட்டதாகத் தோன்றுகிறது.
வரகுணராம சிந்தாமணிக் காத்தப்ப தேவரைத் (1378 முதல் 1420-கள் வரை ஆட்சி நடத்தியவர்) தொடர்ந்து வந்த வம்சாவளியில், இவரிலிருந்து ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்தவர்தாம் இரண்டாம் சித்திரபுத்திர தேவர். 1663 முதல் 1726 வரை ஆட்சி நடத்திய இவருடைய மகனார்தாம், நம்முடைய கதை நாயகரான நான்காம் காத்தப்பப் பூலித்தேவன்.
புலியை அடித்து விரட்டியதால் பூலித்தேவன் என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிற செவிவழிப் பெருமையும், விஜயரங்க சொக்கநாதரின் ஆட்சிக்காலத்தில் மதுரையின் வடபகுதியில், "நீண்ட காலம் மக்களுக்குத் துன்பம் கொடுத்து வந்த புலியை ஒற்றை ஆளாக, ஆயுதமேதுமின்றிக் கொன்றார்' என்னும் உள்ளூர்த் தகவலும், பூலித்தேவனின் வீரத்தை எடுத்துக் காட்டினாலும், "பூழித்தேவன்' என்னும் பெயரே பூலித்தேவன்' என்றானதாகக் கொள்வதே பொருத்தம். ஆவுடையார்புரப் பாளையத்தின் ஆட்சியாளர்கள் யாவருமே இப்பெயரைப் பட்டப்பெயராகக் கொண்டிருந்தனர். சமீபகாலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகளில், "ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக்காத்தார் பூலித்தேவன்' என்னும் பெயர் காணப்படுகிறது. இது நம்முடைய தேசியப் போராட்ட வீரரையே குறிக்கிறது. இதே செப்பேட்டில், ஊரைப் பற்றிய பதிவு, "கஸ்பா நெற்கட்டுஞ்செவ்வல்'என்றுள்ளது.
பெயர் எப்படியாயினும், பூலித்தேவன்தான் சுதந்திர எழுச்சியின் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.
- டாக்டர் சுதா சேஷையன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,