ஸ்ரீதர்.

 உத்தமபுத்திரன்” பட வசனங்களை எழுதி முடித்தவுடன் முதலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத்தான்நான் படித்துக் காட்டுவேன். தனக்கு திருப்தியாக இல்லை என்று அவர் சொல்லி விட்டால் உடனே அந்த வசனங்களை அடித்துவிட்டு அவரது திருப்தியைப் பெறும்வரையில் திரும்பத திரும்ப எழுதிக் காட்டுவது என் வழக்கம். ஏனெனில், அவரது கணிப்பு அவ்வளவு சரியாக இருக்கும்…” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திறமையைப் பாராட்டியுள்ளார் ஸ்ரீதர்.


அந்த அளவிற்கு ஸ்ரீதர் மரியாதை வைத்திருந்த கோபாலகிருஷ்ணனை, ஸ்ரீதர் கண் முன்னாலேயே ஒருவர் அவமானப்படுத்தினார். அன்று ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ‘உத்தமபுத்திரன்’ கதை, விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீனஸ் பிக்சர்சில் இருந்த ஒருவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அவமானப்படுத்தும் வகையில் துடுக்குத்தனமாக பேசினார். அவர் அப்படி பேசியவுடன் அவமானத்தால் குன்றிப் போனார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
“பலர் முன்னிலையில் என்னை அவர் அப்படி அவமானப்படுத்தி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர் பேசியதும் எனக்கு ரொம்பவும் வேதனையாகிவிட்டது. இப்படி எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டாரே என்ற தலைக்குனிவு காரணமாக என்னால் பதில் பேச முடியவில்லை. அதே சமயம் அந்த வேதனையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மனதிற்குள்ளேயே புழுங்கினேன். பொருமினேன். ஆனால், என்னைவிட பல மடங்கு அதிகமாகப் புழுங்கிய இதயம் ஒன்று அங்கே இருந்தது. அந்த இதயத்துக்கு சொந்தக்காரர் என் மதிப்பிற்குரிய கதாசிரியர் ஸ்ரீதர்…” என்று ஓரு கட்டுரையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அந்த நபர் விமர்சித்துப் பேசியதும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்ரீதர் நேராக வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தியிடம் சென்றார்.
“நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போலவே கோபாலகிருஷ்ணனும் ஒரு எழுத்தாளர். என் கண் முன்னால் அவரை அவமானப்படுத்துவது என்பது என்னை அவமானப்படுத்துவது போலத்தான். எனக்கு ஆண்டவன் அருள் இருந்ததால் சந்தர்ப்பம் கிடைத்து நான் திரைக்கதாசிரியனாகவும், தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டேன். அவருக்கு இன்னும் அந்த சந்தர்ப்பம் வரவில்லை என்பதுதான் எனக்கும் அவருக்குள்ள வித்தியாசம். ஆனால், திறமையில் அவர் எந்த வகையிலும் என்னைவிடக் குறைந்தவர் அல்ல.
ஆகவே அவரை அவமானப்படுத்தியவர் உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த கம்பெனியில் இருக்க நான் தயாராக இல்லை…” என்று பொரிந்து தள்ளினார் ஸ்ரீதர்.
சிறிது நேரம் யாரும் பேசவில்லை. அந்த இடம் புயலடித்து ஓய்ந்த பூமி போல இருந்தது. ஸ்ரீதரின் கொந்தளிப்பிற்குப் பிறகு கோபாலகிருஷ்ணனை அவமானப்படுத்திய நபர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அந்தச் சம்பவம் பற்றி குறிப்பிடும்போது, “என்னால் கதாசிரியர் ஸ்ரீதரை அந்த இடத்தில் அப்போது பார்க்க முடியவில்லை. எழுத்தாளனின் உரிமையைக் காக்கும் போர் வீரனையே அங்கு கண்டேன். தன் சகாவை விட்டுக் கொடுக்காத ஒரு கடமை தவறாத அதிகாரியாக அவரைப் பார்த்தேன்.
ஸ்ரீதர் என்னும் அந்த அற்புதமான மனிதாபிமானிக்கு அன்று என் மனதிற்குள் லட்சார்ச்சனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ள கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதருடன் பணி புரிந்த நாட்களில் இம்மாதிரியான இன்ப அதிர்ச்சிகள் பலவற்றுக்கு என் பலவீனமான இதயம் உள்ளாகியிருக்கிறது…” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உதவியாளருக்காக அப்படிப் பொங்கி எழுகின்ற போர் குணத்தை, இன்று எத்தனை பேரிடம் பார்க்க முடியும்…?
நன்றி: டூரிங் டாக்கீஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,