தமிழுக்கு முதலிடம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம் என அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission- TNPSC) மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம், 1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments