பட்டுக்கோட்டை பிரபாகர்

 பட்டுக்கோட்டை பிரபாகர் பிறந்த நாள் இன்று ஜூலை, 30

`வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்!
``ஆன்மிகத்துல எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. அதுக்காக நான் நாத்திகவாதியும் கிடையாது. கேள்விகளுடன் இருக்கும் ஒரு மனிதன்... அவ்வளவுதான். என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு. ஆன்மிகத்துல நிறைய கலப்படம் வந்துடுச்சுங்கிறது உண்மை. பியூரான ஆன்மிகங்கிறது இப்போ இல்ல. பார்வை இல்லாதவன் யானையைப் பார்த்த மாதிரி, ஆன்மிகத்துல ஆள் ஆளுக்குக் கருத்துகளை அள்ளிப்போட்டு அதை வேறுமாதிரியான புரிதலுக்குக் கொண்டு போய்விட்டுட்டாங்க. இன்றைய ஆன்மிகங்கிறது அவரவர் புரிதல்ங்கிற மாதிரிதான் இருக்கு. பொதுவான புரிதலுக்கு வந்த மாதிரி எந்த ஆன்மிகமும் இல்ல.
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எல்லா மகான்களும் அன்பைத்தான் போதிக்கிறாங்க. அன்பு மட்டுமே அல்டிமேட்டா இருக்கிறபட்சத்துல, `என் ஆன்மிகம் சிறந்தது, உன் ஆன்மிகம்தான் சிறந்தது'ன்னு சண்டை போட்டுக்கிறதுல எந்தவித அர்த்தமும் இல்ல. போக வேண்டிய இடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஒருத்தன், பஸ்சுல போறான். ஒருத்தன் நடந்து போறான். ஒருத்தன் ஃப்ளைட்ல போறான். ஒருத்தன் உருண்டு புரண்டு போறான். அவ்வளவுதானேயொழிய, வேற எதுவும் இல்ல. ஆனா, இந்த ஆன்மிகத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஒவ்வொரு மதமும் சொல்ற சடங்குகள் சம்பிரதாயங்கள்ல எனக்குக் கேள்விகள் இருக்கு.
அதனால, ஆன்மிகத்துல கேள்விகளுடன் நிற்கிற மனுஷனாத்தான் நான் இருக்கேன். ஆனா, அதுக்காக, அதன் மேல எந்தவித விமர்சனங்களையும் நான் வைக்கமாட்டேன். ஆன்மிகத்துல இருக்கறவங்களை முட்டாள்னு நான் சொல்லமாட்டேன்.திருமண பந்தத்தைப் பொறுத்தவரை, சீர்த்திருத்த திருமணத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனா, என் குடும்பத்தினருக்கோ சடங்கு சம்பிரதாயத்துடன் நடக்கும் திருமணத்தில்தான் நம்பிக்கை.
என்னுடைய ரெண்டு மகள்களுக்கும் வைதீக முறையிலதான் திருமணம் நடந்துச்சு. அது, காம்ப்ரமைஸ். அவங்களோட எண்ணங்களையும் உணர்வுகளையும் மதிக்கணுமில்லையா, அதுக்காக. அதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். ஆனா, என் விருப்பத்துக்காக, தலைவர்கள், பிரபலங்களையெல்லாம் அழைச்சு அவங்க வாழ்த்துரைகளையும் சேர்த்துவச்சு, திருமணத்தை நடத்துனேன். என்னுடைய திருமணமும் அப்படித்தான் நடந்துச்சு.
கோயிலுக்கு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் கூப்பிட்டாங்கன்னா கண்டிப்பாப் போவேன். அங்கே போயிட்டு, `நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க'னு சொல்லிட்டு வெளியில இருக்க மாட்டேன். அவங்ககூடவே போய் சாமி கும்பிடுவேன். ஆனா, நானாக தனியா ஒருமுறைகூட கோயிலுக்குப் போனதில்ல.
இந்த மாதிரி, `டிட்டாச்சுடு வித் அட்டாச்மென்ட்டா'தான் நான் இருக்க விரும்புறேன். இதை, `வானப்பிரஸ்த நிலை'னு சொல்வாங்க. எப்பேர்பட்ட மனுஷனும் ஒண்ணு பணத்துல விழுந்துடுவான். இல்ல பாசத்துல விழுந்துடுவான். அந்த இடத்துக்கு நான் இன்னும் வரலை. அதை நோக்கித்தான் நான் பயணம் பண்ணுறேன். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அது பலவிதத்துல வெற்றி தோல்விகளைச் சமமா எடுத்துக்கிறதுக்கு உதவியா இருக்கு. ஆனா, அந்த இடத்துக்கு அவ்வளவு ஈஸியா நம்மால போயிட முடியாது. கடவுள், ஆன்மிகம் குறித்த தேடல் எல்லா மனிதர்களிடமும் நிச்சயம் இருக்கும். நானும் 1996-ல ஈஷா யோக மையத்துல தியானம், யோகா பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். அது என்னை நான் உணர்றதுக்குப் பெரிய அளவுல உதவியா இருந்துச்சு.
சென்னை அடையாறுல இருக்கிற அனந்த பத்மநாபன் கோயிலுக்கு நானும் மனைவியும் வாரா வாரம் போவோம். அப்புறம் சீரடி சாய்பாபா மேல ஈடுபாடு வந்துச்சு. ரொம்ப எளிமையா வாழ்ந்துகாட்டி நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்கிட்டு இருக்கார். உண்மையா ஒரு ஞானி எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு சீரடி சாய்பாபாவோட வாழ்க்கை உதாரணமா இருக்கு. சீரடிக்கு நானும் ஒருமுறை போயிட்டு வந்திருக்கேன்''
இணையத்தில் இருந்து எடுத்தது

வெகுஜன எழுத்திலும் தரமான படைப்புகளைத் தர முடியும் என்று நிரூபித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர். தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் ராதாகிருஷ்ணன், சந்திரா தம்பதியினருக்கு ஜூலை 30, 1958 அன்று மகனாகப் பிறந்தார். அங்கே பள்ளிப்படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். தாயார் இலக்கிய ஆர்வலர். அதனால் பள்ளியில் நாட்களிலேயே கல்கி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சாண்டில்யன் நூல்கள் அறிமுகமாயிருந்தன. கல்லூரி எழுத்தார்வத்தை வளர்த்தது. நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழு அமைத்து கல்லூரி நாடக விழா, ஆண்டுவிழா, விடுதி தினம் போன்றவற்றிற்கு நாடகங்களை நடத்தினார். மாணவர்களது ஆதரவும், பேராசிரியர்களது ஊக்கமும் எழுத்தார்வத்தைத் தூண்டின. நிறைய வாசித்தார். நகைச்சுவை நாடகங்களை கதை, வசனம் எழுதி அரங்கேற்றியதுடன் நடிக்கவும் செய்தார். படிப்பை முடித்தபின் குடும்பத் தொழிலை மேற்கொண்டார். அஞ்சல்வழியில் எம்.ஏ. பொருளாதாரப் படித்துக்கொண்டே, சிறுகதைகள் எழுதினார்.

முதல் சிறுகதை 'அந்த மூன்று நாட்கள்' ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில் வெளியானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது போல, தந்தையின் ஆலோசனைக்கிணங்க 'பட்டுக்கோட்டை பிரபாகர்' ஆனார். எஸ்.ஏ.பி., சாவி எனப் பலரும் ஊக்குவிக்கவே சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இதழின் துணையாசிரியராகச் சாவி இவரை நியமித்தார். அதில் இவர் எழுதிய 'ஒரு வானம்: பல பறவைகள்' என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாவல் 'அங்கே இங்கே எங்கே?' சாவி நடத்திய மோனாவில் வெளியானது. அப்போது துப்பறியும் நாவல்களுக்கு வரவேற்பு இருந்ததால் அவற்றில் கவனம் செலுத்தினார். சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் பாணியில் பரத்-சுசீலா கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி உலவ விட்டார். பரத்தின் துப்பறியும் திறனும், சுசீலாவின் இளமைக் குறும்புகளும் (பனியன் வாசகங்களும்) வாசகர்களைக் கவர்ந்தன. நல்ல வரவேற்பைப் பெற்றன.
பிரபாகர் நாவல்களின் தலைப்பிலும் கவனம் செலுத்துவார். 'அவன் தப்பக்கூடாது', 'ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரி', 'மே, ஜூன், ஜூலி', 'ஆரம்பத்தில் அப்படித்தான்', 'டிசம்பர் பூ டீச்சர்', 'என்னைக் காணவில்லை', 'கனவுகள் இலவசம்' போன்றவை வித்தியாசமான தலைப்புகளாக வெளிவந்தன. கிரைம் கதைகளோடு குடும்பக் கதை, காதல் கதை என நிறைய எழுதியிருக்கிறார். காதலை மையமாக வைத்து அவர் எழுதிய 'தொட்டால் தொடரும்' விகடனில் வெளியான முதல் தொடராகும். கதாநாயகன் ஸ்ரீராம் பாத்திரம் அக்கால வாசகர்களால் மறக்க முடியாதது. 'ஒரு நிஜமான பொய்', 'பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்' போன்றவை நல்ல நகைச்சுவை நாவல்களாகும். வரலாற்று நாவல், சிறுகதை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். சக எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா)வுடன் இணைந்து 'உங்கள் ஜூனியர்', 'உல்லாச ஊஞ்சல்' இதழ்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.
இவரது எழுத்துக்கு இருக்கும் வரவேற்பைக் கண்டு இவருக்காகவே பாக்கெட் நாவல் ஜி. அசோகன் 'எ நாவல் டைம்' என்ற இதழை ஆரம்பித்தார். மணியன் செல்வனின் முகப்பு ஓவியங்களோடு பல நாவல்கள் அதில் வெளியாகின. பரத்-சுசீலாவை மையமாக வைத்தே ஏராளமான நாவல்களைப் பிரபாகர் எழுதியிருக்கிறார். வெறும் வர்ணனைகளைக் கொண்டே சிறுகதை எழுதியிருக்கிறார். வர்ணனைகளே இல்லாது வசனங்களை மட்டும் வைத்தே நாவல்கள் எழுதியிருக்கிறார். (தா, மறுபடி தா) ஒரு நாவலுக்கு மூன்று கிளைமாக்ஸ், பாதி அத்தியாயத்தில் இருந்து நாவலை ஆரம்பிப்பது, ஒரே கதையில் இரண்டு கதைகள் (டபுள் ட்ராக்), ஒரே கதையை வேறு வேறு பார்வையில் சொல்வது (நெருங்கி... விலகி... நெருங்கி) எனத் தனது படைப்புகளில் பல புதுமைகளைப் பட்டுக்கோட்டை பிரபாகர் செய்திருக்கிறார்
நன்றி: தென்றல்.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,