பெண்களுக்கு பிட்னெஸ்

 பெண்களுக்கு 10 பிட்னெஸ் ரகசியங்கள்💚❤️



`பிட்னெஸ்' எனப்படும் உடல்கட்டுக்கோப்பு, உடற்பயிற்சியால் கிடைக்கும் என்பது பெண்கள் அனைவருக்குமே தெரியும். அழகையும், ஆரோக்கியத்தையும் பிட்னெஸ் தரும் என்பது தெரிந்தபோதிலும் பெரும்பாலான பெண்கள் திடீரென்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டால் `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை' என்பார்கள் அல்லது `உடற்பயிற்சி செய்தும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை' என்பார்கள். தங்குதடையின்றி பிட்னெஸ், டயட் போன்றவைகளை தொடர பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து விஷயங்கள்:


1. இன்றே தொடங்குங்கள்


உடற்பயிற்சியை `நாளை தொடங்கலாம்' என்று நீங்கள் நினைத்தால், தோல்வியின் முதல் படியை மிதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நாளை என்பது தள்ளிப்போட கையாளக்கூடிய வழிமுறை. பிட்னெஸ் தேவை என்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால் இன்றே அதற்கான அடிப்படை வேலைகளை தொடங்கிவிடவேண்டும். உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் இருந்துகொண்டிருக்கும் சோம்பேறித்தனம்தான் நாளை என்று தள்ளிவைக்கும் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்கும். அதனால் தள்ளிவைக்காமல் இன்றே தொடங்கிவிடுங்கள்.


2. பிடித்தமான பிட்னெஸ் கார்னர்


வீட்டில் உங்களுக்கு பிடித்தமான இடம் ஒன்றை பிட்னெஸ் கார்னர் ஆக்கவேண்டும். அங்கு உங்களை உடற்பயிற்சிக்கு தூண்டும் படங்கள் இடம்பெறவேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை தந்து உற்சாகப்படுத்தும் வாசகங்களை அங்கு எழுதிவைக்கவேண்டும். உள்ளறை அலங்கார செடிகளை வைத்தும் அலங்காரப்படுத்தலாம்.


டம்பல்ஸ் போன்ற எளிய உடற்பயிற்சி கருவிகளை உங்களது கைக்கு எட்டும்தூரத்தில் வைத்திருங்கள். இதர உபகரணங்களையும் கவரும் விதத்தில் அடுக்கிவைத்தால், அவைகளை பார்க்கும்போதெல்லாம் உடற் பயிற்சி செய்யும் உற்சாக மனநிலை வந்துவிடும். அந்த அறையில் போதுமான அளவு காற்றும் வெளிச்சமும் இருக்கவேண்டும். பால்கனி, வராந்தா வில்கூட பிட்னெஸ் கார்னர் அமைத்துக்கொள்ளலாம்.


3. கண்ணாடியில் பாருங்கள்


உடை அலங்காரத்தோடு பலமுறை உங்களை கண்ணாடியில் பார்த் திருப்பீர்கள். அப்படி எதுவும் இல்லாமல் ஒருமுறை உங்கள் உடலை கண்ணாடியில் பாருங்கள். அப்போதுதான் அதிக உடல் எடை, சில இடங்களில் தொளதொளவென்று இருத்தல் போன்ற குறைபாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும். கண்ணாடியில் பார்க்கும் அந்த தருணத்தில்தான் பிட்னெஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணருவீர்கள். உடல் கட்டுக்கோப்பாக இருப்பது வாழ்க்கையின் பரிசாக அமையும். கட்டுக் கோப்பான உடல் உருவானால் ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்கும்.


4. ரிசல்ட்டுக்கு முக்கியத்துவம் வேண்டாம்


ரிசல்ட் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக காட்டும் ஆர்வத்தைவிட, தொடங்கிய செயலை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதே சிறந்தது. உடல் எடையை குறைப்பது போன்ற செயல்களுக்கு உடனடி பலன் கிடைக்காது. அதே நேரத்தில், `பலன் தாமதமாகத்தான் கிடைக்கும்' என்ற எண்ணம், உடற்பயிற்சி மீது இருக்கும் ஆர்வத்தை குறைக்கவும் அனுமதித்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதைவிட, ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து தொடர்ந்து பிட்னெஸ் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும்.


5. சரியானதை மட்டும் செய்யுங்கள்


சில வகை உடற்பயிற்சிகள் செய்வதற்கு கடினமானதாக இருக்கும். ஆனால் அதனால் கிடைக்கும் பலன்கள் மிக குறைவாகவே இருக்கும். எல்லோருக்கும் எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் முழுபலனை தந்துவிடாது. அதனால் உங்கள் வயது, ஆரோக்கிய நிலை, உடல் அமைப்புக்கு பொருத்தமான பயிற்சிகளையே மேற்கொள்ளவேண்டும். அதற்கு ஜிம் பயிற்சியாளர் ஒருவரது ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும்.


6. கலோரி கணக்கும் தேவை


உடல் பருமன் கொண்டவர்கள் உடற்பயிற்சியால் மட்டும் அதை சாதித்துவிட முடியாது. உடல் இயக்கத்திற்கு தேவையான அளவு உட்கொள்ளும் உணவையும் குறைக்கவேண்டும். அதனால் அவர்கள் அன்றாட உணவில் விழிப்பாக இருக்கவேண்டும். அதோடு எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு உண்பது அவசியம். இதை கணக்கிடுவதற்காகவே சில ஆப்கள் இருக்கின்றன. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம்.


7. ருசியாகும் உணவு


நன்றாக உடற்பயிற்சி செய்த பின்பு உணவு சாப்பிட்டால் அது ருசி நிறைந்ததாக இருக்கும். ஏன்என்றால் அப்போது உடலுக்கு உணவின் தேவை அதிகமாக இருக்கும். ஜீரணமும் வேகமாக நடக்கும். அப்போது கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு உடலுக்கு தேவைப்படும். அளவுக்கு மிகாமல் சாப்பிடவேண்டும்.


8. உங்களுக்கான நேரம்


வாழ்க்கையில் நாம் பொன், பொருள், பணம், பதவி போன்று பலவற்றையும் பெறுகிறோம். ஆனால் அவை அனைத்தையும் அனுபவிக்க ஆரோக்கியமான உடல் அவசியம். அதனை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம்தான் பெற முடியும் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அதனை தினமும் உங்களுக்கான நேரமாக கருதுங்கள்.


9. விமர்சனத்தை ஒதுக்குங்கள்


நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதை பார்த்துவிட்டு நண்பர்களில் யாராவது, `எந்த பயிற்சி செய்தும் உன் உடல் தோற்றத்தில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லையே' என்று சொல்லலாம். அது போன்ற கமெண்டுகளில் கவனத்தை செலுத்தாதீர்கள். உடற்பயிற்சியை தொடங்கும் நாளிலே `அதுபோன்ற எதிர்மறையான விமர்சனங்களுக்கு செவிசாய்க்கமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர், உடற்பயிற்சி செய்யும் குண்டானவர்களை பார்த்து `உடற்பயிற்சி செய்ததும் உங்கள் உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது' என்று வேண்டும் என்றே சொல்வார்கள். அதையும் நம்பிவிடக்கூடாது.


10. அதிகம் வேண்டாம்


விரைவாக பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வேகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். அதுபோல் அதிக நேரமும் உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம். அதிக நேர பயிற்சி உடலுக்கு சோர்வைத்தந்து, ஆர்வத்தை குறைத்துவிடும். அதோடு சிலருக்கு உடலில் எதிர் மறையான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,