உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, நம் காலத்தில், நம்மோடு வாழ்ந்த, ஒப்பற்ற கலைஞன் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினம் இன்று.
உலகறிந்த அவரின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் சொல்ல முனைவது முழுநிலவை வர்ணிக்க முனைவதற்கு ஒப்பானது. அவர் குடத்திலிட்ட விளக்காக அல்ல, குன்றிலிட்ட தீபமாகத் திகழ்ந்தார் என்றால், அது அவரின் ஒப்புவமையற்ற நடிப்புத் திறமையால் மட்டுமே.
ஆரம்ப காலத்தில் அவருடைய நடிப்பு ஓரளவு மிகையாக இருந்ததை, 'மேடை நாடக அடிப்படையின் விளைவு' என அவரே சொல்லியிருக்கின்றார். ஆனால் காலத்துக்கு ஏற்றவாறு தனது நடிப்பை மிக,மிக இயற்கையாக மாற்றி, அனைவரையும் தனது நடிப்பால் அடிமைப்படுத்திய அவரது மாபெரும் திறமை விண்ணுயர்ந்தது.
அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக, அதிகாரியாக, சேவகனாக - இப்படி அவர் தோன்றி அந்தந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டிய போதெல்லாம்..........,
சிரிக்கவும், சிந்திக்கவும், அறியவும், ரசிக்கவும், ஏன் பல நேரங்களில் தேம்பித் தேம்பி அழவும் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல, அவருக்குப் பெருமை.
(2000ம் ஆண்டு என நினைவு) சென்னை விமான நிலையத்தில், கொழும்பு வருவதற்காகக் காத்திருக்கிறேன். சற்று சமீபமாக சிறிய சலசலப்பு. திரும்பிப் பார்த்தால்...,
அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடத் தோன்றாமல் ஆச்சரியத்தால் விழிகள் விரிய ஸ்தம்பித்து நிற்கிறேன். சிறிய வயதிலிருந்தே காட்சிக்குக் காட்சி பார்த்து, மலைத்து ரசித்த நடிகர் திலகம் எனக்குப் பக்கத்திலா? இறைவா!!!!!!
என்னைப் பார்த்து, தலை சாய்த்து, புன்முறுவலோடு கைகுவித்து வணக்கம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். போய் மறையும் வரை அவரைப் பார்த்துக் கொண்டே அசந்து போய் நின்றதை என்றும் மறக்கவே முடியாது.
தனிப்பட்ட முறையில், எனது பதினாறுகளிலேயே எனக்கு அவர் கற்றுத் தந்தது கம்பீரம் மிக்க நடை. அதில் நான் வெற்றி பெற்றி்ருக்கிறேன் என்பது அவருக்கு நான் தரும் ஆத்மார்த்தமான காணிக்கை.
அதைவிடவும் அவரின் பலவிதமான (ஸ்டைல்) முத்திரைகள் என்னைப் பாதித்தும், என்னோடு ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன. இவை அவரின் நடிப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியான பாதிப்புக்கள்.
இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை, நடிப்புக் கலை என்றால் அவரது பெயரே முதலில் நினைவுக்கு வரும் என்பதில் எள்ளளவேனும் ஐயமுமில்லை.
நடிகர் திலகமெனும் வரலாற்று நாயகனுக்கு ஆத்மார்த்த அஞ்சலியும், கோடி வணக்கமும்.
Comments
He is a self made man, we cannot see shade of any other actor. All his mannerisms are his own creations.excellent body language.above all he was among very few who sticked to kamaraj when most of the congressman deserted kamaraj. Sivaji donated so much but never publicised it.you read his biography to know the details
Very nice tribute