#பழங்கதை_பேசுவோம்_ தொடர் /ஜவ்வுமிட்டாய்

 #பழங்கதை_பேசுவோம்_ தொடர் 

இதை வழங்குபவர்

--சங்கீதா ராமசாமி
















குதித்து ஆடும் பொம்மை ஒன்றே போதும் முன்செல்லுபவரை பின்தொடர ஜரிகை போட்ட பாவாடை சட்டையோ, லேஸ் வைத்த கவுனோ நம்மை வாவென அழைத்துபடியே செல்லும்.

ஜவ்வுமிட்டாய் என்பது உங்களைப் பொறுத்தவரையில் எதுவென தெரியாது ஆனால் மேற்சொன்ன அடையாளம் ஒன்றே ஜவ்வுமிட்டாய்க்காரரை அடையாளப்படுத்தும் புன்னகை மாறாமல் நீண்ட கழியின் உச்சியில் ஆடும் பொம்மை இருக்க டிகுடா டிகுடா சத்தமோ, அவரது பீப்பீயோ ஒலியோ போதும் அவரை என் பள்ளியின் தலைமுறையே அறியும். மாணவர்கள் கொடுக்கும் அஞ்சு காசையோ பத்து காசையோ நிமிடங்களில் கை மணிக்கட்டில் உருவங்களாக சுத்தி விட்டு உயிர் கொடுக்கும் அவரே அப்போதைய அனிமேட்டர் எங்களுக்கு அவர்தான் மிகப்பெரிய கிரியேட்டர்.
கைகளில் வாத்து யானை மயில் மானென வந்தது போக மிச்சத்தில் கன்னத்தில் ஒரு பொட்டோ விரலுக்கேத்த மோதிரமோ அணிவித்து மகிழ்வார்.
வெயில்பட்டு பாகு கரையும் போது கூட உருவத்தை கொஞ்சங்கொஞ்சமாக இழப்பது வருத்தத்தை தரும் நானெல்லாம் 'போச்சே போச்சே என் வாத்து போச்சே'னு நடுவீதியில் உருண்டு பொரண்டு அழுதிருக்கேன்.
வெளிர் ரோஜா நிறமும் வெள்ளையும் கலந்த அந்த நிறம் வெகுநாட்கள் மறக்க முடியாமல் இருந்தது பெண்களுக்கு அது பிடித்த நிறமாக இருப்பதின் பின்னணியில் இந்த உளவியல் இருக்கலாமோ என்னமோ.
கடந்த ஆண்டில் ஊர் சென்று திரும்புகையில் லேஸ் வைத்த சராரா உடை அணிவித்த பொம்மையை வலது தோளில் சாய்த்து நடந்து சென்றவரை பார்த்தே ஆக வேண்டி பஸ்ஸை விட்டு இறங்கி விட்டேன். அவர் ஊர் பெயர் அனைத்தும் கேட்டு 40 ரூபாய்க்கு ஜவ்வுமிட்டாய் வாட்ச் அணிந்த கணத்தில் என் கால் தரையில் படாது பள்ளியுடையுடன் வாயெல்லாம் எச்சில் ஒழுக புறங்கை வரை நக்கி ருசி பார்க்கும் ஒரு மாணவி வந்து போனாள்.
பாக்கெட்டில் அடைத்து வரும் பொட்டலங்களில் வெறும் காற்று தான் இருக்கிறதென அங்கலாய்ப்போம் ஆனால் உருவம் இழைத்து உயிர் கொடுத்து இன்றளவும் வாங்க ஆளில்லா விட்டாலும் எதேனும் ஒரு குழந்தையின் கண்ணிலாவது பட்டுவிடவும் அவர்களை சந்தோசப்படுத்திவிடவும் இழந்த காலத்தை திரும்ப பிடிக்கலாமென்று தெருத்தெருவாக நம்பிக்கையோடு திரியும் அவர்களை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. வயிறெனும் பொருளாதாரம் அவர்களை திருமண மண்டப வாசலில் நிறுத்தியிருக்கிறது குழந்தைகளின் பார்வைபட்டு இன்னும் இருக்கும் காலத்தையாவது அதே மகிழ்விப்பராக ஓட்டிவிட துடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த பொம்மையையும் ஆட்டுவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
காலத்தின் துளியை நம் கன்னத்தில் ஒட்டிவிட்டு இன்னும் கரையாத பாகுக்கான சேர்மானங்களை தேடி அலையும் அவர்களைப் போன்றவர்கள் இன்னும் எங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ருசிகண்ட தலைமுறைக்கு மட்டுமே தெரியும் ஜவ்வுமிட்டாய் என்பது வெறும் இனிப்பல்ல அதுவொரு வாழ்வியல்...
--சங்கீதா ராமசாமி

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி