பலாப்பழத்துடனான வாழ்வு


பலாப்பழத்துடனான வாழ்வு
 எனக்கெல்லாம் பலாப்பழம் உரிப்பதென்பது ஒரு உற்சவம் வாங்கி வைத்த பலாப்பழத்தின் மேலே சின்ன சதுர துண்டாக்கி பிய்த்தெடுத்து அதை ஒவ்வொரு முறையும் பழத்திலிருந்து எடுத்து பழுத்திருச்சா என முகர்ந்து பார்த்து திரும்ப சரியாக அந்த சதுரத்தில் பொறுத்தி துண்டால் மூடிவிடும் வேலையே எமக்கிடப்பட்டிருந்தது. சீக்கிரம் பழுக்க காம்பை சுற்றிலும் சுண்ணாம்பு தடவி விட்டிருப்பாங்க. 


பழமோ காயோ 

பழம் பழுத்தாலும் பழுக்கலைன்னாலும் அப்பா வீட்டுக்கு வர்ற அன்னைக்கு தான் வெட்டணுங்கறது அம்மா கணக்கு. மதிய உணவுக்கு பின் வரும் மசமச நாலு மணி வாக்கிலான நேரமே  தோதானது காரணம் பங்குபிரிக்கவும் அக்கம் பக்கம் பகிரவும் ஏதுவானது.


அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் பிரிஞ்சி இருக்கும் கோணிப்பை மேல் விரிப்பாக பேப்பர் போட்டு கையில் தடவிக்க எண்ணெய், உரிச்சி போட சம்புடம், மூடி போட்ட சின்ன தேக்சா வந்திரும். கூடவே அப்பதான் சாண புடிச்ச கத்தியும் வந்து சேரும். பின்னாலேயே பிசின் துடைக்க கையில் சுருட்டி பிடிச்ச  துணியோட அப்பா கைலியோடு வந்து உட்கார்ந்தார்னா உற்சவம் ஆரம்பம்னு அர்த்தம்.


பகுபானமா நிமித்தி வெச்சி அளவு பார்த்து சுத்திலும் பழுத்த தடங்களையும் பார்த்து என்னையோ அண்ணனையோ கூப்பிட்டு மேலே காம்புல இருந்து கொடுவாள்ல வெட்டும் போது நாங்க ரெண்டு பேரும் அதை தம் கட்டி இழுத்து சரிபாதியாக பிளக்க வைக்கணும். சிலசமயம் இலகுவாக பிளந்து பின்னாடியே உருண்டு தரையில் விழுவோம்.

பிறகு ஒரு பாதியை துணியால் மூடிட்டு மறுபாதியை அப்பா காலுகிட்ட  கிடத்தி ஒவ்வொரு பழமாக எண்ணெய் தடவி வகுந்தெடுத்து அந்த சம்புடத்திலோ தேக்சாவிலோ போடுவாரு.


பாதியாக கீறி வரும் பழங்கள் சம்புடத்தின் பாதியை நிறைக்கும் போது காலி ஆகிட்டே இருக்கும். ணங்...ணங்..கென வந்து விழும் கொட்டைகளும் இசைக்குமொரு ராகம்.


முதல்ல நாங்க வயிறாற தின்னது போகத்தான் தானமும் தர்மமும். நாலுபழத்துக்கே வயிறு நிரம்பும்னு சொல்றது பொதுவான விதி ஆனா தேன் பாகென பரவும் அந்த வாசனை அதுக்கு மேல சாப்பிட விடாது திகட்டிடும்ங்கறதான் சதி.


ஒருபாதி வீட்டுக்கு போக மறுபாதி தெருவில் இருக்கும் தெரிந்தவர்களுக்கு போய் சேரும். வெட்டி முடிச்ச பிறகு குடல் சரிந்து வெளிவந்தது போல் கிடக்கும் மீந்திருக்கும் பலாசக்கையுடன்  அப்பா முளைக்கட்டும் என நாலு கொட்டைகளையும் சேர்த்து சாக்கோடு சுருட்டி குப்பை மேட்டுல எறிஞ்சிட்டு வருவார்.

சரியாக 15 நாள்ல முளைவிடும் பலாக்கன்னை அம்மா தோண்டி எடுத்து வருவார். 


அம்மா இந்த சக்கைகளை கொஞ்சம்  சேர்ந்து வைத்திருந்து வத்தலாக்குவார். கொட்டைகளை மண் உருண்டைக்குள் வைத்து சுடுவார்,  உடனே வேணும்னா நேரடியாக அடுப்பு நெருப்புல போட்டு பதமாக சுட்டும் தருவார். வேக வைப்பார் குழம்புல போடுவார் உசிலி பண்ணி தருவார் பாயாசம், கொழுக்கட்டை கறி கருவாட்டு குழம்பு என வேக வைத்து காய வைத்து பதப்படுத்தி பயன்படுத்துவார். பலாப்பழம் தின்ன மாந்தத்துக்கு சுட்ட கொட்டைதான் வைத்தியம் என இரவு அதையும் செய்து தருவார். 


ஒரு பலாப்பழம் உரிக்கறதுல இவ்வளவு 

இருந்திருக்கு இன்னைக்கு நானோ மோர் தாளிக்கிற இடைவெளியில் சமையல் மேடை மேலேயே வெச்சி அறுத்து உரிச்சி எல்லாருக்கும் கொடுக்கும் போது நான் என் சுயம் இழந்தது போலவும், அப்பாவுக்கு காலத்தை இழந்தது போலவும், பழம் அதன் சுவையை இழந்தது போலவும் இருந்தது. 


பகிரப்பட்ட வாழ்வு ஒன்றே பூர்ணமானது தனித்துவமானது அதனுடன் எதையும் பங்கிட முடியாது.

நாம எல்லாமே நம் நிறம் சுவை இழந்தவர்களாக சுயம் தொலைத்தவர்களாக மாறிட்டே இருக்கிறோம் காரணம் சலிப்பான வாழ்க்கை முறையில் கேட்டது அனைத்தும் வீடு தேடி வரும் போது நாம தேடி தேடி கொண்டாடிய வாழ்வு அந்நியமாகித்தானே இருக்கும்.


சக்கையாக பிழிந்தெடுக்கப்பட்டது பலாப்பழத்துடனான வாழ்வு மட்டுமல்ல இவ்வாழ்வும்தான்.


--சங்கீதா ராமசாமி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,