அமீர் ஹம்ஸா. ஒரு தியாக தீபம்
தியாகத் திருநாளை கொண்டாடும் இந்த நேரத்தில்,
இப்படியும் ஒரு தியாகி,
இங்கே இருந்திருக்கிறார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
சோ சொல்லித்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும்.
“யாரைப் பற்றியும் கொஞ்சம் கூட குறை சொல்லிப் பேச மாட்டார். நிறைகளை மட்டுமே பேசுவார்.”
- ஏதோ ஒரு வீடியோ பேட்டியில் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார் சோ.
ஆச்சரியமாக இருந்தது எனக்கு !
ஏனென்றால்
எளிதில் யாரையும் பாராட்டி விட மாட்டார் சோ.
ஆனால் அப்படிப்பட்ட சோ, உணர்ச்சிவசப்பட்டு ஒருவரைப் பாராட்டிக் கொண்டிருந்த, கொஞ்சம் பழைய வீடியோ ஒன்றை, சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது.
“நான் சந்தித்த மிகப் பெரிய மனிதர்களில் அவர் ஒருவர்...”என்று ஆரம்பித்து ,
சோ சொன்ன சில விஷயங்கள்
நெஞ்சை கொஞ்சம்
நெகிழச் செய்யும் விஷயங்கள்தான் !
ஆம். மிகப் பெரும் செல்வந்தர் அந்த மனிதர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்திலிருந்து பர்மாவுக்குச் சென்று வணிகம் செய்த குடும்பத்தில் பிறந்தவர்.
தற்செயலாக நேதாஜி எழுதிய புத்தகங்களைப் படித்த அவர், நேதாஜியால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்ட வீரராக மாறி விட்டார்.
நேதாஜியோடு நெருங்கிய நட்பு கொண்டார். ஒரு நாள் கூட இவர் நேதாஜியை சந்திக்காமல் இருந்தது இல்லையாம் .
அப்படி ஒரு ஈர்ப்பு ;
உண்மை விசுவாசம்.
ஒருமுறை ரங்கூனில் நடந்த ஒரு கூட்டத்தில், நேதாஜி அணிந்த பூமாலையை ஏலம் விட்டார்களாம்.
எதற்காக ?
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிதி திரட்டத்தான் இந்த ஏற்பாடு .
அந்தக் கூட்டத்தில் நேதாஜி கழுத்தில் போட்ட ஒரு மாலையை இந்த அமீர் ஹம்ஸா ஏலத்தில் எடுத்த தொகை எவ்வளவு தெரியுமா ?
மூன்று லட்சம் ரூபாய்.
அவ்வளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்த அந்த அமீர் ஹம்சாவை பற்றி,
சோ தொடர்ந்து சொன்ன சில விஷயங்கள் :
“தன் சொத்து முழுவதையும் இந்திய தேசிய ராணுவத்துக்காக தியாகம் செய்த இவர், இன்று வறுமையில் இருக்கிறார். ஆனால் அது பற்றி இவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
இந்த தேசத்தைப் பற்றியே சிந்தித்த ஒருவரை, இன்று மாநில மத்திய அரசுகள் கண்டு கொள்ளவில்லை.
நானும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பெரும் முயற்சி செய்து பார்த்தேன். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.
ரொம்ப நெகிழ்ந்த மனம் கொண்டவர். என் மீது மிகவும் நம்பிக்கை உடையவர். எப்போது சந்தித்தாலும் மனதார ஆசீர்வாதம் பண்ணுவார்.
ஒருமுறை துக்ளக் ஆண்டு விழாவில் அவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது,
கை தட்டல் நிற்க நீண்ட நேரம் ஆயிற்று.
ஒரு உண்மையான காந்தியவாதிக்கு உதாரணம் அவர்.
யாரைப் பற்றியும் கொஞ்சம் கூட குறை சொல்லிப் பேச மாட்டார். நிறைகளை மட்டுமே பேசுவார்.”
சோ நெகிழ்வோடு இப்படி சொல்லி முடித்தார்.
அமீர் ஹம்ஸா.
2016 ல் இந்த தியாக தீபம்
அணைந்து போனது.
நம்மில் பலரும் அறிந்திராத,
இப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைப் பற்றி எடுத்துச் சொன்ன சோ அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
தியாகத் திருநாள் வாழ்த்துகள்..!
John Durai Asir Chelliah
Comments