தெய்வம் கோவில்களில் மட்டுமே இருப்பதில்லை.

 தெய்வம் கோவில்களில் மட்டுமே இருப்பதில்லை.


சில நேரங்களில் நமது பக்கத்து தெருவில் ஏதோ ஒரு வீட்டில் கூட குடியிருக்கலாம்.
அப்படித்தான் மனோரமா வீட்டு அருகிலும், ஒரு தெய்வம் குடியிருந்தது.
பல வருடங்களுக்கு முன்...
விடிந்தும் விடியாத
ஒரு அதிகாலைப் பொழுது.
மனோரமாவுக்கு துணையாக, அவர் கூடவே வாழ்ந்து வந்த அவரது தாயார்
திடீரென இறந்து போனார்.
அன்புக்குரிய தன் அன்னையை பறிகொடுத்துவிட்டு, ஒரு அனாதையை போல பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் ஆச்சி மனோரமா.
கட்டிய கணவன் எப்போதோ கைவிட்டு விட்டுப் போய்விட்டார்.
மற்றபடி சோகத்தைப் பகிர்ந்து கொள்ள சொந்தம் என்று எதுவும் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என எடுத்துச் சொல்ல உற்றாரும் உடன் இல்லை. உறவினரும் எவரும் இல்லை.
அதன் பின்...
இதோ, ஆச்சியே சொல்கிறார்
அந்த அனுபவத்தை :
“என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
அவர் சிவாஜி அண்ணனின் குடும்ப டாக்டர்.
அம்மா இறந்த அன்று, அதை டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் வந்து பரிசோதித்து, அம்மாவின் மரணத்தை உறுதி செய்தார்.
பின் நேராக சிவாஜி வீட்டுக்கு சென்றவர், அங்கு விபரம் கூறியிருக்கிறார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் சிவாஜி, கமலாம்மாள், பிரபு மூவரும் வந்து விட்டனர்.
அழுது கொண்டிருந்த என்னை ஆறுதல்படுத்திய சிவாஜி, "அம்மாவ எப்ப அடக்கம் பண்றதா இருக்கே ? சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிட்டியா?” என்றெல்லாம் விபரம் கேட்டவர், “இங்க பாரும்மா,
நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்” னு சொல்லிட்டுப் போய்,
ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார்.
'அம்மாவுக்கு ஒரு மகனாக நான்தான் காரியம் எல்லாம் பண்ணப் போகிறேன்' என்று சொல்லி விட்டுப் போனார்.
மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டார் சிவாஜி.
தலைப்பாகை கட்டிக்கிட்டு,
என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞசார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.
இறுதி காரியங்கள் எல்லாம் முடிந்த பின், எங்கள் வீட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து அனுப்பி வைத்தார் அண்ணன் சிவாஜி.
என் உடன் பிறந்த சகோதரன் கூட இப்படி செய்திருக்க மாட்டாரோ என்று நினைத்தேன்.
ஒரு மாபெரும் நடிகர், மகத்தான மனிதர், கேட்காமலே ஓடிவந்து செய்த அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்."
இப்படிச் சொல்லியிருந்தார் மனோரமா.
நமது கஷ்டமான காலங்களில் நாம் அழைக்காமலே ஓடி வந்து,
அருகில் நின்று உதவிகள் செய்து, நம் கண்ணீர் துடைத்து விட்டு செல்லும் ஒவ்வொரு மனிதரும், தெய்வத்தின் மறு வடிவமே !
ஆம். ஆண்டவன் ஆலயங்களில் மட்டும் இருப்பதில்லை. சிலவேளைகளில் அருகினில் உள்ள தெருவினில் கூட இருக்கலாம்.
அது அன்னை இல்லமாக கூட இருக்கலாம்.
இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,