பிரிந்த நட்பு

 வெள்ளி விழா’ திரைப்படத்தில் கட்சி விட்டு கட்சி தாவும் ஒரு அரசியல்வாதியின் பாத்திரத்தை நாகேஷுக்கென்று அற்புதமாக உருவாக்கியிருந்தார் பாலச்சந்தர். தன்னுடைய நடிப்பாற்றலால் அந்தப் பாத்திரத்தை நாகேஷ் எங்கேயோ கொண்டு சென்று விடுவார் என்பது அவர் கணிப்பாக இருந்தது.
அப்போது நாகேஷ் மிகவும் பிசியான நடிகராக இருந்ததால் முன்னதாகவே அவரிடம் பேசி கால்ஷீட்டை மொத்தமாக வாங்கச் சொல்லியிருந்தார் பாலச்சந்தர். அதன்படி தயாரிப்பாளர்களும் நாகேஷிடம் பேசி தேதிகளை உறுதிப்படுத்தியிருந்தனர்.
வாகினி ஸ்டுடியோவில் அன்று நடைபெறவிருந்த ‘வெள்ளி விழா’ படத்தின் படப்பிடிப்பிற்கு கே.பாலச்சந்தர் வழக்கம் போல எட்டு மணிக்கே வந்து விட்டார். அவரைத் தொடர்ந்து மனோரமா வந்தார். அடுத்து படமாக்கப்பட வேண்டிய காட்சி பற்றி பாலச்சந்தர் ஒளிப்பதிவாளருக்கு சொல்ல அரங்கம் படப்பிடிப்பிற்கு தயாரானது.
ஆனால், மணி பதினொன்று ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்குக் காரணம் அன்றைய காட்சியின் பிரதான நடிகரான நாகேஷ் அதுவரை ஸ்டுடியோவிற்குள்ளே காலடி எடுத்து வைக்கவில்லை.
படத்தின் தயாரிப்பாளர்களைக் அழைத்த பாலச்சந்தர், “என்னாச்சி..? ஏன் அவன் வரலே. கூப்பிட்டுக் கொண்டு வர யார் போயிருக்காங்க..?” என்று கேட்டார்.
அடுத்து நடக்கவிருந்த விபரிதம் தெரியாமல் “புரொடக்ஷன் மேனேஜர் போயிருக்கார். இப்போது கூட்டிக் கொண்டு வந்து விடுவார்” என்று அப்பாவியாக பதிலளித்தார் அந்தத் தயாரிப்பாளர்.
அந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் புரொடக்ஷன் மேனேஜர் வியர்க்க விறுவிறுக்க அங்கே வந்தார். “எங்கேய்யா நாகேஷ்..?” என்ற பாலச்சந்தரின் குரலில் உஷ்ணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. “அவர் வர மாட்டார் சார். அவர் எம்.ஜி.ஆர் பட ஷுட்டிங்கிற்கு போய் விட்டார்” என்று அந்த மேனேஜர் சொன்னதும் பாலச்சந்தருக்கு கோபம் மண்டைக்கு ஏறியது.
காலை ஒன்பது மணி முதல் நாகேஷுக்காக காத்துக் கொண்டு இருந்ததால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பாலச்சந்தர் “என்னய்யா சொல்றே? நீங்க முன்னாலேயே டேட் வாங்கியிருந்தீங்க இல்லே. இன்னிக்கு நம்ம கால்ஷீட்தானே? அப்புறம் எப்படி அவன் எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கிற்கு போவான்…?” என்று பாலச்சந்தர் கேட்டபோது அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நிலைமையை சமாளிக்காமல் எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றினார் அந்தத் தயாரிப்பு நிர்வாகி.
“அந்த எம்.ஜி.ஆர் படத்தின் டைரக்டரே நாகேஷைப் பார்க்க வந்திருந்தார் சார். அவரை என்கிட்ட காட்டி ‘இவர் யார் தெரியுமாடா. எம்.ஜி.ஆர் படத்தோட டைரக்டர். இப்ப சொல்லு. நான் யார் ஷுட்டிங்குக்கு போவேன்?’ என்று சொல்லிவிட்டு அவர்கூட காரில் ஏறிப் போய்விட்டார் சார்…” என்றார் அந்தத் தயாரிப்பு நிர்வாகி.
பாலச்சந்தரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாகேஷா அப்படி சொன்னான் என்ற கேள்வி அவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டேயிருந்தது.
“எம்.ஜி.ஆர் படத்திற்கு கால்ஷீட் கேட்டால் மறுக்க முடியாது என்பது மொத்த சினிமா உலகத்திற்கும் தெரியும். அவருக்குத் தேதி கொடுத்து விட்டு, அந்தத் தேதிகள் மாறக் கூடியது என்பதால்கூட நாகேஷ் கலாகேந்திராவிற்கு அதே தேதிகளைக் கொடுத்திருக்கலாம். பின்னர் அவர் தேதியில் மாற்றம் ஏதும் இல்லாததால் அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்கூட அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஒரு நிலைமை என்றால் தயாரிப்பு நிர்வாகியைத் தனியாகக் கூப்பிட்டு நிலைமையை சொல்லியிருக்கலாமே. அதை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் டைரக்டரே இங்கே வந்திருக்கிறார் என்று சொல்கிறான் என்றால் இவனைக் கூப்பிட நான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறானா..?” – இப்படி பல சிந்தனைகள் பாலச்சந்தரின் மனதிற்குள் ஓடத் தொடங்கின.
“அப்போ இவ்வளவு காலம் எங்கள் இருவருக்குமிடையே இருந்த நட்புக்கு என்ன அர்த்தம்…?” என்று தனக்குள்ளேயே அவர் கேள்வி கேட்டுக் கொண்டார்.
ஒன்றும் புரியாத அந்த சூழ்நிலையில் மனோரமாவை அழைத்த அவர் “இன்று படப்பிடிப்பு ரத்து.. நீங்கள் கிளம்பலாம்..” என்றார். மனோரமா கிளம்பியபோது அவரை மீண்டும் அழைத்து “நாளைக்கு நிச்சயமாக படப்பிடிப்பு உண்டு” என்றார் கே.பி.
“நாளைக்கு படப்பிடிப்பு உண்டு” என்று சொன்னபோது அவரது குரலில் இருந்த தீர்மானம் பாலச்சந்தர் ஒரு முடிவெடுத்துவிட்டார் என்பதை மனோரமாவிற்குச் சொல்லாமல் சொல்லியது.
அடுத்து தயாரிப்பாளர்களை அழைத்த பாலச்சந்தர் “இனி இந்தப் படத்தில் நாகேஷ் இல்லை” என்றார். அதைக் கேட்ட அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
படப்பிடிப்பிற்கு வர முடியவில்லை என்றால் அதை இன்னும் கொஞ்சம் நாகரீகமாக சொல்லியிருக்கலாமே. அதை ஏன் நாகேஷ் செய்யவில்லை என்று தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “என்ன செய்வீர்களோ தெரியாது. தேங்காய் சீனிவாசன் எங்கே இருக்கிறார் என்று தேடிப் பிடியுங்கள். நாளை முதல் ஆறு நாளைக்கு ஷுட்டிங். வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. குறிப்பாக நாகேஷுக்கு சொல்லக் கூடாது” என்ற பாலச்சந்தர் அதோடு நிறுத்தவில்லை.
“நாகேஷை சமாதானம் செய்கின்ற வேலையை எல்லாம் யாரும் செய்யக் கூடாது. அதேமாதிரி சமாதானம்ன்னு சொல்லிகிட்டு என்னையும் யாரும் கூப்பிடக் கூடாது” என்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டு ஸ்டுடியோவைவிட்டு கிளம்பினார்.
இனி பாலச்சந்தர்-நாகேஷ் உறவு என்பது உடைந்த கண்ணாடி பாத்திரம்தான் என்பது தயாரிப்பாளர்களுக்கு தெளிவாகப் புரிந்தது.
மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டார் பாலச்சந்தர். அவர் வந்த பத்தாவது நிமிஷம் தேங்காய் சீனிவாசன் அங்கு வர படப்பிடிப்பு வேகமாக நடந்தது.
படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று சொன்ன நாகேஷ் இரண்டாம் நாள் ஸ்டுடியோவிற்கு போன் போட்டு “ஷுட்டிங் நடக்கிறதா?” என்று கேட்டார். பதில் சொன்னவர் “ஷுட்டிங் நடக்கிறது” என்று மட்டும் சொல்லி நிறுத்தவில்லை. முதல் நாள் நடந்தது முழுவதையும் அப்படியே சொன்னார்.
ஏறக்குறைய பத்தாண்டு காலம் நீடித்த நட்புக்கு குறுக்கே அழுத்தமான கோடு விழுந்துவிட்டது என்பது நாகேஷுக்கு புரிந்து போனது. அதற்கு பிறகு பாலச்சந்தருடன் அது குறித்து அவர் பேசவில்லை. பாலச்சந்தரும், நாகேஷைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.
அந்த மோதல் நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் பலர் எடுத்த தீவிர முயற்சிகள் காரணமாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அந்த ‘அபூர்வ ஜோடி’ மீண்டும் இணைந்தது.
நன்றி: டூரிங் டாக்கீஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,